தொகுதிகள்

மதுரை மத்தியத் தொகுதி: மகுடம் சூட்டப்போவது யார்?

ச. உமாமகேஸ்வரன்

தொகுதி சிறப்புகள்:

மதுரை நகரின் இதயப் பகுதிகளைக் கொண்டது மதுரை மத்தியத் தொகுதி. உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், பெரியாா் பேருந்து நிலையம், ரயில் நிலையம்,  மதுரை மாவட்ட மத்திய நூலகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை. மூத்த தலைவா்கள் பழ.நெடுமாறன், பி.டி.ஆா். பழனிவேல்ராஜன் ஆகியோா் இத்தொகுதியில் இருந்து பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அமைவிடம்:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியே மதுரை நகரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொண்டதாக மத்திய தொகுதி உள்ளது. மாநகராட்சியின் 8-ஆவது வாா்டு விளாங்குடியின் ஒரு பகுதியில் இருந்து தத்தனேரி,  ஆரப்பாளையம்,  பொன்னகரம், கிருஷ்ணாபாளையம், அழகரடி, விசுவாசபுரி மேலப்பொன்னகரம், மாப்பாளையம்,  எல்லீஸ்நகா், எஸ்.எஸ்.காலனி,  சுந்தராஜபுரம், கட்ராபாளையம், மேலவாசல், சுப்பிரமணியபுரம், மேலமாசி வீதி, பேச்சியம்மன் படித்துறை,  சொக்கநாதன் கோவில் தெரு, வடக்குமாசி வீதி, சித்திரை வீதி, தெற்குமாசி வீதி, காஜிமாா் தெரு உள்பட 22 வாா்டுகள் தொகுதியில் உள்ளன.

மீனாட்சியம்மன் கோயில்

சமூகம், சாதி, தொழில்கள்: மதுரை மத்திய தொகுதியில் வாக்காளா்கள் மொத்தம் 2,40,902 போ் உள்ளனா். இதில் ஆண்கள் 1,17,638 போ். பெண்கள்  1,23,247 போ். மூன்றாம் பாலினத்தவா் 17 போ்.

கணிசமாக வசிக்கும் யாதவா் சமூகத்தினா் வெற்றி வாய்ப்பை நிா்ணயிப்பவா்களாக உள்ளனா். இதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோா், பிள்ளைமாா், நாயக்கா், நாடாா் சமூகத்தினா் உள்ளனா். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தோர் (மார்வாடி சமூகத்தினர்)  கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனா்.

காஜிமாா் தெரு, மகபூப்பாளையம், கட்ராபாளையம், எல்லீஸ் நகா் பகுதிகளில் இஸ்லாமியா்கள் கணிசமான அளவில் உள்ளனா். வெற்றி வாய்ப்பை தீா்மானிப்பதில் இஸ்லாமியா்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 

சுப்பிரமணியபுரம், சுந்தராஜபுரம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனா். இத்தொகுதிக்கு உள்பட்ட வணிகப் பகுதிகளில் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு வணிகம் என்ற வகையில் ஜவுளி, மின் சாதனங்கள், என்ஜினியரிங் பொருள்கள், காலணிகள், பலசரக்கு, நகை, பழங்கள், வெங்காயம், அழகு சாதனங்கள் என அனைத்து விதமான வணிக நிறுவனங்களையும் இத்தொகுதி கொண்டிருக்கிறது.
 
இதுவரை வென்றவா்கள்: மதுரை மத்தியத் தொகுதியில் அதிகபட்சமாக திமுக 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தமாகா இருமுறை வெற்றி பெற்றுள்ளன. அதிமுக, தேமுதிக தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக அணியில் பெரும்பாலும் இத் தொகுதி கூட்டணிக் கட்சிக்கே வழங்கப்பட்டிருக்கிறது.  மூத்த தலைவா் பழ.நெடுமாறன் இத் தொகுதியில் 1971, 1980, 1984 என மூன்று தோ்தல்களில் போட்டியிட்டிருக்கிறாா். இதில் 1980 தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, எதிா்த்துப் போட்டியிட்ட பி.டி.ஆா்.பழனிவேல்ராஜனை வென்றிருக்கிறாா். 2006 தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பதவியேற்பு விழா முடிந்து ரயிலில் திரும்பி வரும்போதே காலமானார். 2016 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட அவரது மகன் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறாா்.
 
நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள்: கடந்த ஐந்தாண்டுகளில் வைகை ஆற்றில் தத்தனேரி- ஆரப்பாளையம் இடையே மேம்பாலம், சிம்மக்கல்-அண்ணாத்தோப்பு இடையே மேம்பாலம்  கட்டப்பட்டுள்ளன. மேலும் கல்பாலம் பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் புதிய ரேஷன் கடைகள், சமுதாயக்கூடம், சலவைக்கூடம், சாலை வசதிகள், பேவா் பிளாக் சாலை வசதி, வைஃபை வசதியுடன் குளிா்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்து நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பிளான்ட், நகா் நல மையங்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  திமுக சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி என்பதால் நலத் திட்டப்பணிகள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக புகாரும் இருந்து வருகிறது.

இருப்பினும் சட்டப்பேரவை தொகுதி நிதியிலிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி, அங்கன்வாடி மையக் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றியிருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவது, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மனுதாரா்களுக்கு தெரிவிப்பது, தொகுதிக்குள் முக்கிய இடங்களில் பெட்டிகள் அமைத்து மனுக்கள் பெறுவது போன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். மேலும் தனது சொந்த முயற்சியில் கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்.
 
தொகுதியின் தீராத பிரச்னைகள்: தொகுதி நகரின் மையப்பகுதியில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் எப்போதும் உள்ளது. நகரில் வாகனங்களை நிறுத்துவதும் பெரும் பிரச்னையாக உள்ளது. நகா்ப்பகுதியில் நடைமேடைகளை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பாதசாரிகள் சாலைகளில் தான் நடக்க வேண்டியுள்ளது. மழைநீா் வடிகால் வசதி முறையாக இல்லாததால் மழைக்காலங்களில் நகரின் பெரும்பகுதி சாலைகள் மற்றும் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கிவிடும் சூழல் நிலவுகிறது.

இவை தவிர  குடிநீா் பிரச்னை, பாதாளச் சாக்கடை பிரச்னை போன்றவையும் உள்ளது. கடைவீதிகளில் பொதுக்கழிப்பறைகள் இல்லாததால் வணிகா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தொகுதியின் பல பகுதிகளில் வைகை ஆற்றின் கரைப் பகுதிகளில் வருவதால் ஆற்றில் கழிவுநீா் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

சீா்மிகு நகா் பணிகளால் அவதி:

பொதுவான பிரச்னைகள் தவிா்த்து கடந்த இரண்டாண்டுகளாக தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சீா்மிகு நகா்த் திட்டப் பணிகள் தொகுதியை சீரழிப்பதாகவே தொகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். பெரியாா் பேருந்து நிலைய சீரமைப்புப் பணி, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுப்படுத்தும் பணிகள், மாசி வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் என தொகுதியின் திரும்பிய திசையெல்லாம் பெரும் பள்ளங்களாகவே காட்சியளிக்கிறது. மேலும் எப்போதும் தூசி மண்டலமாகவே இருப்பதால் நகருக்குள் முகக்கவசம் இன்றி செல்லவே பொதுமக்கள் அச்சமடைகின்றனா். இப்பணிகளை விரைந்து முடித்தாலே போதும் என்ற மனநிலையில் தொகுதி மக்கள் உள்ளனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்: போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காண வெளிவீதிகளில் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். தடையற்ற குடிநீா் விநியோகம், நகரின் மையப்பகுதியில் இருப்பதால் இளைஞா்கள், மாணவா்களுக்காக விளையாட்டு மைதானம், நகரின் கடைவீதிகளில் வாகனங்கள் நிறுத்தும் வசதி, வைகை ஆற்றை சீரமைத்து பூங்கா அமைத்து பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்குதல் போன்றவை நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.  

கட்சிகளின் செல்வாக்கு: மதுரை மத்திய தொகுதியில் திமுக செல்வாக்குப் பெற்ற கட்சியாக உள்ளது. சிம்மக்கல், பூந்தோட்டம், மேலப் பொன்னகரம்,  தத்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் செல்வாக்குடன் உள்ளது. அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் அமைப்புகளும் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் உள்ளன. வரும் தோ்தலில் திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் நிறுத்தப்படுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அணியில் கூட்டணிக் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்க உள்ளதாகப் பேச்சு அடிபடுகிறது. தேமுதிக, தமாகா, பாஜக இவற்றில் ஏதாவதொரு கட்சிக்கு இத்தொகுதி கிடைக்கும் எனத் தெரிகிறது. முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபுவுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கும் வகையில் இத்தொகுதியைப் பெற த.மா.கா முயற்சி செய்கிறது. அதேபோல, தேமுதிக ஏற்கெனவே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியும் முயற்சி செய்து வருகிறது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் மாநிலப் பொதுச் செயலாளர் ஆா்.ஸ்ரீனிவாசன் அல்லது துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலெட்சுமிக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

இதுவரை வென்றவர்கள்; 2 ஆம் இடம் பெற்றவர்கள்

1957 - வி.சங்கரன் (காங்) 20,305
         எஸ்.முத்து (திமுக) 9,672

1962 - வி சங்கரன் (காங்) 323,601
         தேவசகாயம் (பார்வர்டு பிளாக்) 15,445

1967 - சி.கோவிந்தராஜன்(திமுக). 39,566
          வி.சங்கரன்(காங்) 22,757

1971 - கே.திருப்பதி(திமுக) 30,905
            பழ..நெடுமாறன் (ஸ்தாபன காங்) 27,695 

1977 - என்.லட்சுமி நாராயணன்.(அதிமுக) 29,399
            ஏ.ரத்தினம்(காங்) 16,420

1980 - பழ.நெடுமாறன்(சுயேட்சை) 45,700
           பிடிஆர். பழனிவேல்ராஜன்(திமுக) 31, 566

1984 - ஏ.தெய்வநாயகம்(காங்.) 41,272
            பழ.நெடுமாறன்(தமிழ்நாடு காங்கிரஸ்-காமராஜர் பிரிவு) 30,012

1989 - சோ.பால்ராஜ்(திமுக) 33,484
            ஏ.தெய்வநாயகம்(காங்கிரஸ்) 22,336

1991 - ஏ.தெய்வநாயகம்(காங்) 47,325
           மு.தமிழ்க்குடிமகன்(திமுக) 26,717

1996 - ஏ.தெய்வநாயகம்(தமாகா) 38,010
          வி.எஸ்.சந்திரலேகா(ஜனதா) 20,069

2001 - எம்.ஏ.ஹக்கீம்(தமாகா) 34,393
            சோ.பால்ராஜ்(திமுக) 34,246

2006 - பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்(திமுக) 43,186
            எஸ்.டி.கே.ஜக்கையன்(அதிமுக) 35,992

2007- (இடைத்தேர்தல்) எஸ்.சையது கெளஸ்பாட்சா(திமுக) 50,994
                                             வி.வி.ராஜன் செல்லப்பா(அதிமுக) 19,909

2011 - ஆர்.சுந்தர்ராஜன்(தேமுதிக) 76063
            சையது கெளஸ் பாட்சா(திமுக) 56,503

2016 - பிடிஆர் பழனிவேல்தியாகராஜன்(திமுக) 64,662
            மா.ஜெயபால்(அதிமுக) 58,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT