தொகுதிகள்

அரூர்(தனி): வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சிறுபான்மை சமூகத்தினர்

சொ. மணியன்

தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரே தனித் தொகுதி அரூர். அரூர் சட்டப் பேரவைத் தொகுதி 1962-இல்  உருவாக்கப்பட்டது. 2011-இல், தொகுதி சீரமைப்பின்போது, அரூர் தொகுதியில் இடம்பெற்றிருந்த ஊத்தங்கரை தனியாகப் பிரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி) தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி சீரமைப்பில் மொரப்பூர் மற்றும் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடம்பெற்றிருந்த மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர் உள்ளிட்ட சில பகுதிகள் பிரிக்கப்பட்டு அரூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள்: 1, 24,543  
பெண்கள்: 1, 24,062  
மூன்றாம் பாலினம்: 14  
மொத்தம்: 2, 48,619.  
வாக்குச் சாவடிகள்: 299

அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

தொகுதியின் சிறப்பு

அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மையே பிரதானத் தொழிலாகும். இதைத் தவிர, கிரானைட் கற்கள், ஜல்லிக்கற்கள் உற்பத்தி, செங்கல் தயாரிப்பு, வேளாண்மை சார்ந்த சிறுதொழில்கள் நடைபெறுகின்றன.

அரூர் தொகுதியில் மொரப்பூர் ரயில் நிலையம், மொரப்பூர் சிங்காரவேலன் திருக்கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், டி.அம்மாபேட்டை ஸ்ரீசென்னியம்மன் திருக்கோயில், சித்தேரி மலைப்பகுதிகள், வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கம், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு, தென்பெண்ணையாறு, வாணியாறு, கல்லாறுகள் இடம்பெற்றுள்ளன.

அரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை.

 
நில அமைப்பு

அரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு கிழக்கே திருவண்ணாமலை மாவட்டமும், வடக்கே  கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியும் அமைந்துள்ளன. இந்தத் தொகுதியில் உயரமான காடுகள் மற்றும் சமதள நிலப்பரப்புகளுடன் கூடிய காடுகள் உள்ளன. அரூர் தொகுதியில் வடகிழக்கு மற்றும்  தென்மேற்கு பருவமழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவுகள் உண்டு.  
 
சமூக நிலவரம் 

அரூர் தொகுதியில் கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், அருந்ததியர், மலைவாழ் பழங்குடியின சமூக மக்கள் கூடுதலாக உள்ளனர். இதைத் தவிர, செட்டியார், முதலியார், முக்குலத்தோர், போயர், இதர பட்டியல் இனத்தவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

  அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்
மலைக்கோயில் தீர்த்தம்  

தொழில்கள்

வேளாண்மை சார்ந்த தொழில்கள் இந்தத் தொகுதியில் அதிகம். நெல், மஞ்சள், கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, தென்னை, வாழை, கேழ்வரகு, சோளம், தினை, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெறுகின்றன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதியில்லாத காரப்பாடி மலைக் கிராமத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. அரூரில் புதிதாக மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. சித்தேரி-மண்ணூர் வரையிலும் மலைக் கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரூ. 4.48 கோடியில் குமாரம்பட்டியில் அணைக்கட்டு புனரமைப்புப் பணிகள், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் புங்கனை புதூர் அருகே ரூ. 11 கோடியில் உயர்மட்டப் பாலம், வாணியாற்றில் பெரிய பண்ணை மடுவு கிராமத்தில் ரூ. 11 கோடியில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளன.

வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கம்

அரூரில் ரூ. 150 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டம், குடிமராமத்துப் பணிகள் திட்டம், கிராமப் பகுதிகளில் தார் சாலைகள், உயர் கோபுர மின் விளக்குகள், 7 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் இந்தத் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள் 

அரூரை அடுத்த தீர்த்தமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருத்தலம் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதேபோல, செனாக்கல் நீர்பாசனத் திட்டம், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும்  திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படவில்லை.  

தொகுதியின் பிரச்னைகள்

அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பெரிய அளவிலான ஆறுகள், நீர்தேக்கங்கள்  உள்ளிட்ட நீராதாரங்கள் அதிக அளவில் இல்லை. இதனால், இங்குள்ள விவசாயிகள் மானாவாரிப் பயிர்களையே அதிகம் பயிரிடுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தொழிற்சாலைகள் ஏதுமில்லை. இதனால், இந்தத் தொகுதி மக்கள் கோவை, திருப்பூர், பெங்களூரு, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். வெளியிடங்களுக்குச் சென்று நீண்ட நாள்கள் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதால், இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு

அரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வேளாண்மைப் பணிகள் பிரதானத் தொழிலாக இருப்பதால் நீர் மேலாண்மைக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவிரி ஆற்றில் தொடர்  மழைக்காலங்களில் ஓடும் உபரிநீரைப் பயன்படுத்தி, அரூர் வட்டாரப் பகுதியிலுள்ள அணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப வேண்டும்.

தென்பெண்ணையாறு, வாணியாறு, வரட்டாறு, கல்லாறுகளில்  கூடுதல் தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும். வள்ளிமதுரை வரட்டாறு அணை, அரூர் தொகுதியிலுள்ள ஏரிகளை குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கீழ் தூர்வார வேண்டும். கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

சித்தேரி மற்றும் கோட்டப்பட்டி மலைப் பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்தி சித்தேரி, கோட்டப்பட்டி, சிட்லிங் ஆகிய பகுதியில் ஏதேனும் ஒரு இடத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை விவசாயிகள் அதிகம் மேற்கொள்வதால், மொரப்பூரில் அரசு சார்பில் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலையைத் தொடங்க வேண்டும்.

அரூர் நகரிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க
தூய இருதய ஆண்டவர் ஆலயம்.

அரூர் தொகுதியின் மையப் பகுதியாக மொரப்பூர் ரயில் நிலையம் இருப்பதால், வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மொரப்பூரில் சரக்கு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தொகுதியில் ஏழை மக்கள் அதிகம் இருப்பதால், அரூர் அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அரூர் பெரிய ஏரியை தூர்வாரி படகு சவாரி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

மஞ்சள் உள்ளிட்ட வேளாண்மைப் பொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அரூரில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், சார்பு மகிளா நீதிமன்றம் தொடங்க வேண்டும்.
 
அரசியல் கட்சிகளின் செல்வாக்கு:

அரூர்  சட்டப்பேரவைத் தொகுதியில் கோட்டப்பட்டி, சித்தேரி, தீர்த்தமலை, சிட்லிங் பகுதிகள் அதிமுக செல்வாக்கு உள்ள பகுதிகளாகும். அரூர் சுற்றுவட்டாரப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. மொரப்பூர் வட்டாரப் பகுதிகளில் திமுகவிற்கும், கம்பைநல்லூர் வட்டாரப் பகுதியில்  பாட்டாளி மக்கள் கட்சிக்கும் செல்வாக்கு உள்ளது. 

அரூர் தொகுதியில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதற்கான கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

அரூர் தொகுதியில் 1962 முதல் 2016 வரையிலும் அதிமுக,  திமுக ஆகியவை தலா 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இதைத் தவிர, 2019-இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.  

அரூர் தொகுதி தனித் தொகுதி என்பதால் இந்தத் தொகுதியில் ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிகமாக உள்ளனர். இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக வன்னியர்கள், கொங்கு வேளாளர்கள் மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினர் உள்ளனர்.

இதுவரை வென்றவர்கள்; 2 ஆம் இடம் பெற்றவர்கள்:
   
1962: சி.மாணிக்கம் (திமுக) - 26,879
          மாரியப்பன் (காங்கிரஸ்)- 22,411 

1967: என்.தீர்த்தகிரி (காங்கிரஸ்) - 27,565
          ஆறுமுகம் (திமுக)- 27,017  

1971: டாக்டர் சின்னராஜி (திமுக) - 33,039
         பொன்னுசாமி (காங்கிரஸ்)- 24,159 

1977: எம்.அண்ணாமலை (மார்க்சிஸ்ட்) - 20,042
          கே.சுருட்டையன் (ஜனதா) - 12,470  

1980: சி.சபாபதி (அதிமுக) - 40, 009
          வி.நடேசன் (காங்கிரஸ்) - 27,401

1984: ஆர்.ராஜமாணிக்கம் (அதிமுக) - 60,106
          எம்.அண்ணாமலை (மார்க்சிஸ்ட்) - 27,799

1989: எம்.அண்ணாமலை (மார்க்சிஸ்ட்) - 28,324
          ஏ.அன்பழகன் (அதிமுக}ஜெ.அணி)- 26,447

1991: பி.அபரஞ்சி (காங்கிரஸ்) - 66,636
          பி.வி.கரியமால் (பாமக) -24,172 

1996: ஆர்.வேடம்மாள்(திமுக) -70,561
          ஜெ.நடேசன் (காங்கிரஸ்) -34,158

2001: வி.கிருஷ்ணமூர்த்தி (இந்திய கம்யூ.கட்சி) -70,433
          தடா பெரியசாமி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) -36,954

2006: பி.டில்லிபாபு (மார்க்சிஸ்ட்) -71,030
         கே.கோவிந்தசாமி(விடுதலை சிறுத்தைகள் கட்சி)  -57,337  

2011: பி.டில்லிபாபு (மார்க்சிஸ்ட்) -77, 703
         பொ.மு.நந்தன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) -51,200  

2016: ஆர்.முருகன் (அதிமுக) -64,568
          சா.ராஜேந்திரன் (திமுக) -53,147, 

மேலும் 2016 தேர்தலில் கி.கோவிந்தசாமி (வி.சி.க) -33,632, ச.முரளிசங்கர் (பாமக) -27,747, கே.சுருளிராஜன் (கொ.ம.தே.க) -3,500,   பெ.வேடியப்பன் (பாஜக) -1,948 வாக்குகள் பெற்றனர்.

2019 இடைத்தேர்தல்: அதிமுகவைச் சேர்ந்த சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.முருகன், தமிழக சட்டப்பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரூர்  தொகுதியில் 2019-இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட  கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: வே.சம்பத்குமார் (அதிமுக) -88,632, சி.கிருஷ்ணகுமார் (திமுக) -79,238, ஆர்.முருகன் (அ.ம.மு.க) -20,282, பி.திலீப் (நாம் தமிழர் கட்சி) - 4,566.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT