தொகுதிகள்

வேப்பனஅள்ளி: கூட்டணிக் கட்சிகள் போட்டியிட ஆர்வம்

எஸ்.கே ரவி

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக உருவானது வேப்பனஅள்ளி தொகுதி. ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளது இத்தொகுதி. விவசாயமே இத்தொகுதி மக்களின் பிரதான தொழில் ஆகும்.

வேப்பனஅள்ளி தொகுதியானது முற்றிலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. இந்தத் தொகுதியில் பேரூராட்சி, நகராட்சி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியில் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 36 ஊராட்சிகள், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 24 ஊராட்சிகள், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகள் என மொத்தம் 73 உள்ளாட்சிகளைக் கொண்டது. 

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,25,231; பெண்கள்: 1,20,050; மூன்றாம் பாலினத்தவர்: 23; மொத்தம்:  2,45,304.

சமூக நிலவரம்:

ஒசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய வட்டங்களைக் கொண்ட இந்த சட்டப் பேரவைத் தொகுதி மக்களின் பேசும் மொழியாக தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், ஆங்கிலம் ஆகியவை உள்ளன. இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசிக்கின்றனர். கௌடா, ரெட்டி சமூகத்தினரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரும் பரவலாக வசிக்கின்றனர். 

நிறைவேறாத கோரிக்கைகள்:

முற்றிலும் கிராமங்கள் சூழ்ந்துள்ள வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் போதிய சாலை வசதியும், பேருந்து போக்குவரத்து வசதியும் திருப்திகரமாக இல்லை. இங்கு வசிக்கும் மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்தாலும், பாசனத்துக்கான நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஏதும் இல்லாததால், வானம் பார்த்த பூமியாகவே காணப்படுகிறது. இதனால், இந்த மக்கள், விவசாயத்தை கைவிட்டு, ஒசூரில் உள்ள பல தொழிற்சாலைகளில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

போதிய போக்குவரத்து இல்லாததால், இந்தத் தொழிலாளர்கள் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் சூழல் உள்ளது. அதேபோல விவசாயிகள், தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய இருசக்கர வாகனத்திலேயே ஒசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி ஆகிய சந்தைகளுக்குப் பயணிக்கும் சூழல் உள்ளது. 

கடந்த திமுக ஆட்சியில் ஜீனூரில் 400 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இன்னும் கிடப்பில் உள்ளது. சிங்கிரிப்பள்ளி அணை திட்டம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் எந்தக் கல்லூரியோ, தொழிற்சாலையோ இல்லை. கல்விக்காகவும், வாழ்வாதாரத்தாக்கவும் இந்தப் பகுதி மக்கள் நீண்ட தூரம் பயணிக்கும் சூழல் உள்ளது. 

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முத்தாலி, அளியாளம், சுபகிரி ஆகிய 3 இடங்களில் சிறு தடுப்பணைகள் கட்டி, இந்த தொகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து வெளியேறும் யானைகள் வேப்பனஅள்ளி தொகுதியின் வழியே கடந்து செல்லும் யானை வழித்தடமாக உள்ளது. இதனால், இந்தப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில வனப்பகுதிகளுக்கு இனப்பெயர்ச்சிக்காக செல்லும் யானைகள், வேப்பனஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக செல்லும்போது, விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மனித உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

வேப்பனஅள்ளி அருகே ஆந்திர மாநிலமான குப்பத்தில் உள்ள ரயில் நிலையம், மற்றும் திராவிடப் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், போதிய போக்குவரத்து வசதி இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது. வேப்பனஅள்ளி தொகுதியில் ராயக்கோட்டையானது வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. தருமபுரி, ஒசூரை இணைக்கும் பகுதியாக ராயக்கோட்டை உள்ளது. ராயக்கோட்டையில் காய்கறிகள், மலர் சந்தை உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு காய்கறிகள், மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரயில் நிலையம் இருந்தாலும், முக்கிய விரைவு ரயில் நிற்பது இல்லை என்பது இந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

சார் பதிவாளர் அலுவலகம், வனச் சரக அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசு கட்டமைப்புகள் இத்தொகுதியில் உள்ளன. ராயக்கோட்டையை தரம் உயரத்த வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

வேப்பனஅள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். அதிக விபத்துகள் ஏற்படும் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரியில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும். சூளகிரி, வேப்பனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்டவையும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. 

அரசியல் நிலவரம்:

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் நடைபெற்ற இரு தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த டி.செங்குட்டுவனும், 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.முருகனும் வெற்றி பெற்றனர்.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த டி.செங்குட்டுவன், தேமுதிகவைச் சேர்ந்த வேட்பாளர் கந்தன்(எ)எஸ்.எம்.முருகேசனை வென்றார். டி.செங்குட்டுவன் 71,471 வாக்குகளும், கந்தன் (எ) எஸ்.எம்.முருகேசன் 63,867 வாக்குகளும் பெற்றனர்.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.முருகன், அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் ஏ.வி.எம்.மது (எ) ஹேம்நாத்தை வென்றார். இந்தத் தேர்தலில் பி.முருகன் 85,663 வாக்குகளும், ஏ.வி.எம்.மது (எ) ஹேம்நாத் 79,912 வாக்குகளும் பெற்றனர். 

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். தேர்தல் தேதி மற்றும் கூட்டணிகள் முடிவான பிறகே இந்தத் தொகுதியில் எந்தெந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவரும். 

கூட்டணி கட்சிகள் போட்டியிட ஆர்வம்

வேப்பனஅள்ளி தொகுதியில் இதுவரையில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ள நிலையிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என கருதப்படும் கட்சிகளான பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இத்தொகுதியில் போட்டியிட அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன.

அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

பாஜகவானது, அண்மையில் திமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் மாணவர் அணி அமைப்பாளரான அன்பரசன் போட்டியிடுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

வன்னியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள இந்தத் தொகுதியில் பாமகவும் போட்டியிட விரும்புகிறது. அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மது என்ற ஹேம்நாத், தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகிறார்.

திமுக கூட்டணியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ முருகன் மீண்டும் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் தளி எம்எல்ஏவுமான பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவான செங்குட்டுவன், திமுக விவசாய அணி மாநில துணைத் தலைவர் மதியழகன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அவர்களின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியினரும் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. அதிமுக, கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினால் தாங்கள் எளிதில் வெற்றி பெறலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதிமுக- திமுக இடையே கடும் போட்டி இருக்குமென அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலையில் அரசியல் கட்சியினர் வேப்பனஹள்ளி தொகுதியில் நடைபெறும் எருது ஓட்டம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு பண உதவிகளை செய்து மறைமுகமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT