தொகுதிகள்

சேலம் மேற்கு: வெற்றியைத் தீர்மானிக்கும் வன்னியர் சமூகத்தினர்

ஆர். ஆதித்தன்

தமிழகத்தில் சேலம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தமிழகமே திரும்பிப் பார்க்கும் மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்திலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலம், குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரை, ஐந்து சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான மேம்பாலம், திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர். ரவுண்டானா, கந்தம்பட்டி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மேம்பாலம் மற்றும் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து முக்கியப் பகுதிகளை அடக்கிய தொகுதியாக சேலம் மேற்கு தொகுதி உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் சொந்தக் கிராமமாக இருந்தாலும், அவர் தங்கியுள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் வீடு, சேலம் மேற்கு தொகுதியில் இடம் பெறுவது இத்தொகுதியின் சிறப்பம்சமாகும்.

வாக்காளர்கள் விவரம்: 

ஆண்கள்:  1,48,477.
பெண்கள்:  1,49,452.
இதரர்:  56.
மொத்தம்:  2,97,985.

தொகுதி அறிமுகம்: கடந்த 2011 தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் சேலம் -1, சேலம் -2, பனமரத்துப்பட்டி ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு,  சேலம் மேற்கு என தொகுதிகள் உருவாக்கப்பட்டன. ஓமலூர், சேலம் வட்டப் பகுதிகள் சேர்க்கப்பட்டு சேலம் மேற்கு என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.

சேலம் மேற்கு தொகுதியில் சேலம் மேற்கு வட்டத்தின் ஒரு பகுதியான சர்க்கார் கொல்லப்பட்டி, ஏ.அய்யம்பெருமாம்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி, சேலத்தாம்பட்டி கிராமங்கள் தளவாய்பட்டி, மல்லமூப்பம்பட்டி ஆகியவையும், சேலம் மாநகராட்சி வார்டு எண் 1 முதல் 5 வரையும், வார்டு எண் 17 முதல் 27 வரையும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர ஓமலூர் வட்டத்தில் முத்துநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, கோட்டகவுண்டம்பட்டி, ஆனைக்கவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, டி.கோனகாபாடி, அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி கிராமம் ஆகியவை மேற்குத் தொகுதி எல்லைக்குள் வருகின்றன. சேலம் மேற்குத் தொகுதியில் வன்னிய சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும், செட்டியார், நாயக்கர், முதலியார், தாழ்த்தப்பட்டவர்கள் என பலதரப்பினர் வசித்து வருகின்றனர். இத்தொகுதியில் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. அடுத்து கயிறு திரிக்கும் தொழில், விசைத்தறி, கைத்தறி தொழில், வெள்ளித் தொழில் கணிசமாக உள்ளது. கூலித் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்டது சேலம் மேற்கு தொகுதி.

அரசியல் நிலவரம்

சேலம் மேற்குத் தொகுதியாக உருவாக்கப்பட்ட பிறகு 2011-இல் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. சேலம் மேற்கு தொகுதியில் சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜி.வெங்கடாசலம் முதல்முறையாக போட்டியிட்டு 95,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் 68,274 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜி.வெங்கடாசலம் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். கடந்த 1967 முதல் இதுவரை 11 தேர்தல்களை எதிர்கொண்ட இத்தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இதுவரை நடந்த தேர்தல் விவரம் (ஆண்டு, வேட்பாளர், கட்சி மற்றும் பெற்ற வாக்குகள் விவரம்)

1967: டி.பொன்னுமலை, திமுக, 34,597.
1971: டி.பொன்னுமலை, திமுக, 35,832.
1977: என்.சுப்பராயன், அதிமுக, 27,676.
1980: க.ராஜாராம், அதிமுக, 44,218.
1984 : க.ராஜாராம், அதிமுக, 48,726.
1989: எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக, 29,805.
1991: க.ராஜாராம், அதிமுக, 70,025.
1996: எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக, 56,330.
2001: பி.விஜயலட்சுமி பழனிசாமி, அதிமுக, 78,642.
2006: ஆர்.ராஜேந்திரன், திமுக, 73,210.
2011: ஜி.வெங்கடாசலம், அதிமுக, 95,935.
2016: ஜி.வெங்கடாசலம், அதிமுக, 80755.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் பாஜக, தேமுதிக ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. பாமக இரண்டு தொகுதிகளைக் கேட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளதால், சேலம் மேற்கு, வீரபாண்டி அல்லது சங்ககிரி, ஓமலூர் ஆகிய தொகுதிகளைப் பெறுவதில் பாமக ஆர்வம் காட்டி வருகிறது. வன்னியர்கள் அதிகமுள்ள இந்த நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுக்க அதிமுக முன்வந்துள்ளது. 

அதேபோல ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றிட வேண்டும் என்ற வகையில், ஏற்கெனவே இருமுறை தொடர்ந்து எம்எல்ஏவாக உள்ள சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் ஜி.வெங்கடாசலமும் சேலம் மேற்கு தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் ஆர்வமாக உள்ளார்.

ஆனால் வெங்கடாசலத்துக்கு இருமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டதால், தங்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதால், முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்குத் தொகுதியைப் பொருத்தவரையில் வன்னியர்கள் கணிசமான அளவில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடுவதால் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருதி சேலம் மேற்குத் தொகுதியைக் குறி வைத்து களத்தில் இறங்கியுள்ளது.

கடந்த 2016 தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட இரா. அருள் 29,882 வாக்குகள் பெற்றார். 2016 தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் அதாவது 7,247 வாக்குகள் வித்தியாசத்திலே அதிமுக வெற்றி பெற்றது. அந்தவகையில், திமுகவும் இத்தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம்என்ற கணக்கில் களத்தில் குதித்துள்ளது. திமுகவில் மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகனும், முன்னாள் டி.என்.பி.எஸ்.சி தலைவரான காசிவிஸ்வநாதனின் மகனுமான மருத்துவர் தருண் இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

ஒருவேளை பாமகவிற்கு சேலம் மேற்கு அல்லது வீரபாண்டி ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கினால், அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள் போட்டியிடக்கூடும் என கூறப்படுகிறது.

முடிவுற்ற திட்டப் பணிகள்:

சேலம் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பாலம் நிறைந்த பகுதியாகக் காட்சியளிக்கிறது. பெங்களூரு, கேரளம், சென்னை, தென் மாவட்டங்களுக்குச் செல்ல முக்கியப் போக்குவரத்து மையமாக இருப்பதால் சேலம் நெடுஞ்சாலை முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்கள் சுமார் ரூ. 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.

போடிநாயக்கன்பட்டி ரயில்வே பாலம் சுமார் ரூ. 3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, அப்பகுதியைச் சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்தவர்களின் நூறாண்டுப் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. மெய்யனூர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக சீரற்ற மின்விநியோகம் இருந்து வந்தது. இதனால் ரூ. 38 கோடியில் 110 கே.வி. திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைத்து குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

கருக்கல்வாடியில் இருந்து மேட்டூர் செல்லும் ஒருவழிப் பாலம், இருவழிப் பாலமாக மாற்றப்பட்டது. அதேபோல சேலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட 5 பஞ்சாயத்துகளில் குடிநீர்ப் பிரச்னைக்கு ரூ. 98 கோடியில் தீர்வு காணப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் சுரங்கம் அதிக அளவில் உள்ளதால் பட்டா வழங்குவது நிறுத்தப்பட்டு வந்தது. நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்த 250 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது.

முத்துநாயக்கன்பட்டி - பூலா ஏரி வரத்துக் கால்வாய் தூர் வாரியதால் வறண்டு கிடந்த 9 ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் 1,500 முதல் 2,000 ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளது. எல்லாயூர் பகுதியில் சரபங்கா நதி குறுக்கே மேம்பாலம் கட்டி நூறாண்டுப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் சாக்கடைக் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ரூ.100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சேலத்தாம்பட்டி - சிவதாபுரம் பகுதியில் ஏரி நீர் நிரம்பி வெளியேறுவதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது ஏரி நீர் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்க ரூ. 6.5 கோடி மதிப்பில் தீர்வு காண ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர தீர்வு காணப்பட உள்ளது. மக்களுக்கு வாக்குறுதி அளித்த பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம் தெரிவித்தார்.

தொகுதிப் பிரச்னைகள்:

சேலம் ரயில் நிலையம் அருகே உள்ள அந்தோணிபுரம் ஓடைப் பகுதியில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் தேங்கும் நீரால் அப்பகுதியில் வசிக்கும் 300 குடும்பங்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்தப் பகுதியில் சாக்கடைக் கால்வாய் அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது.

சேலம் உருக்காலையில் காலியாக உள்ள நிலத்தில் சிறு, குறுந்தொழிற் பேட்டை அமைக்க வேண்டும் என்ற நெடுங்கால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில்  சாக்கடை பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.

அதேபோல சேலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா செயல்படாமல் உள்ளது. இந்தப் பூங்காவைச் செயல்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சேலம் மேற்கு தொகுதியில் கணிசமான அளவிற்கு கயிறு திரிக்கும் தொழிலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கென கூட்டுறவு சங்கம் தொடங்கி அதன் மூலம் வங்கிக் கடன் பெற்று தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கவனிக்கப்படாமல் உள்ளது.

சேலம் ரயில் நிலையம் எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்த இடமாக உள்ளது. வாகன நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கை.

முக்கியமாக கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருப்பது அத்தியாவசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதேபோல ஏற்காடு மலை அடிவாரத்தை ஒட்டிய கோரிமேட்டில் இருந்து உயிரியல் பூங்கா செல்லும் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதி வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. அப்பகுதியில் சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் தரமான தார் சாலை அமைத்திட வேண்டும்.

மாக்னசைட் சுரங்கம் அதிகமாக இருப்பதால் லாரிகள் அடிக்கடி சென்று வருவதால் விபத்துகள் ஏற்படா வண்ணம் சாலை விரிவாக்கம் செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT