தொகுதிகள்

சிதம்பரம்: தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - திமுக போட்டி

ஜி. சுந்தர் ராஜன்


கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி, பரங்கிப்பேட்டை பாபா கோயில் அடங்கிய சுற்றுலாத் தலமாகவும், கல்வித் தலமாகவும் சிதம்பரம் தொகுதி திகழ்கிறது. பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழுகின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் ஏற்கனவே புவனகிரியில் தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, மற்றும் கிள்ளை பேரூராட்சிகளையும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதையும், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7  ஊராட்சிகளையும் உள்ளடக்கி இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வந்த பாதை

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி தொடக்கத்தில் இரட்டை மெம்பர் தொகுதியாக இருந்தது. இதில் 1952-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அழகேசன், சுவாமி சகஜானந்தா ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1957-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.வாகீசன் பிள்ளையும், சுவாமி சகஜானந்தாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும், தாமாக ஒருமுறையும், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஒருமுறையும் வென்றுள்ளது. மறைந்த கே.ஆர்.கணபதி (அதிமுக) இருமுறையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி இருமுறையும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016 தேர்தலில் கே.ஏ.பாண்டியன் (அதிமுக) வெற்றி பெற்றார்.

இதுவரை வென்றவர்கள்

1952-வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)
1957-வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)
1962 - சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1967 - ஆர்.கனகசபை பிள்ளை  (காங்கிரஸ்)
1971 - பொன்.சொக்கலிங்கம் (திமுக)
1977 - துரை.கலியமூர்த்தி (திமுக)
1980 - கே.ஆர்.கனபதி (அதிமுக)
1984 - கே.ஆர்.கனபதி (அதிமுக)
1989 - துரை.கிருஷ்ணமூர்த்தி (திமுக)
1991 - கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்)
1996 - கே.எஸ்.அழகிரி (தமிழ் மாநில காங்கிரஸ்)
2001 - துரை.கி.சரவணன் (திமுக)
2006 - ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக)
2011- கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி)
2016 - கே.ஏ.பாண்டியன் (அதிமுக)

சுற்றுலாத் தலம்: சிதம்பரம் தொகுதியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், நடராஜர் ஆலயமும், பிச்சாவரம் சுற்றுலா மையமும் பிரதானமாக விளங்குகிறது. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர். எவ்வித தொழிற்சாலைகளும் இல்லாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள தொகுதியாக திகழ்கிறது. குறிப்பாக வன்னியர்கள் அதிகமாகவும், அதற்கடுத்து ஆதிதிராவிடர்கள் வாக்குகளும் உள்ளது. இவையல்லாமல் பரங்கிப்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள், மீனவர்கள் உள்ளிட்ட சமூகத்தினரின் வாக்குகள் கனிசமாக உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் பெராம்பட்டு - திட்டுகாட்டூர் இடையே ரூ. 20 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் தந்து அப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றி தந்த பெருமை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏக்கு உண்டு.

தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் கனிம அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.19.50 கோடி நிதி ஒதுக்கி மேற்கண்ட பெராம்பட்டு – திட்டுகாட்டூர் கிராமங்களை இணைக்கும் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் வேலை தற்போது நடைப்பெற்று வருகின்றது. மேலும், கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ முயற்சியால் சிதம்பரம் பகுதி வேளாண் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுதலை தடுக்கும் வகையில், திருக்கழிப்பாலை கிராமத்தில் தடுப்பணை அமைப்பதற்கு நில அளவை பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் தொகுதியின் ஆதிவராகநல்லூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. சிதம்பரம் தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் அகரநல்லூர் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடி மதிப்பில் கனிம வள நிதியில் இருந்து தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதுபோல் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் ரூ.15 கோடி மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சிதம்பரம் தொகுதி பிச்சாவரம் கிராமத்தில் கடல் நீர் உட்புகுதலைத் தடுக்க உப்பனார் வடிகாலின் குறுக்கே கடைமடையில் ரூ.15 கோடி மதிப்பில் ஒழுங்கியம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், சிதம்பரம் வட்டம் பெராம்பட்டு மற்றும் கீழகுண்டலபாடி கிராமத்திற்கு அருகே பழைய கொள்ளிடம் ஆறு சங்கமிக்கும் இடத்தில் ரூ. 43 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக ரெகுலெட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக போட்டியிட வாய்ப்புள்ளது. இத்தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த கே.ஏ.பாண்டியன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. 

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.ஏ.பாண்டியன் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை கொண்டு வந்துள்ளதால் அவர் மீது மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் எவ்வித அதிருப்தியும் இல்லை. அனைவரிடமும் நன்றாகப் பழகி, மக்களின் குறைகளை அறிந்து உடனடியாக போக்கியுள்ளார். குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்விக் கட்டணத்தை பெற்றுத் தந்துள்ளார்.

திமுக கூட்டணியில் கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மகன் எம்ஆர்கேபி. கதிரவன் போட்டியிட வாய்ப்புள்ளது.

இதேவேளையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திமுக மேலிடத்தை வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT