தொகுதிகள்

திருச்சி கிழக்கு: மலைக்கோட்டையில் வெற்றிக் கொடி யாருக்கு?

22nd Feb 2021 01:14 PM | ஆர். முருகன்

ADVERTISEMENT

திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையை உள்ளடக்கியது திருச்சி கிழக்கு தொகுதி. 

1951 ஆம் ஆண்டு முதல் திருச்சி-1 என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதியானது, 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு பணியால், திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றம் பெற்றது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சர்ச் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடை வீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலை உள்ளிட்டவை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளன.
மாநகராட்சியின் 8 முதல் 26 வார்டுகள் வரை, 33, 34,, 35ஆவது வார்டுகள் மற்றும் 37, 38, 43 என மொத்தம் 25 வார்டுகளைக் கொண்ட தொகுதி.

முழுமையாக மாநகரப் பகுதியாக இருப்பதால் தொகுதி மக்களுக்கான பிரச்னைகள் எந்த விதத்திலாவது எழுந்த வண்ணம் இருப்பது வாடிக்கை. பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதாரமின்மை என அடிப்படை பிரச்னைகளும் தாராளம்.

ADVERTISEMENT

நத்தர்ஷா பள்ளிவாசல்

இத்தொகுதியின் எல்லைகளில் ஒன்றான சிந்தாமணி பகுதியில் இருந்து, மாநகராட்சி நிர்வாகமே கழிவுநீரை காவிரி ஆற்றில் திறந்து விடுகிறது. பலமுறை மக்கள் போராட்டங்கள் நடத்தியும் இன்னும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. காந்திச் சந்தை இடமாற்றமும் கைகூட வில்லை. ரூ. 77 கோடியில் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட புதிய சந்தையும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

முன்பு திமுகவின் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியில் 1984, 1989-ல் மலர்மன்னன், 1996, 2001-ல் பரணிக்குமார், 2006-ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். இடையில் 1991-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி வெற்றி பெற்றார். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் வெற்றி பெற்று, அரசுக் கொறடாவாக பதவி கிடைத்தது.

பின்னர், 2016 இல் இத்தொகுதி தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் வசம் சென்றது. 2011, 2016 என அடுத்தடுத்து 2 முறை வெற்றிக்கனியை பறித்த அதிமுக, இந்த முறை தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்க்கலாம் எனவும் ஆலோசித்து வருகிறது. அதிமுக கூட்டணியில், திருவரங்கத்தை பாஜக-வுக்கு ஒதுக்காவிட்டால் திருச்சி கிழக்கு தொகுதியாவது தங்களுக்கு வேண்டும் என்ற வகையில் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனவேதான், அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜனும் தொகுதி மாற முயற்சித்து வருவதாகக் கூறுகின்றனர் அக்கட்சியினர்.

திருச்சி மெயின் கார்டு கேட்

திமுக கூட்டணியில், இந்தத் தொகுதியை எப்படியாவது காங்கிரஸ் தரப்புக்கு பெற்றுவிட வேண்டும் என்ற முயற்சியும் மேலோங்கியுள்ளது. கடந்த முறையும் இந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு ஜெரோம் ஆரோக்கியராஜ் 57,044 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். முன்னாள் அமைச்சரும், கட்சியின் முதன்மைச் செயலருமான கே.என். நேரு, கூட்டணிக்கு ஒதுக்குவதில் பக்கபலமாக இருந்து காய்களை நகர்த்தி வருகிறார். தொடக்கத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் களம் காணும் நோக்கில் திருவெறும்பூர் எம்எல்ஏ-வும், தொகுதிக்குள்பட்ட கட்சியின் மாவட்டத்தின் (திருச்சி தெற்கு)  பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்களை நகர்த்தி வந்தார். ஆனால், தொகுதிக்குள் நிலவும் கடும் போட்டியைக் கருத்தில் கண்டு திருவெறும்பூருக்கே செல்லவுள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இதுதொடர்பாக, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், எந்த தொகுதியாக இருந்தாலும் தலைமை எந்தத் தொகுதியை சுட்டிக்காட்டுகிறதோ அங்கு போட்டியிடுவேன் என்கிறார். இதுமட்டுமின்றி திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தை நடத்தி வரும் இனிகோ இருதயராஜும் இந்தத் தொகுதியை கேட்டு திமுகவிடம் முனைப்பு காட்டி வருகிறாராம். மதிமுகவுக்கு இந்த தொகுதி கிடைத்தால், கடந்த முறை போட்டியிட்ட கட்சியின் மகளிரணிச் செயலரும், மருத்துவருமான ரொகையா, மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

தொகுதியில் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை:

ஆண்- 1,23,531, பெண்- 1,30,853, மூன்றாம் பாலினம்-  43, மொத்தம்- 2,54,427.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT