தொகுதிகள்

நன்னிலம்: திமுக வேட்பாளர் தேர்வே தீர்மானிக்கும்

22nd Feb 2021 01:51 PM | ஆர். தெட்சிணாமூர்த்தி

ADVERTISEMENT

ஸ்ரீராமரும், சீதாதேவியும் இப்பகுதியில் உலா வந்தபோது, நல்ல நீரோட்டத்துடன், பசுமையாகக் காட்சியளித்த இப்பகுதிக்கு நல்ல நிலம் என்று சீதாதேவி பெயரிட்டதாகவும்,  பின்னர் அப்பெயர் நன்னிலமாக மாறியதாகவும் கூறப்படுகிறது. மதுவனம் என்ற புராணப் பெயரும் இவ்வூருக்கு விளங்குகிறது.

தேவாரப் பதிகம் பெற்ற நன்னிலம் அருள்மிகு மதுவனேசுவரர் கோயில், கல்விக் கடவுள் காட்சியளிக்கும் கூத்தனூர் சரஸ்வதி கோயில், லலிதா சகஸ்ரநாமம் உருவான திருமீயச்சூர் அருள்மிகு லலிதாம்பிகை உடனுறை அருள்மிகு மேகநாதசுவாமி கோயில், எம உபாதை போக்கும் ஶ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் கோயில், சமயக் குரவர்கள் சம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய திருவீழிமிழலை அருள்மிகு வீழிநாதேசுவரர் கோயில், மனிதமுக விநாயகர் காட்சியளிக்கும் திலதர்ப்பணபுரி ஆதி விநாயகர் திருக்கோயில், ராகு -கேது தோஷ நிவர்த்தியருளும் திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீசுவரர் கோயில் என ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கியது நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி.

வாக்காளர்கள்:  ஆண்கள் -   1,35,283. பெண்கள் -  1,36,159.  இதரர்- 24. மொத்த வாக்காளர்கள் - 2,71,466.

நில அமைப்பு: வயலும், வயலைச் சார்ந்த நிலப்பகுதியாக உள்ளது இத்தொகுதி. நன்னிலம், வலங்கைமான் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளும், குடவாசல் வட்டத்தின் ஒரு சில பகுதிகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை கோயில்

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள், தோற்றவர்கள்

1962 - தியாகராஜப் பிள்ளை (காங்கிரஸ்) : ராமையா முதலியார் (திமுக)
1967 - பி. ஜெயராஜ் (காங்கிரஸ்) : டி.பி. ராமச்சந்திரன் (மார்க்சிஸ்ட்)
1971 - ஏ. தேவேந்திரன் (திமுக) : வி.எஸ். அருணாசலம் (காங்கிரஸ்)
1977 - எம். மணிமாறன் (திமுக) : பி. ஜெயராஜ் (காங்கிரஸ்)
1980 - கலையரசன் (அதிமுக) : எம். மணிமாறன் (திமுக)
1984 - எம். மணிமாறன் (திமுக) : எஸ். அன்பரசன் (அதிமுக)
1989 - எம். மணிமாறன் (திமுக) : ஏ. கலையரசன் (அதிமுக)
1991 - கே. கோபால் (அதிமுக) : எம். மணிமாறன் (திமுக)
1996 - டாக்டர் பத்மா (தமாகா) : கே. கோபால் (அதிமுக)
2001 - செ.கு.தமிழரசன் (தமாகா - மூ) : பி. சக்திவேல் (திமுக)
2006 - பி. பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்ட்) : கே. அறிவானந்தம் (திமுக)
2011 - ஆர். காமராஜ் (அதிமுக) : ஆர். இளங்கோவன் (திமுக)
2016 - ஆர். காமராஜ் (அதிமுக) : எஸ்.எம்.பி. துரைவேலன் (காங்கிரஸ்)

சாதி, தொழில் அமைப்பு: இத்தொகுதி விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட தொகுதி. இங்கு, தலித்துகள் பெரும்பான்மை பெற்றுள்ளனர். வெள்ளாளர், வன்னியர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக தலித்துகள் உள்ளனர்.

கட்சிகளின் செல்வாக்கு: இத்தொகுதியில் திமுக மற்றும் அதிமுக சம பலத்தில் உள்ளன.  இத்தொகுதியில் இருமுறை வென்று, அமைச்சர் வாய்ப்புப் பெற்றவர் ஆர். காமராஜ். அவர் இத்தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருப்பது அதிமுகவுக்கு பலம். திமுகவும் இத்தொகுதியில் தனிப்பெரும் செல்வாக்குக் கொண்ட கட்சியாக உள்ளது.  

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: நன்னிலம், குடவாசலில் அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தேவையான பகுதிகளில் இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நன்னிலம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.  

தொகுதி பிரச்னை: சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலைப் பணியில், இத்தொகுதிக்கு உள்பட்ட முடிகொண்டான் பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் அகற்றப்படும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது மக்களிடையே பெரும் பிரச்னையாக உள்ளது.

எதிர்பார்ப்புகள்: சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலைப் பணியை குடியிருப்புகளுக்கு இடையூறு இல்லாமல் மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும், வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும், கரும்பு விவசாயத்தை மீட்டெடுக்க இப்பகுதியில் சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும், பூந்தோட்டம் - பேரளம் சுற்றுவட்டப் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.

போட்டியில் கட்சிகள்: இத்தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடியே போட்டியே ஏற்படும் எனக் கருதப்படுகிறது. முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, ஆதரவற்றோர் உதவித் தொகை என அரசின் நலத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடையச் செய்திருப்பது அமைச்சர் ஆர். காமராஜுக்கு பலம். இருப்பினும், தனிப்பெரும் செல்வாக்குக் கொண்ட கட்சியாக உள்ள திமுகவின் வேட்பாளர் தேர்வைப் பொறுத்தே இத்தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய இயலும்.

அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் இங்கு களம் கண்டாலும், அவை திராவிடக் கட்சிகள் அல்லது அவற்றின் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடியதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT