தொகுதிகள்

மயிலாடுதுறை: குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி

22nd Feb 2021 01:37 PM | ஞா. கிருஷ்ணகுமார்

ADVERTISEMENT

தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை மாவட்டம். ஆந்திரம் மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்தில், ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்ட 29 நகரப் பகுதிகளில் ஒன்று மயிலாடுதுறை.  

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 54 ஊராட்சிகளையும், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 ஊராட்சிகளையும், குத்தாலம், மணல்மேடு ஆகிய 2 பேரூராட்சிப் பகுதிகளையும், மயிலாடுதுறை நகராட்சியின் 36 வார்டு பகுதிகளையும் உள்ளடக்கியது மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி.

தொகுதியின் சிறப்பு: உமையன்னை பார்வதி தேவி மயிலுருவம் கொண்டு வழிபட்டத் தலம், இறைவன் சிவபெருமான் மயூரத்தாண்டவம் ஆடிய தலம், சிவபெருமான் நந்திதேவருக்கு ஞான உபதேசம் வழங்கிய தலம், பெருமாளின் அட்ட சயனத் தலங்களில் ஒன்றான தலம், கங்கை முதலான புண்ணிய நதிகள் காவிரியில் புனித நீராடி பாவங்களைப் போக்கிக் கொள்ளும் தலம் என பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்டது மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி.
 
நில அமைப்பு: இம்மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடற்கரை பகுதியைக் கொண்டிராத, வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியாக உள்ளது மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதி வடக்கே சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியாலும், கிழக்கு மற்றும் தெற்கில் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியாலும், மேற்கில் தஞ்சை மாவட்டத்துக்குள்பட்ட திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியாலும் வரையறுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மணிக்கூண்டு.

சாதி, தொழில்கள் - அமைப்பு: மயிலாடுதுறை தொகுதியில் தலித்துகள், வன்னியர்கள், இஸ்லாமியர்கள் - பெரும்பான்மை சமூகத்தினர். அடுத்தடுத்த நிலைகளில், வெள்ளாளர், தேவர், கிறிஸ்துவர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் வசிக்கின்றனர். இத்தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். இங்கு, சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதைத்தவிர, ஆலைக் கரும்பு மற்றும் பொங்கல் கரும்பு விவசாயமும் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்: 2 ஆம் இடம் பெற்றவர்கள்

1962 - ஜி. நாராயணசாமி நாயுடு (காங்கிரஸ்) : பழனிச்சாமி நாடார் (திமுக)
1967 - என். கிட்டப்பா (திமுக) : ஜி. நாராயணசாமி நாயுடு (காங்கிரஸ்)
1971 - என். கிட்டப்பா (திமுக) : எம்.ஆர். கிருஷ்ணப்பா (காங்கிரஸ்)
1977 - என். கிட்டப்பா (திமுக) : எம்.எம்.எஸ். அபுல்ஹசன் (காங்கிரஸ்)
1980 - என். கிட்டப்பா (திமுக) : தம்பி. பாலவேலாயுதம் (அதிமுக)
1984 - கி. சத்தியசீலன் (திமுக):தம்பி. பாலவேலாயுதம் (அதிமுக)-இடைத்தேர்தல்
1984 - எம். தங்கமணி (அதிமுக) : கி. சத்தியசீலன் (திமுக)
1989 - ஏ. செங்குட்டுவன் (திமுக) : எம்.எம்.எஸ். அபுல்ஹசன் (காங்கிரஸ்)
1991 - எம்.எம்.எஸ். அபுல்ஹசன் (காங்கிரஸ்) : ஏ. செங்குட்டுவன் (திமுக)
1996 - எம்.எம்.எஸ். அபுல்ஹசன் (தமாகா) : ராம. சிதம்பரம் (காங்கிரஸ்)
2001 - ஜெக. வீரபாண்டியன் (பாஜக) : ஆர். செல்வராஜ் (அதிமுக)
2006 - எஸ். ராஜ்குமார் (காங்கிரஸ்) : எம். மகாலிங்கம் (மதிமுக)
2011 - ஆர். அருள்செல்வன் (தேமுதிக) : எஸ். ராஜ்குமார் (காங்கிரஸ்)
2016 - வீ. ராதாகிருஷ்ணன் (அதிமுக) : க. அன்பழகன் (திமுக)

கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள்: மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான பிரசாரம், இத்தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருக்கும். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதும் அதிமுகவுக்கு சாதகம்.

திமுகவைப் பொருத்தவரை, இத்தொகுதி அக்கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட தொகுதிகளில் ஒன்று. ஆனால், 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டு காலம் இத்தொகுதியை திமுக தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது. இதனால்,  2016 ஆம் ஆண்டில் நேரடியாக திமுக இத்தொகுதியில் களம் கண்டு தோல்வியையே சந்தித்தது. இதன்மூலம், மயிலாடுதுறை தொகுதி திமுகவின் கோட்டை என்ற பிம்பம் தகர்ந்துள்ளது என்றே அறிய முடிகிறது.

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி

தற்போதைய நிலையில், மயிலாடுதுறையின் ஊரகப் பகுதிகளில் அதிமுகவும், நகரம் மற்றும் நகரம் சார்ந்த பகுதிகளில் திமுகவும் பலம் பொருந்திய கட்சிகளாக உள்ளன. திமுகவுடனான கூட்டணியில் பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் ஏற்கெனவே இத்தொகுதியில் வென்றிருந்தாலும், அந்தக் கட்சிகள் இங்கு தனிப் பெரும் செல்வாக்குக் கொண்டவையாக இல்லை.

1962 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற (ஒரு இடைத் தேர்தல் உள்பட) 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக - 6 முறையும்,  காங்கிரஸ் - 3 முறையும், அதிமுக - 2 முறையும், தமாகா, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
 
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பில் 246 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டியது, இங்கு டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடங்கியது, 20 வென்டிலேட்டர்கள் கருவி அமைத்தது, சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் (விரைவில் தொடங்கப்படவுள்ளது) அமைத்தது, காசநோய் கண்டறியும் சிகிச்சைப் பிரிவு தொடங்கியது குறிப்பிடத்தக்க மேம்பாட்டுத் திட்டங்களாகும்.

இவைத் தவிர, ரூ. 424 கோடியில் ஆதனூர் - குமாரமங்கலம் கதவணை திட்டம், மணல்மேட்டில் தீயணைப்பு நிலையம், மயிலாடுதுறை தருமபுரம் ஞானம்பிகை கல்லூரிக்கு ரூ. 5 கோடியில் புதிய கட்டடம், மூவலூர் பாலம், மணக்குடி - மன்னன்பந்தல் பாலம், கொற்கை பாலம் என பெரிய மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணிகள், மணல்மேட்டில் பேருந்து நிலையம், குத்தாலம் அரசு மருத்துவமனையை 24 மணி நேர செயல்பாடு கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தியது ஆகியன இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகள்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த ரயில் போக்குவரத்து 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தப் பாதையில் மீண்டும் ரயில் இயக்க வேண்டும் என தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், மத்திய அரசு 2016-17 ரயில்வே பட்ஜெட்டில் மயிலாடுதுற - தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரூ. 117 கோடியில் திட்டம் அறிவித்தது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கப்படாததால், இன்றுவரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமலேயே முடங்கியுள்ளது.

தொகுதியின் பிரச்னைகள்: கடந்த 2003 ஆம் ஆண்டில் ரூ. 42 கோடி மதிப்பில் மயிலாடுதுறை நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடக்கத்திலேயே பல்வேறு சர்ச்சைக்கு உள்ளான இத்திட்டம், தற்போதும் பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. ஆங்காங்கே உடையும் புதை சாக்கடை குழாய்களால் சாலையில் ஏற்படும் பெரும் பள்ளங்கள், பல்வேறு விபத்துகளுக்குக் காரணமாகி உள்ளன. இந்த உடைப்புகளால் மயிலாடுதுறை நகராட்சியின் சுகாதாரம் என்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, புதை சாக்கடை பிரச்னை இத்தொகுதியின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகவே உள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு: மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும்,  நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும், மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டும், விவசாயம் சார்ந்த தொகுதியான இங்கு, வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்,  தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பன மக்களின் பிரதான எதிர்பார்ப்புகள்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: அதிமுக கூட்டணியில் அதிமுக நேரடியாக களம் காண வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஏற்கெனவே வென்ற தொகுதி என்ற அடிப்படையில் பாஜக இத்தொகுதியைக் கேட்டுப் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் நேரடியாக களம் கண்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்ததால், மீண்டும் நேரடியாக போட்டியிட்டு வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும் என்பதில் திமுக முனைப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  இருப்பினும், திமுகவில் நிலவும் உள்கட்சி பூசல்களால், இத்தொகுதி கூட்டணி  கட்சிக்கு ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  இவைத் தவிர, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் போன்ற கட்சிகளும் இங்கு களம் காணும். ஆனால், இதில் எந்தக் கட்சியும் மும்முனை போட்டியை ஏற்படுத்துவது சந்தேகமே.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT