தொகுதிகள்

கோவில்பட்டி: அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வெற்றி தொடருமா?

22nd Feb 2021 12:28 PM | ஆர். சரவணமுத்து

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தின் 2 ஆவது பெரிய நகரம் கோவில்பட்டி. இத்தொகுதியில் தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள், பாய் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகள், கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் ஆகிய 3  பேரூராட்சிகள், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஆகிய 62 கிராம ஊராட்சிகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது.

தேவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தபடியாக எஸ்.சி., அதற்கு அடுத்ததாக நாயக்கர், நாடார் சமுதாயத்தினர் உள்ளனர். பிற சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்:

1952  முதல் 2016  வரை நடைபெற்ற 15  சட்டப்பேரவைத் தேர்தலில் 3  முறை காங்கிரஸ், ஒரு முறை சுயேச்சை, 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 4  முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.அழகர்சாமி 1967, 1971, 1977, 1980, 1984, 1989  ஆகிய 6  சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டார். இதில், 1984-ஆம் ஆண்டைத் தவிர மற்ற 5 தேர்தல்களிலும் வெற்றி பெற்று, கோவில்பட்டி தொகுதியில் 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 3 முறை அதிமுக வெற்றி பெற்றது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அமைச்சர் கடம்பூர் செ.ராஜு 73,007 வாக்குகளுடன் வெற்றி பெற்று, முதன்முதலாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடம்பூர் செ.ராஜு 64,514  வாக்குகளுடன் வெற்றி பெற்று, அமைச்சர் பொறுப்பை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் 64,086 வாக்குகளும், மதிமுக சார்பில் போட்டியிட்ட விநாயகா ரமேஷ் 28,512  வாக்குகளும் பெற்றிருந்தனர்.

கடம்பூர் செ.ராஜு, தனது எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணியனைவிட 428 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக என மும்முனைப் போட்டி நிலவியது. தற்போது அதிமுக, திமுக, அமமுக இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று கட்சிகளுக்கும் சம அளவிலான பலம் இருப்பதால் இந்தத் தொகுதியில் போட்டியிடுபவர்கள் சரியான போட்டியை சமாளிக்க வேண்டியது வரும்.

ADVERTISEMENT

அதிமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு இருமுறை தொடர்ந்து வெற்றி பெற்று, கோவில்பட்டி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். குறிப்பாக, கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டம், செயற்கை இழை ஹாக்கி மைதானம், அரசு கலைக் கல்லூரி, கயத்தாறை மையமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கியது, கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் மற்றும் சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, கோவில்பட்டி பிரதான சாலை விரிவாக்கப் பணி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ. 2 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோல உபயதாரர்கள் மூலம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சுவாமி மற்றும் அம்மன் சன்னதியில் ரூ. 4 கோடி மதிப்பில் தங்கக் கொடி மரம் மற்றும் சொர்ணமலை கதிரேசன் கோயில் முன்பு 12 அடி பீடம் மற்றும் 123 அடி உயரத்தில் முருகன் சிலை அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தீப்பெட்டித் தொழிலுக்கு 18  சதவீதமாக இருந்த சரக்கு சேவை வரி தற்போது 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க உறுதுணையாக செயல்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றவர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

அதிமுக சார்பில் தற்போதைய அமைச்சரான கடம்பூர் செ.ராஜு இருமுறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது முறையும் அவரே களம் இறங்கத் தயாராகி வருகிறார். அவருக்குப் போட்டியாக தொகுதியில் பெரிய அளவில் யாரும் இல்லாத நிலை உள்ளது. திமுக சார்பில், கடந்த முறை போட்டியிட்ட கழுகுமலை சுப்பிரமணியன், நகரச் செயலர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணனுக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளும் தொகுதியை பெற முயற்சி செய்து வருகின்றன.

அமமுக சார்பில் அக்கட்சியின் தென் மண்டல பொறுப்பாளரும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான மாணிக்கராஜா அல்லது சரத்குமார் கட்சிக் கூட்டணி ஏற்பட்டால் நடிகை ராதிகாவும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தி அமைச்சர் கடம்பூர் செ. ராஜூக்கு நெருக்கடி கொடுக்க அமமுக தலைமை முடிவு செய்து காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியினருக்கு இடையே தான் போட்டி நிலவும். மூன்றாவது அணி ஏதேனும் உருவானாலும் கூட, அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான போட்டி தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகள்:

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தனிக் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். நலிவடையும் தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். கோவில்பட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும். இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அறுவடை செய்த மானாவாரி பயிர்களை உரிய விலை கிடைக்கும் வகையில் பாதுகாத்து வைக்க போதிய குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும். கோவில்பட்டியில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவது போல, கடலை மிட்டாயை சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பாய் உற்பத்திக்கு தேவைப்படும் கோரைப்புல்லை அரசே கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு சர்க்குலர் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பிரிவிலும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனைப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். கோவில்பட்டியில் இருந்து உயர் சிகிச்சைக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைப்பதை தடுக்க தேவையான அனைத்து வசதிகளையும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தித்தர வேண்டும்.

மேலும், கழுகுமலையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். காவல்துறையின் எல்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும், கூடுதலாக காவலர்களை பணி நியமிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. இளையரசனேந்தல் குறுவட்டம், 2008 இல் இணைந்துவிட்டது. ஆனால், குறுவட்டத்துக்கு உள்பட்ட 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்காமல் குருவிகுளம் ஒன்றியத்திலேயே இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கு தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியத்தையே நாட வேண்டியுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்து வரும் கோவில்பட்டி ஒன்றியத்துடனே இளையரசனேந்தல் குறுவட்ட கிராமங்களை இணைக்க வேண்டும். அல்லது இளையரசனேந்தலை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. 

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை: (2021 ஜனவரி 21 - வரைவு வாக்காளர் பட்டியல் நிலவரப்படி)  ஆண்கள்  -  1,29,484, பெண்கள் -   1,35,385, திருநங்கைகள் -  31  என மொத்தம் 2,64,900  வாக்காளர்கள் உள்ளனர்.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT