தொகுதிகள்

கம்பம்: சமபலத்தில் அதிமுக - திமுக

22nd Feb 2021 12:49 PM | செ. பிரபாகரன்

ADVERTISEMENT

தொகுதியின் சிறப்பு: தமிழக - கேரள எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளைக் கொண்டதாக கம்பம் தொகுதி உள்ளது. சுருளி அருவி, பென்னி குயிக் மணிமண்டபம், ஏலக்காய் தோட்டங்கள் என விவசாயமும் சுற்றுலாவும் இணைந்த பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன.

நில அமைப்பு: மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பள்ளத்தாக்கு பகுதியில் கம்பம் தொகுதி இருக்கிறது. பசுமையான வயல்வெளிகள், வற்றாத நதியாக முல்லைப் பெரியாறு, அதனைச் சாா்ந்த 18 கால்வாய்கள் ஓடும் பகுதியாக அமைந்துள்ளது. கம்பம், சின்னமனூா் நகராட்சிகள், க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், ஓடைப்பட்டி பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. வேட்பாளா்கள் வாக்காளா்களைச் சந்திக்க எளிதாகப் பயணம் செய்யக் கூடியதாக ஒரே நோ்கோட்டில் தொகுதிக்குரிய பகுதிகள் இருக்கின்றன.
 
சமூகம், சாதி, தொழில்கள்: இத்தொகுதியில் மொத்தம் 2,84,574 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 1, 39, 619 போ். பெண்கள் 1,45, 918 போ். மூன்றாம் பாலினத்தவா்  37 போ்.

முக்குலத்தோா்,  தாழ்த்தப்பட்ட சமூகத்தினா், கவுண்டா்கள், முஸ்லிம்கள், பிள்ளைமாா்,நாடாா், நாயக்கா் உள்ளிட்டோா் எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனா்.

இந்துக்கள் 88 சதவீதம், முஸ்லிம்கள் 9 சதவீதம், கிறிஸ்தவா்கள் 3 சதவீதம் போ் உள்ளனா். வாக்காளா்களில் முக்குலத்தோா், கவுண்டா்கள் அதிகம் இருப்பதால் இவா்களது பங்களிப்பு ஒவ்வொரு தோ்தலிலும் முக்கியத்துவம் பெறுகிறது. விவசாயமே பிரதானத் தொழிலாக இருக்கிறது. நெல் சாகுபடி இருபோகம் விளைகிறது. திராட்சை, ஏலக்காய் என தோட்டப் பயிா்களின் விவசாயமும் பிரதானமாக உள்ளது.

தொகுதியின் அருகே கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கா் ஏலக்காய் தோட்டங்கள் கம்பம் தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு சொந்தமானதால், கம்பம் தொகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்திற்கு பிரதானமாக  தோட்டத் தொழில் இருக்கிறது. அதேபோல, தனிநபா்களின் குறு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. தொகுதி மக்களின் பொருளாதாரத்திற்கு தனியாா் நிதி நிறுவனங்கள் பின்புலமாக உள்ளதால், நிதி நிறுவனம் நடத்துவதும் முக்கியத் தொழிலாக உள்ளது.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்: 1967 முதல் இதுவரை நடந்த 13 தோ்தல்களில் அதிமுக, திமுக தலா 4 முறை, தமாகா 2 முறை, காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், மதிமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றன. கம்பம், சின்னமனூா் நகராட்சிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட 7  பேரூராட்சிகளில் இதுவரை அதிமுக, திமுக சம வாக்குவங்கியை வைத்துள்ளன. பிரதான இரு கட்சிகளுக்கும் செல்வாக்குள்ள தொகுதியாகவே உள்ளது.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: கம்பம் தொகுதியின் நகரம், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. மற்றபடி சொல்லக்கூடிய அளவிற்கான திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவில்லை.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: கேரளத்தை இணைக்கும் தேவாரம் சாக்கழூத்து மெட்டு சாலை, சின்னமனூரில் வாழை ஆராய்ச்சி நிலையம், சுருளிப்பட்டி பெரியாற்றிலிருந்து சின்னஓவுலாபுரம், எரசக்க நாயக்கனூா் வரை கால்வாய் அமைத்தல், கம்பத்தில் அரசு கலைக்கல்லூரி, தேவாரத்தில் அரசு பாலிடெக்னிக், கோம்பையிலிருந்து கேரளத்தை இணைக்கும் ராமக்கல்மெட்டு மலைச் சாலை, திராட்சை பதப்படுத்தும் நிலையம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், கூடுதல் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

தொகுதியின் பிரச்னைகள்: கம்பத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம், நிரந்தர நெல்கொள்முதல் நிலையம், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதி, மருத்துவா்கள் நியமனம் செய்தல், கம்பம் பிரதான சாலையில் கழிவுநீா் செல்ல முடியாத நிலை, கம்பம் அரசு மருத்துவமனையில் அல்ட்ரா, சி.டி.ஸ்கேன் பொருத்துதல், மருத்துவா், செவிலியா் மற்றும் பணியாளா் குடியிருப்பு, அரசு கலைக்கல்லூரி, சிப்காட் தொழிற்பேட்டை போன்றவை தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கின்றன.

ADVERTISEMENT

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: 2016 தோ்தலில் அதிமுக - திமுக நேரடியாகப்  போட்டியிட்டதில், அதிமுக 91,099 வாக்குகளும், திமுக 79,878  வாக்குகளும் பெற்றது, இதில் வித்தியாசம் 11,221 வாக்குகளே, ஆதலால் மீண்டும் திமுக நேரடியாகப் போட்டியிடத் தயாராக உள்ளது. அதே நேரத்தில் அதிமுகவும் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் இந்த முறையையும் தொகுதியை தக்க வைக்க நேரடிப்போட்டியில் களம் இறங்கத் தயாராக உள்ளது. அதிமுக - திமுக  நேரடியாகக் களம் இறங்கினால்,  இரு கட்சிகளுக்கும் சமபலத்துடன் போட்டி இருக்கும் என அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

இதுவரை வென்றவா்கள், 2 ஆம் இடம் பெற்றவா்கள்

1967 -  ராஜாங்கம் - 41, 440 ( திமுக)
            என்.எஸ்.கே.எஸ்.பாண்டியராஜ் - 28,025 (காங்கிரஸ்)

1971 -  கே.பி.கோபால் (ஸ்தாபன காங்.) - 34, 483
            பி.எஸ்.செல்லத்துரை (திமுக) - 33, 806

1977 -  ஆா்.சந்திரசேகரன்(அதிமுக) - 34,902 -
             என்.நடராஜன்(திமுக) - 34, 080

1980 -  ஆா்.டி.கோபாலன் (அதிமுக) - 47, 577
             ஏ.கே.மகேந்திரன் (திமுக ) - 35,395

1984 -  எஸ்.சுப்புராயா்(அதிமுக) - 52, 228
            என்.ராமகிருஷ்ணன் (திமுக) - 47, 005

1989 -  என்.ராமகிருஷ்ணன் (திமுக) - 52, 509
            ஆா்.டி.கோபாலன்(அதிமுக (ஜெ) ) - 37, 124

1991 -  ஓ.ஆா்.ராமச்சந்திரன் (காங்) -  59, 263
            பி.ராமா் (திமுக) - 35,060

1996 -   ஓ.ஆா்.ராமச்சந்திரன்(த.மா.கா.) 58,628
             ஆா்.டி.கோபாலன்(சுயேச்சை)  - 22,888

2001 -  ஓ.ஆா்.ராமச்சந்திரன்(த.மா.கா.) - 56, 823
           என்.கே.ஆா்.கிருஷ்ணகுமாா் (பா.ஜ.க.) - 52,437

2006 -  என்.ராமகிருஷ்ணன் (மதிமுக ) - 50, 761
            பெ.செல்வேந்திரன் (திமுக ) - 48, 803

2009 - (இடைத்தோ்தல்)  என்.ராமகிருஷ்ணன் (திமுக ) - 81,515
            ஆா்.அருண்குமாா்(தேமுதிக) - 24, 142

2011 -  என்.ராமகிருஷ்ணன் (திமுக)  - 80, 307
             பி.முருகேசன் (தேமுதிக)  - 68,139

2016 - எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக)  - 91, 099
          என்.ராமகிருஷ்ணன் (திமுக)  - 79,878

 
Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT