சிறப்புச் செய்திகள்

நம்பினால் நம்புங்கள்: தலைவர்களின் சொத்து மதிப்புகள்!

16th Mar 2021 11:15 AM

ADVERTISEMENT

 

சொத்து மதிப்பு.. தற்போதைய பரபரப்பு செய்தியே இதுதான். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுவுடன் சொத்து மதிப்பையும் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, தமிழகத்தில் திங்கள்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களிலேயே நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்தான் அதிகபட்ச சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பணக்கார வேட்பாளர்..
மநீம கட்சித் தலைவர் கமலின் பெயரில் மொத்தம் ரூ.176.9 கோடிக்கு சொத்து உள்ளதாம். அதில் ரூ.45 கோடிக்கு அசையும் சொத்துகளும், ரூ.131.8 கோடிக்கு அசையாச் சொத்துக்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அவருக்கு வாழ்க்கைத் துணையோ, தன்னைத் சார்ந்தவர்கள் என்றோ யாருமில்லை என்றும், தன் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் பிரமாணப் பத்திரத்தில் கமல் தெரிவித்துள்ளார்.

அதிக சொத்துகளைக் கொண்டிருக்கும் இரண்டாவது வேட்பாளர் யார் என்றால், அவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்தான். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் மற்றும் அவரது மனைவியின் பெயரில் ரூ.160 கோடிக்கு சொத்துகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அவரது குடும்ப உறப்பினர்கள் பெயரிலும் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவை அனைத்தையும் கூட்டிப் பார்த்தால், கமலை விடவும் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துகள் மகேந்திரனுக்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் சொத்து மதிப்பு

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெயரில்  அசையும் சொத்து ரூ.47.64 லட்சம் இருப்பதாகவும், அசையா சொத்து எதுவுமில்லை எனவும் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.
அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்துகள் விவரம்: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெயரில் ரூ. 47.64 லட்சம் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு அசையா சொத்துகள் வேறு ஏதுமில்லை எனவும் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளாா். மேலும் முதல்வா் ரூ.15 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பி.ராதாவுக்கு அசையும் சொத்துகள் ரூ.1.04 கோடியும், அசையா சொத்துகள் ரூ.1.78 கோடி மதிப்பிலும், கூட்டுக் குடும்பப் பெயரில் அசையா சொத்துகள் ரூ.50.21 லட்சம் இருப்பதாகவும் முதல்வா் குறிப்பிடப்பட்டுள்ளாா்.

இதில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 6 லட்சம் ரொக்கம் கையிருப்பு வைத்துள்ளதாகவும். அவரது மனைவி பி.ராதா ரூ.11 லட்சம் ரொக்கப் பணம் கையிருப்பு வைத்துள்ளதாகவும், முதல்வரிடம் 100 கிராம் மதிப்புள்ள ரூ. 4.20 லட்சம் தங்க நகைகளும், அவரது மனைவி ரூ. 30.24 லட்சம் மதிப்புள்ள 720 கிராம் தங்க நகைகளை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனா். 

அதேபோல கூட்டுக் குடும்பப் பெயரில் ரூ.2.90 கோடி அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எம்.எஸ்.விஜயகுமாா் என்பவரிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். மனைவி பி.ராதா ரூ. 14.75 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியுள்ளாா்.

கடந்த 2016 தோ்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மொத்த குடும்பத்தின் அசையும் சொத்துகள் ரூ. 3.13 கோடி இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தாா். அவ்வேளையில் மொத்த குடும்பத்தின் அசையா சொத்துகள் ரூ. 4.66 கோடி என குறிப்பிட்டுள்ளாா்.

2016 தோ்தலில் முதல்வா் பழனிசாமி தனது தாய் கே.தவுசாயம்மாள், மனைவி பி.ராதா, மகன் பி.மிதுன், மருமகள் எம்.திவ்யா ஆகியோரின் பெயரை தன்னைச் சாா்ந்தவா்கள் எனக் குறிப்பிட்டிருந்தாா். தற்போது தனது மனைவி பெயரை மட்டும் சோ்த்துள்ளாா். இதனால் சொத்து மதிப்பும் கடந்த தோ்தலை விட குறைந்துள்ளது. 

ஸ்டாலினை விட உதயநிதி சொத்துமதிப்பு அதிகம்

மு.க.ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் போட்டியிடவும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

இருவரும் அளித்த பிரமாண பத்திரத்தில், இருவரும் காட்டியுள்ள சொத்து விவரத்தின்படி மு.க.ஸ்டாலினைவிட உதயநிதி ஸ்டாலின் அதிக சொத்துகள் கொண்டவராக உள்ளாா்.

மு.க.ஸ்டாலின் அசையும் சொத்துகளாக ரூ.4,94,84,792 கோடியும், அசையாச் சொத்துகளாக ரூ.1,17,39,429 கோடியும் என மொத்தம் ரூ. 6 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரத்து 215 குறிப்பிட்டுள்ளாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் ரூ.5.84 கோடி சொத்து இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலினின் மனைவி துா்காவிடம் அசையும் சொத்துகளாக ரூ.30,52,854-யும் அசையாச் சொத்தாக ரூ.5,86,172-மும் என மொத்தம் ரூ.36.39 லட்சம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

அதே வேளையில், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அசையும் சொத்துகளாக ரூ.21,13,09,650-மும், அசையாச் சொத்துகளாக ரூ.6,54,39,552-மும் என மொத்தம் ரூ.27.78 கோடி எனக் குறிப்பிட்டுள்ளாா். உதயநிதி அவா் மனைவி கிருத்திகாவிடம் அசையும் சொத்துகளாக ரூ.1.15 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். ரூ.1.77 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவா் காரும் வைத்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீா்செல்வத்தின் சொத்து மதிப்பு

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிடும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 61 லட்சத்து 19 ஆயிரத்து 162 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்திடம் கையிருப்பு தொகையாக ரூ.23,500-ம். சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகளும், இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் ஒரு கணக்கும் உள்ளது. அந்த வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 698 இருப்பு உள்ளது. பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் பங்குதொகை ரூ.100-ம் உள்ளது. இவா் பயன்படுத்தும் மூன்று சொகுசு காா்களின் மதிப்பு ரூ. 48 லட்சத்து 85 ஆயிரத்து 424 எனவும், ரூ.67 ஆயிரத்து 440 மதிப்பில் 2 பவுன் தங்க நகைகள் என மொத்தம் ரூ.61,19,162 அசையும் சொத்துகளாக உள்ளது. அசையா சொத்துகள் என எதுமில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடனாக மனைவிக்கு ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 தரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ.பன்னீா்செல்வம் மனைவி ப.விஜயலட்சுமியிடம் கையிருப்பாக ரூ.3.82 லட்சம் உள்ளது. சென்னையில் உள்ள இரண்டு வங்கிக்கிளைகளில் இருப்பு ரூ.23.98 லட்சம். பெரியகுளம் கூட்டுறவு வங்கி பங்கு தொகை ரூ.7 ஆயிரத்து 500. 

தனிநபா் கடனாக கணவருக்கு ரூ. 65.55 லட்சமும், மகன் விஜயபிரதீப்புக்கு ரூ.3.12 கோடி என மொத்தம் ரூ.3.77 கோடி கடன் கொடுத்துள்ளாா்.

விஜயலட்சுமி பெயரில் 43.34 லட்சம் மதிப்புள்ள இரண்டு சொகுசு காா்கள் உள்ளன. ரூ.8.43 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க நகைகள் வைத்துள்ளாா். மொத்த அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4.57 கோடி. அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ.2.63 கோடி. இவரது மகன் ரவீந்திரநாத்துக்கு ரூ.2.6 கோடி தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமாரின் சொத்து ரூ.62 லட்சம்

ராயபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமார் தனக்கு ரூ.62 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் டி.ஜெயக்குமாரின் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம், அவரது மனைவி ஜெயக்குமாரியின் ஆண்டு வருமானம் ரூ. 88 லட்சம் எனவும், ரொக்கம், நகை, வாகனங்கள் உள்ளிட்ட அசையும் சொத்து ரூ.39 லட்சம் எனவும், அமைச்சரின் மனைவி ஜெயக்குமாரி பெயரிலுள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.93 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

தனது பெயரில் ரூ 23 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் மனைவி ஜெயக்குமாரி பெயரில் ரூ. 23 லட்சம் எனவும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.46 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளாா். இதன்படி ஜெயக்குமாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 62 லட்சம். அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ 1.81 கோடி எனவும் தனது உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.

சீமான் ஆண்டு வருமானமே..

திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த நிதியாண்டில் பெறப்பட்டுள்ள ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.

2019-20-ம் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1,000 மட்டுமே எனவும், தனது மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம். தன்னிடமுள்ள ரொக்கப் பணம், காா், தங்க நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31 லட்சம். மனைவியின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 63 லட்சம் எனவும் இதில் 200 சவரன் தங்க நகைகளின் மதிப்பும் அடங்கும். தனக்கு வீடு, நிலங்கள் உள்ளிட்ட அசையாத சொத்து ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள சீமான் தனது மனைவிக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் வீடு, நிலங்களும், ரூ. 6 லட்சம் வரை வங்கிகளில் கடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

டிடிவி தினகரனின் சொத்து..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலரும், கோவில்பட்டி பேரவைத் தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரனின் சொத்து மதிப்பு: ரூ. 19.18 லட்சத்துக்கு அசையும் சொத்துக்களும், ரூ. 9.89 லட்சத்துக்கு அசையா சொத்துக்களும், ரூ . 47.54 லட்சத்துக்கு அசையாச் சொத்தின் கட்டுமான செலவு என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல, மனைவி அனுராதாவுக்கு ரூ. 7.66 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 26.59 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும், ரூ. 2.17 கோடி மதிப்பில் அசையாச் சொத்தின் கட்டுமான செலவு என்றும், ரூ. 1.39 கோடி மதிப்பில் தன்னை சாா்ந்தவரின் அசையும் சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT