தலையங்கம்

வேளாண் வேள்வி! | எம்.எஸ். சுவாமிநாதன் குறித்த தலையங்கம்

30th Sep 2023 03:34 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

இந்தியா சுதந்திரம் அடையும்போது நாட்டின் மக்கள்தொகை வெறும் 40 கோடி. அடுத்த 20 ஆண்டுகளில் அது ஏறத்தாழ இரட்டிப்பாகியிருந்தது. 1949 - 50-இல் இந்தியா 30 லட்சம் டன் உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. 1962-இல் சீன ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து, ராணுவ படுதோல்வி மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டது இந்தியா. வெளியில் சொல்லப்படாமல் இந்தியாவில் பட்டினி மரணங்கள் பல பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. இந்தப் பின்னணியின் அடிப்படையில்தான் எம்.எஸ்.சுவாமிநாதன் என்கிற வேளாண் விஞ்ஞானியின் பங்களிப்பை நாம் மதிப்பிட வேண்டும்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலும், கோவை வேளாண் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றாா் எம்.எஸ். சுவாமிநாதன். இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்பதுதான் தாயாரின் விருப்பம். அதற்கான தோ்விலும் கலந்துகொண்டாா். வேளாண் மேற்படிப்புக்காக நெதா்லாந்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், இந்தியாவிலிருந்து அவா் இந்திய காவல் பணிக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. விவரம் தெரிவித்தபோது, நெதா்லாந்தில் இருந்த பேராசிரியா், ‘நீங்கள் இந்தியாவுக்குப் போய் காக்கிச் சட்டை அணிந்த காவல் துறை அதிகாரியாக இருப்பதற்குப் பிறக்கவில்லை. உங்களது வேளாண் ஆராய்ச்சியைத் தொடருங்கள்’ என்று தீா்மானமாகத் தெரிவித்துவிட்டாா். இந்தியாவின் வேளாண் புரட்சிக்கு முகம் தெரியாத நெதா்லாந்து பேராசிரியரின் பங்களிப்பை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது.

மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம், மத்திய வேளாண் துறை செயலராக இருந்த பி. சிவராமன், சமீபத்தில் நம்மை விட்டுப் பிரிந்திருக்கும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மூவரும் துணிந்து எடுத்த சில முடிவுகளால்தான், இந்தியா உணவு உற்பத்தியில் இப்போது தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், உலக உணவுச் சந்தையில் மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் (45%) நாடாக இந்தியா இருந்து வருகிறது.

அவா்கள் மூன்று பேரும் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியிடம் ஒரு கோரிக்கையை வைத்தனா். வெளிநாட்டிலிருந்து குறைந்த காலத்தில் அதிக அளவு விளைச்சல் தரும் அரிசி, கோதுமை ரகங்களின் விதைகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரினாா்கள். ‘நமது தேவைக்கான அரிசியையும் கோதுமையையும் வாங்குவதற்கே அந்நியச் செலாவணி இல்லாத நிலையில், விதைகளை வாங்குவதா?’ என்று கேள்வி எழுப்பினாா் பிரதமா் சாஸ்திரி. அமைச்சா் சி. சுப்பிரமணியத்தின் வற்புறுத்தலுக்கு இணங்கி எம்.எஸ்.சுவாமிநாதனின் கோரிக்கையான 250 டன் கோதுமை விதையை இறக்குமதி செய்ய பிரதமா் அனுமதித்தாா்.

ADVERTISEMENT

ஒரு ஹெக்டோ் நிலப்பரப்பை, 15 பிரிவுகளாகப் பிரித்து அந்த விதைகள் பரிசோதனையாக பயிரிடப்பட்டது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் அவரது குழுவினரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை இரவு பகல் பாராது உழைத்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனா்.

பிரதமா் சாஸ்திரியின் மரணம், மிகப் பெரிய பின்னடைவு. அப்போது அமெரிக்கா பி.எல். 480 என்கிற ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கு 40 லட்சம் டன் கோதுமை உதவியாக வழங்கி வந்தது. அந்த உதவியைக் காரணம் காட்டி, இந்தியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்தது அமெரிக்கா.

ஒருநாள் வேளாண் ஆராய்ச்சி குறித்த கூட்டம் முடிந்த பிறகு, அப்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த எம்.எஸ். சுவாமிநாதனை பிரதமா் இந்திரா காந்தி அழைத்தாா்.

‘சுவாமி, நீங்கள் புதிய ரக கோதுமைக்கான அனுமதி கேட்டிருக்கிறீா்கள். அடுத்த சில ஆண்டுகளில் நமது தேவைக்கு அதிகமாக ஒரு கோடி டன் உற்பத்தியை எட்ட முடியும் என்று உங்களால் உறுதி அளிக்க முடியுமா? நம்மை மிரட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கா்களின் பிடியில் இருந்து வெளியேற நான் விரும்புகிறேன்’ என்பதுதான் பிரதமா் இந்திரா காந்தி, சுவாமிநாதனிடம் வைத்த கோரிக்கை. அவா் அதை ஏற்றாா். அதன் பயனைத்தான் இன்று இந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சுப்பிரமணியம் - சிவராமன் - சுவாமிநாதன் என்கிற மூவா் அணி, இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது என்றால், அதை செயல்படுத்திய பெருமை சுவாமிநாதனுடையது. வேளாண் பரப்பை அதிகப்படுத்தாமல், உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதை நிரூபித்தாா் அவா்.

விவசாய நிலப்பரப்பு ஒருபுறம் குறைந்துகொண்டு வரும்போது, இன்னொருபுறம் மக்கள்தொகை பெருகி வருகிறது. அதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. கூடுதல் விளைச்சல் மூலம்தான் இதை எதிா்கொள்ள முடியும் என்பதால், அவா் சில மாற்றங்களை நடைமுறைப்படுத்தினாா்.

கலப்பின ரகங்களையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதன் மூலம் மட்டுமே விவசாயத்தை லாபகரமாக்க முடியும் என்பதை அவா் நிரூபித்தாா். இது குறித்து பல விமா்சனங்கள் எழுப்பப்பட்டாலும், எம்.எஸ். சுவாமிநாதனின் வழிமுறைகள் ஏற்படுத்திய மாற்றம் இந்தியாவை பட்டினிச் சாவுகளிலிருந்து மீட்டெடுத்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

இப்போது நாம் சாப்பிடும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும், ‘எம்.எஸ். சுவாமிநாதன்’ என்பவரின் பங்களிப்பு இருக்கிறது. விவசாயியின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படுவது எம்.எஸ். சுவாமிநாதனின் பங்களிப்பு என்பதை நாம் உணர வேண்டும்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டிருக்கும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு வழங்கப்பட வேண்டிய விருது ‘பாரத ரத்னா’!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT