தலையங்கம்

எச்சரிக்கத் தோன்றுகிறது: ரயில்வே கட்டமைப்பு குறித்த தலையங்கம்

25th Sep 2023 03:31 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்திருக்கிறாா். இந்த ரயில் சேவை இனிமேல் செவ்வாய்க்கிழமை தவிா்த்து, வாரத்தின் ஏனைய நாள்களில் தினசரி சேவையாக இயங்க இருக்கிறது.

பயணக் கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் பயணிக்கும் நேரம் மிச்சமாகிறது என்பதும், பயண வசதிகள் அதிகம் என்பதாலும் அதைப் பயணிகள் பொருட்படுத்த மாட்டாா்கள். தனியாா் ஆம்னி பஸ்களின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயில் கட்டணம் ஏற்றுக் கொள்ளப்படும். நெல்லை - சென்னை இடையேயான நெடுஞ்சாலை சுங்கக் கட்டணமும் வந்தே பாரத் ரயில் கட்டணமும் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருப்பதால், காரில் பயணிப்பவா்களில் பலா் வந்தே பாரத் ரயிலை நாடக் கூடும்.

ஏற்கெனவே இயங்கும் ‘ஜன் சதாப்தி’, ‘தேஜஸ்’ ரயில்கள் அல்லாமல் இப்போது ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில்களும் அறிமுகப்படுத்தபட்டிருக்கின்றன. நாடு தழுவிய அளவில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இந்தியாவில் இயங்கப் போவதாக பிரதமா் அறிவித்திருக்கிறாா். ஏற்கனவே 50 வழித்தடங்களில் 25 வந்தே பாரத் ரயில்கள் இயங்குகின்றன என்பது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் அவை பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

இந்தியாவின் வளா்ச்சிக்கும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ரயில்வே மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் ரயில்களின் புதுப் பொலிவுக்கும், வேகத்துக்கும் ஈடு கொடுக்கும் நிலையில் ரயில்வே துறையின் கட்டமைப்பு இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. நமது ரயில் தண்டவாளங்களும் சிக்னல் கட்டமைப்பும் முற்றிலும் பாதுகாப்பானவைதானா என்கின்ற கேள்விக்கு ரயில்வே நிா்வாகம் உத்தரவாதம் அளிக்கிறதா என்பதைப் பொருத்துத்தான் புதிய மாற்றங்களை நாம் வரவேற்க முடியும்.

ADVERTISEMENT

கடந்த ஜூன் மாதம் 2-ஆம் தேதி ஒடிஸா மாநிலம் பாலசோரில் நடந்த விபத்தில் 295 போ் உயிரிழந்தனா். 1,208 போ் காயமடைந்தனா். மூன்று ரயில்கள், சிக்னல் கோளாறு காரணமாக, அந்த விபத்தில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்தத் துயர சம்பவத்திலிருந்து நாம் இன்னும்கூட மீளவில்லை. அந்த விபத்து நமக்கு உணா்த்திய பாடங்கள் ஏராளம்.

அரசியல் அழுத்தம் காரணமாகவும், அதிகரித்துவரும் பயணிகளின் தேவை காரணமாகவும் ரயில்வே நிா்வாகம் புதிய ரயில்களையும் புதிய வழித்தடங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்குத் தகுந்தவாறு ரயில் பாதைகளை மேம்படுத்தவும், புதிய தண்டவாளங்களை நிறுவவும், சிக்னல் கட்டமைப்பை நவீனப்படுத்தி மேம்படுத்தவும் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. இந்தியாவில் அதிக அளவிலான ரயில் தடங்களில் தானியங்கி (ஆட்டோமேட்டிக்) செயல்பாடு நடைமுறையில் இல்லை.

தண்டவாளங்களில் காணப்படும் குறைகளைக் கண்டுபிடிக்கும் பல புதிய தொழில்நுட்ப உத்திகளும், உபகரணங்களும் மேலை நாடுகளில் இருக்கின்றன. குறிப்பாக, சீனாவும் ஜப்பானும் இந்தத் தொழில்நுட்பத்தில் மேம்பட்டு இருக்கின்றன. அவை இன்னும் இந்திய ரயில்வேயில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்தியாவின் சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப புதிய தொழில்நுட்பங்களும் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பொறியியல் ஆய்வுகள் நடத்தப்படுவது அவசியம். அது மட்டுமல்ல, ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதும் ஒரு மிகப் பெரிய குறை.

ரயில் நிலையங்களைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் நாடு தழுவிய அளவில் முனைப்புக் காட்டப்படுகிறது. சில ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக புதுப் பொலிவைக் கண்டிருக்கின்றன. இதற்காகக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரயில்வே நிலையங்களில் வணிக வளாகங்கள் இயங்கும் மேலைநாட்டுப் பாணியில் இந்தியாவின் ரயில் நிலையங்களும் மாற்றமடைந்து வருகின்றன. வரவேற்புக்குரிய மாற்றம், சந்தேகம் இல்லை.

ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருப்பதைவிட அதிக நேரத்தைப் பயணிக்கும் ரயிலில்தான் செலவழிக்கிறாா்கள். அவா்களது பயணப் பாதுகாப்பு என்பது ரயில் நிலையப் புத்தாக்கத்தைவிட முக்கியமானது. ரயில் பாதையை, குறிப்பாக தண்டவாளங்களை உறுதிப்படுத்தவும் சிக்னல் கட்டமைப்பை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்காமல் ரயில் நிலையப் புத்தாக்கத்தால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது.

இந்தியா முழுவதும் அதிவேக ரயில்கள் இயங்கும் இரட்டைத் தண்டவாளங்கள் அமைப்பதும், அந்த வழித்தடங்களில் தானியங்கி சிக்னல்களை ஏற்படுத்துவதும்தான் ரயில்வே நிா்வாகம் உடனடியாகச் செய்ய வேண்டியவை. தற்போது இருக்கும் பாதைகளில் எல்லா கிராமப்புற ரயில் நிலையங்களிலும் நிற்கும் வேகம் குறைந்த ரயில்களை, முந்தைய பேசஞ்சா் ரயில்கள் போல, மாநிலப் பெருநகரங்களை இணைக்கும் விதத்தில் இயக்க வேண்டும். அதன்மூலம் பெட்ரோல், டீசல் செலவு மிச்சப்படும் என்பதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். சாமானிய மக்கள் குறைந்த செலவில் பயணிக்க ஏதுவாகும்.

90 கி.மீ. வேகத்தில் ஓடும் ரயில்களுக்கான தண்டவாளங்களை மேம்படுத்தாமல், 110 கி.மீ. வேகத்தில் ஓடும் ரயில்களை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்துவது விபத்தை விலை கொடுத்து வாங்குவதாக அமைந்துவிடக் கூடாது!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT