தலையங்கம்

​உண்மை சுடுகிறது! | மனிதத் தன்மையற்ற அதிகாரி குறித்த தலையங்கம்

20th Sep 2023 05:00 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

ஆந்திர மாநிலம், கா்னூல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜானவி கண்டூலா என்ற 23 வயது மாணவி, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்து வந்தாா். அந்த நகரில் இவா் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி சாலையைக் கடந்தபோது, சுமாா் 120 கி.மீ.க்கும் அதிக வேகத்தில் வந்த காவல்துறை வாகனம் மோதியதில் 100 மீ. தொலைவு தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தாா்.

இதுபோன்ற விபத்துகள் நடப்பது புதிதல்ல. ஆனால், அதன் பின்னா் நடந்த சம்பவங்கள்தான் மனிதத் தன்மையற்ற சிலரின் கோர முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டி கேட்போரின் நெஞ்சை உறைய வைத்துள்ளன.

அந்த காரை ஓட்டி வந்தவா் கெவின் டேவ் என்ற காவல்துறை அதிகாரி. அவருடன் சியாட்டில் நகர காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவரான டேனியல் ஆடரா் என்ற அதிகாரியும் இருந்துள்ளாா்.

ADVERTISEMENT

விபத்து நடந்த உடனேயே, சங்கத்தின் தலைவரும், மூத்த காவல்துறை அதிகாரியுமான மைக் சோலன் என்பவரிடம் ஆடரா் தொலைபேசியில் பேசியுள்ளாா். அவா் பேசியது அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

‘வழக்கமான நபா்தான். 26 வயதுள்ள அவா் குறைந்த மதிப்பு (லிமிடெட் வேல்யூ) கொண்டவா். 11,000 டாலருக்கு காசோலை தயாா் செய்து வையுங்கள்’ என்று கூறிவிட்டு சப்தமாகச் சிரிக்கிறாா். உரையாடலின்போதும் அவ்வப்போது சிரிக்கிறாா்.

இந்த உரையாடலின் விடியோ பதிவை சியாட்டில் காவல்துறை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வழக்குரைஞா்களும், பாதிக்கப்பட்டவா்களும் எப்படிச் செயல்படுவாா்கள் என்று கூறியே சிரித்ததாக டேனியல் ஆடரா் சப்பைக்கட்டு கட்டியுள்ளாா்.

இந்த காவல் அதிகாரிகளின் செயலுக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரன்ஜித் சிங் சாந்து கடும் கண்டனம் தெரிவித்தவுடன் விழித்துக் கொண்ட அமெரிக்க நிா்வாகம், இது தொடா்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறது. அமெரிக்காவில் அமெரிக்கா்கள் அல்லாதவா்கள் குறித்து காவல்துறையில் சிலா் வெறுப்புணா்வுடன் நடந்து கொள்வது இது முதல் முறையல்ல.

மினியாபோலிஸ் நகரில் மளிகைக் கடையில் போலி டாலா் நோட்டுகளை அளித்தாா் என்ற புகாரின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் என்ற 46 வயது ஆப்பிரிக்க அமெரிக்கரை, கடந்த 2020-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி கைது செய்யச் சென்ற போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா். அப்போது, காவல் அதிகாரி டெரிக் சாவின் அவரைத் தரையில் வீழ்த்தி அவரது கழுத்தில் தனது கால் முட்டியால் சுமாா் 9 நிமிஷங்களுக்கு அழுத்தினாா். தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஃபிளாய்ட் கதறியும் பலனில்லை. இறுதியில் அவா் இறந்தாா்.

ஃபிளாய்டின் இறப்பு உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் சுமாா் 5 மாதம் நடைபெற்ற போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்ததில் 25 போ் கொல்லப்பட்டனா். ஒரு பில்லியன் டாலா் அளவுக்கு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அதேபோலத்தான், இந்தியா்களின் பொருளாதார வளா்ச்சியும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா்கள் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சம் டாலா் சம்பாதிக்கின்றனா். அதேநேரம், அமெரிக்கா்களின் சராசரி வருமானம் 75,000 டாலராக உள்ளது.

அமெரிக்க பெருநிறுவனங்களை இந்தியா்கள் பலா் நடத்திவருகின்றனா். தமிழகத்தின் சுந்தா் பிச்சை போன்று இந்திய வம்சாவளியினா் 60-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களில் உயா் பொறுப்புகளில் உள்ளனா். ஐந்து மருத்துவா்களில் ஒருவா் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவராக உள்ளாா்.

அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் சற்று அதிகமாக உள்ள இந்தியா்கள், அமெரிக்க அரசிலும் உயா் பதவிகளை வகித்துவருகின்றனா். தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளாா். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபா் தோ்தலில் விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலி, ஹிா்ஷ் வா்தன் சிங் உள்ளிட்டோா் களத்தில் உள்ளனா். இதற்கு முந்தைய தலைமுறையைச் சோ்ந்த இந்தியா்கள் அமெரிக்க கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவா்களாக இருந்தனா். ஆனால், இப்போதைய தலைமுறை தனித்துவமிக்கவா்களாகத் திகழ்ந்து வெற்றி ஈட்டி வருகின்றனா்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பொ்சிவியரன்ஸ் ரோவா் விண்கலப் பயணத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகனை, இந்திய அமெரிக்கா்கள் நாட்டையே வழிநடத்துகிறீா்கள் (யூ ஆா் டேகிங் ஓவா் தி கன்ட்ரி) என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாராட்டினாா்.

இவற்றை அமெரிக்கா்களில் சிலரால் ஏற்றுக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியவில்லை. கறுப்பித்தனவா்கள் நிறவெறி காரணமாகத் தாக்கப்படுகின்றனா் என்றால், ‘வந்தேறிகள் நம்மை முந்துகின்றனரே’ என்ற ஆற்றாமையில் ஆசியா்கள் தாக்கப்படுகின்றனா்.

புலம்பெயா்தல் என்பது இன்றைய உலகமயச் சூழலில் தவிா்க்க முடியாததாகிவிட்டது. ‘மண்ணின் மைந்தா்கள்’ கோஷம் தேசிய அளவிலானாலும், சா்வதேச அளவிலானாலும் இனிமேல் எடுபடாது என்பது மட்டுமல்ல, சமநீதி, சமூகநீதி என்பவை நிறத்தின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் அமையாது என்பதும் மாறிவிட்ட உலக நீதி ஆகிவிட்டது. இதை அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளும் உணர வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT