தலையங்கம்

தேவை மிருகநேயம்! | யானைகளின் மரணம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 குனீத் மோங்கா, கார்திகி கோன்சால்வேஸின் நாற்பது நிமிட தமிழ் குறும்படமான "தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தைக் களமாக்கி எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம், காயமடைந்த ஒரு யானைக் குட்டிக்கும் அதைக் காப்பாற்றி குணப்படுத்திய தம்பதிக்கும் இடையே ஏற்பட்ட பாசப்பிணைப்பை அடிப்படையாகக் கொண்டது.
 சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த அந்தக் குறும்படம் பாராட்டைப் பெறும் அதே வேளையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலும், யானைகளின் உயிரிழப்புகளும் கவனம் பெறாமல் இருப்பதை குறிப்பிடத் தோன்றுகிறது. சாதாரண ஊடகச் செய்திகளாக அவை மாறிவிட்டன. யானைகள் கொல்லப்படுவதும், ரயிலில் அடிபட்டு மரணிப்பதும் மக்களின் மனசாட்சியை உலுக்குவதாகத் தெரியவில்லை.
 வனப்பகுதிகளில் தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின் வேலிகள் அமைக்கப்படுகின்றன. கடந்த வாரம் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பகுதியில் உள்ள தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து மூன்று பெண் யானைகள் உயிரிழந்திருக்கின்றன. பயிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த யானைகளின் உயிர்களை பலிவாங்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாகத் தெரியவில்லை.
 கடந்த 6-ஆம் தேதி இரவு இரண்டு யானைக் குட்டிகள் உள்பட ஐந்து யானைகள் வனப்பகுதியில் அமைந்த மாரண்டஹள்ளியிலுள்ள தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டன. அங்கே இருந்த வேலிகளில் மின்சாரம் பாய்வது அறியாமல் நுழைந்த யானைகளில், இரண்டு குட்டிகள் மட்டுமே உயிர் பிழைத்தன. மூன்று பெண் யானைகளும் இறந்துவிட்டன. தோட்டத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
 இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்துக்குப் புதிதல்ல. சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார முள்வேலியால் ஒரு யானை உயிரிழந்தது. வடக்கு காவேரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட அந்த யானையின் மரணம், வெளியே தெரிய வந்திருக்காது. உயிரிழந்த யானையை தோட்ட உரிமையாளர் யாருக்கும் தெரியாமல் புதைத்திருக்கிறார். நல்லவேளையாக விவரம் கேள்விப்பட்டு வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானையின் மரணம் வெளிப்பட்டது.
 இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் நிகழ்வாக கருதிவிடக் கூடாது. யானைகள் மரணம் என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது. ரயில் விபத்து, மின்சாரம் தாக்குதல், விஷம் வைத்தல், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 494 யானைகளின் மரணம் பதிவாகி இருக்கிறது. பதிவாகாமல் மறைக்கப்பட்டவை எத்தனை என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த புள்ளிவிவரத்தை தாக்கல் செய்தது. யானைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. 2017 - 18 முதல் 2021 - 22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட யானை மரணங்கள் குறித்த புள்ளிவிவரம் அதில் தரப்பட்டிருந்தது. பெரும்பாலான யானைகள் மின்சாரம் தாக்கியதால் மரணமடைந்தன என்கிறது அந்த அறிக்கை.
 348 யானைகளின் உயிரிழப்புகளுக்குக் காரணம் மின்வேலிகள் என்றால், 80 யானைகளின் மரணங்கள் ரயில் மோதியதால் ஏற்பட்டவை. வனப் பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களின் வழியே ரயில்பாதைகள் அமைந்திருப்பதுதான் அதற்குக் காரணம். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் மோதல் தொடர்பாக 50 யானைகள் உயிரிழந்திருக்கின்றன. 41 யானைகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன. 25 யானைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கின்றன.
 இந்திய வனப்பகுதியில் ஏறத்தாழ 30,000 யானைகள் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதில் வயதான ஒரு யானை இறந்தாலும்கூட, அடுத்த தலைமுறையை வழிநடத்தும் அனுபவசாலி யானையை அதுசார்ந்த யானைக் கூட்டம் இழக்கிறது. பொதுவாக யானைகளில் வயதான யானைகள்தான் கூட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. மூத்த யானைகள் உயிரிழக்கும்போது, இளம் யானைகள் வழிகாட்டுதல் இல்லாததால் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. வழக்கமான வழித்தடங்கள் தெரியாமல் தடுமாறுகின்றன.
 யானைகளைப் பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இந்திய அரசு, இதில் கவனம் செலுத்தாமல் இல்லை. மாநில அரசுகளும், மின்பகிர்மான நிறுவனங்களும் யானைகள் மின்சாரத்தால் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தப்படுகின்றன. அதேபோல, யானைகளின் வழித்தடத்தில் குறுக்கிடாமல் ரயில்பாதைகள் அமைக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது.
 14 மாநிலங்களில் 32 யானைகள் வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கின்றன. பெரும்பாலான யானைகள் அடர்த்தியான வனங்களில்தான் வசிக்கின்றன. வளர்ச்சியும், விவசாயமும் வனப்பகுதிகளை ஆக்கிரமிக்கும்போது யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் யானைகள் வாழும் வனப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் நிறுவப்படும் மின்வேலிகளை தொடர்ந்து கண்காணித்து அகற்றுவதுதான் இந்த பிரச்னைக்கு ஓரளவு தீர்வாக இருக்கும்.
 ஒடிஸா மாநிலத்தில் யானைக் கூட்டங்களின் நகர்வுகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ஏனைய மாநிலங்களும் பின்பற்றலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT