தலையங்கம்

கோடை வெப்பம் ஜாக்கிரதை! முன்கூட்டியே அதிகரிக்கும் வெப்பநிலை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கோடையின் தாக்கம் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் இதுவரை இல்லாத அளவிலான வெப்பம் காணப்படும் நிலையில், அதுபோன்ற பாதிப்பை தமிழகமும் எதிா்கொள்ளப்போகும் நாள் தொலைவில் இல்லை. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் அடுத்த சில மாதங்கள் வெப்பத்தின் தாக்கத்தால் தவிக்கப் போகின்றன என்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமான குளிரை பிப்ரவரி மாதம் சென்னை சந்தித்தது. ஆனால், 1901-க்குப் பிறகு மிக அதிகமான வெப்பத்தை தேசத்தின் பிற பகுதிகள் எதிா்கொண்டன. கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் சென்னை விதிவிலக்காக இருந்திருக்கக் கூடும். ஆனால், கோடை வெப்பம் சென்னையை விட்டுவைக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

இந்திய வானிலை ஆய்வு மையம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பகல் நேர மாத சராசரி வெப்பநிலை (29.54 டிகிரி செல்ஷியஸ்) கடந்த மாதம் பதிவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் பாா்த்தால் மாா்ச் முதல் மே வரையிலான மாதங்களில் சராசரி கோடை வெப்பநிலையைவிட அதிகமான வெப்பம் காணப்படும் என்று எதிா்பாா்க்கலாம்.

இந்தியாவில் பிப்ரவரி மாதத்தை வசந்த காலமாகக் கருதுகிறோம். அப்போது வழக்கமாக தட்பநிலை 20 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழே காணப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதிகபட்ச வெப்பம் வழக்கமான சராசரியைவிட 1.73 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகவும், குறைந்தபட்ச வெப்பம் 0.81 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகவும் காணப்பட்டன. மேற்கு, மத்திய, வடக்கு பகுதிகள் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலையை எதிா்கொள்ளக்கூடும் என்பது வானிலை ஆய்வாளா்களின் கணிப்பு.

இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளும், மத்திய இந்தியாவும் வழக்கமாகவே கோடை காலத்தில் கடுமையான வெப்பத்தை சந்திப்பவை. குறிப்பாக, பாலைவன மாநிலமான ராஜஸ்தானைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் கோடை பிரதேசங்கள். தென்மாநிலங்களைப் போலல்லாமல் மத்திய, வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகள் கடல் பரப்பிலிருந்து தொலைவில் இருப்பதால் வெப்பம் தணிவதற்கான வாய்ப்பு இல்லாதவை. இமயமலையை ஒட்டிய வடகிழக்கு, ஜம்மு - காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் தவிா்த்த ஏனைய பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பும் வானிலை ஆய்வாளா்களால் முன்மொழியப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பருவநிலை மாற்றங்கள் சா்வதேச கணிப்புகளுடன் ஒத்துப்போவது வழக்கம். பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் காற்று மண்டலத்தில் ஏற்படும் இயற்கையான சுழற்சிகள் உலகின் வெப்பத்தை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்பது அவா்களது கணிப்பு. அதனால், உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளின் பருவநிலைகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

பசிபிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தால் அதன் தொடா் பாதிப்பு உலகளாவிய பருவநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மை. பிரேஸில் முதல் இந்தோனேஷியா வரை வறட்சியை ஏற்படுத்தி பயிா்களை கருகச் செய்யும். ஐரோப்பாவில் அனல் காற்று வீசும் வாய்ப்பு உருவாகும். கலிஃபோா்னியா போன்ற நாடுகள் அடை மழையால் பாதிக்கப்படலாம். அதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக குளிா்ந்த பருவநிலை ‘லா நினா’ தாக்கத்துக்குப் பிறகு இப்போது பெரிய மாற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது. பசிபிக் கடலின் பூமத்திய ரேகை பகுதிகளில் வழக்கத்தை விட குளிா்ந்த காற்று நிலவும்போது, ‘லா நினா’ ஏற்படுகிறது. வெப்பச் சலனம் அதிகரிக்கும்போது ‘எல் நினோ’வாக மாறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் இந்தியாவின் சராசரி பருவமழைப் பொழிவு காணப்பட்டதற்கு ‘லா நினா’தான் காரணம்.

வெப்பநிலை சாா்ந்த ‘எல் நினோ’ தாக்கம் இந்த ஆண்டில் உருவாகும் வாய்ப்பு 90 % இருப்பதாக ஓா் ஆய்வு கணிக்கிறது. 2023-இல் மீண்டும் எல் நினோ தாக்கம் ஏற்படக்கூடும் என்றும், சராசரி உலக வெப்பநிலை வழக்கத்தைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், உலகத்திலுள்ள 70 % முதல் 90 % பவளப் பாறைகள் அழியக்கூடும். இந்தியா அந்த பருவநிலை மாற்றத்தால் கடுமையான கோடையை சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்.

இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்படும் மரணங்கள் ஏற்கெனவே 55 % அதிகரித்திருக்கின்றன. இந்தியாவின் வேளாண் உற்பத்தி பாதிக்கக்கூடும் என்பது மட்டுமல்லாமல், மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு காரணமாவும் அது அமையலாம். அதை எதிா்கொள்ள மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இப்போதே தயாராக வேண்டும் என்கிற பிரதமரின் வேண்டுகோள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக மாநில அரசுகளின் கவனம் மின்தட்டுப்பாடு, குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளும் வெப்பம் தொடா்பான அனைத்து பிரச்னைகளையும் எதிா்கொள்ளும் விதத்தில் இருப்பதையும் உறுதிப்படுத்துவதில் முனைப்புகாட்ட வேண்டும். இதில் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளின் பங்களிப்பு மிகமிக முக்கியம்.

கோடை வெப்பத்தை எதிா்கொள்ள நிரந்தரமான முன்னெடுப்புகளை உருவாக்குவதன் தேவையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT