தலையங்கம்

தலிபானிஸ சவால்!: பெண் கல்வியின் மீது தலிபான் ஆட்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்

ஆசிரியர்

 
ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியவுடன் தலிபான்கள் தொடங்கிய பெண் கல்வி மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6-ஆம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்கத் தடை, பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு பெண்கள் செல்வதற்குத் தடை போன்ற உத்தரவுகளை தலிபான் ஆட்சியாளர்கள் ஏற்கெனவே பிறப்பித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் கல்வித் துறையிலிருந்து சர்வதேச அமைப்புகள் ஒரு மாதத்தில் வெளியேற வேண்டுமென அந்த நாட்டின் கல்வித் துறை பிறப்பித்துள்ள புதிய உத்தரவு பெண் கல்வி மீதான போராகவே பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் உள்ளூர் பெண்கள் பணியாற்றத் தடை விதித்து கடந்த டிசம்பரில் தலிபான்கள் உத்தரவிட்டனர். அவர்கள் பணியிடங்களில் ஹிஜாப் அணிவதில்லை என்ற காரணத்தைக் கூறி அந்தத் தடையை தலிபான்கள் விதித்தனர். அந்தத் தடை கடந்த ஏப்ரலில் ஐ.நா. அலுவலகத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கல்வித் துறையிலிருந்து சர்வதேச அமைப்புகள் வெளியேற வேண்டுமெனவும், தங்களது கல்விப் பணிகளை உள்ளூர் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் தலிபான் ஆட்சியாளர்கள் பிறப்பித்துள்ள உத்தரவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "வாட்ஸ்ஆப்' குரல் குறிப்பு வழியாக ஆப்கன் கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே ஐ.நா. அலுவலகத்தில் உள்ளூர் பெண்கள் பணியாற்றத் தடை விதிக்கும் உத்தரவும் "வாட்ஸ்ஆப்' வழியாகவே வந்தது என்பதால், இதை எளிதாக கடந்து செல்ல முடியாது என்பது சர்வதேச தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் கவலை.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இஸ்லாமிய அமைப்பாகவே இருந்தாலும் இந்தத் தடை பொருந்தும் என அந்த வாட்ஸ்ஆப் உத்தரவு தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் கல்வித் துறையில் முன்னணி சேவை நிறுவனமாக ஐ.நா.வுக்கான குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் கருதப்படுகிறது. யுனிசெஃப்பின் கல்விச் சேவையில் 5,000 பெண்கள் உள்பட 17,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் மிகவும் தொலைதூர, கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்க நாடு தழுவிய திட்டத்தை யுனிசெஃப் செயல்படுத்தி வருகிறது. தலிபான்களின் புதிய உத்தரவால் 3 லட்சம் பெண் குழந்தைகள் உள்ளிட்ட 5 லட்சம் குழந்தைகள் தரமான கல்வி கற்பது பாதிக்கப்படும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. விரிவான ஆய்வு மேற்கொள்ளாமல் அரசு சாரா உள்ளூர் நிறுவனங்களிடம் கல்வித் துறை சார்ந்த பணிகளை ஒப்படைப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

2001-ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் படையெடுத்த அமெரிக்கா, 
தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு அங்கு அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டது. 2001-இல் மாணவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்த நிலையில், 2018}இல் ஒரு கோடியாக அதிகரித்தது. அனைத்து கல்வி நிலைகளிலும் 10 மடங்கு வளர்ச்சியைக் கண்டது. ஆரம்பப் பள்ளிகளில் 2001}இல் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்த நிலையில், 2018}இல் 25 லட்சமாக அதிகரித்தது. 2021, ஆகஸ்ட் நிலவரப்படி ஆரம்பக் கல்வி பயிலும் 10 மாணவர்களில் நால்வர் பெண் குழந்தைகள்.

இதேபோல உயர் கல்வியிலும் இந்தக் காலங்களில் மாணவியரின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்தது. 2001-இல் உயர் கல்வி பயின்ற மாணவியர் எண்ணிக்கை 5,000-ஆக இருந்த நிலையில், 2021}இல் அந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்தது. கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம் 2001-இல் 17 சதவீதமாக இருந்த நிலையில், 2021-இல் 30 சதவீதமாக அதிகரித்தது.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதில், பெண் கல்வியைத் தடுக்க மாட்டோம் என்பது முக்கியமானது. ஆனால், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தலிபான்கள் நடந்துகொள்வது அந்த நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கே வழிவகுக்கும். அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குச் சென்ற ஐ.நா. உயர்நிலைக் குழு, பெண்களுக்கு எதிரான தலிபான் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை நேரடியாகவே கண்டித்தது.

குழுவுக்கு தலைமை வகித்த ஐ.நா. துணைப் பொதுச்செயலர் அமினா முகமது, "ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளால் அவர்கள் வீடுகளிலேயே அடைத்து வைக்கப்படுகின்றனர். ஏற்கெனவே மனிதாபிமான நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான இந்த அடக்குமுறைகள், அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்தும்' என எச்சரிக்கை விடுத்தார்.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு ஆண்டுகளில் எந்த நாடும் தலிபான் ஆட்சியாளர்களை அங்கீகரிக்கவில்லை. 

இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய சர்வதேச உறவை சீர்செய்யும் முயற்சியில் ஒருபக்கம் ஈடுபட்டுக் கொண்டே, மறுபக்கம் உள்நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது தலிபான் அரசு.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கியம் என்பதில் ஐயமில்லை. பெண் கல்வியின் மீது தலிபான் ஆட்சியாளர்கள் நடத்தும் தாக்குதல் ஏற்புடையதல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT