தலையங்கம்

பருவமழையும் பாசனப் பரப்பும்!

1st Jun 2023 03:37 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 பருவமழையின் பொழிவைச் சார்ந்துதான் உணவுப் பொருள்களின் விலை அமையும் என்பதால், அது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தட்டுப்பாடு எதுவும் பெரிய அளவில் ஏற்படாது என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி.
 இதற்கிடையில் வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சில புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. குறுநீர் பாசனத் திட்டம் இந்திய விவசாயத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருப்பது தெரிகிறது. முதல் முறையாக இந்தியாவின் விவசாயப் பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிக்கு பாசன வசதி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது 2022-23-க்கான அரசின் புள்ளிவிவரத்திலிருந்து தெரிகிறது.
 இந்தியாவில், பயிரிடப்படும் 14.1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் 7.3 கோடி ஹெக்டேர், அதாவது 52% விவசாய நிலங்கள் 2022-23-இல் பாசன வசதி பெறுகின்றன. 2014-இல் 41%-ஆக இருந்தது இப்போது 52%-ஆக உயர்ந்திருப்பதாக நீதிஆயோக் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 தெலங்கானா, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள அதிக அளவிலான கோடை வெப்பமும், அவ்வப்போது பெறப்படும் பருவமழையும் காணப்படும் வறண்ட நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதால் பயனடைந்திருக்கிறது. நீர்ப்பாசனம் இல்லாத பகுதிகள் பாசன வசதி பெறப்பட்டு, மானாவாரி விவசாயம் முறைப்படுத்தப்பட்டு சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
 இந்தியாவில் கிடைக்கும் நீரில் 80% விவசாயத்திற்குத்தான் பயன்படுகிறது. அதாவது, 700 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான தண்ணீர் நாள்தோறும் விவசாயத்திற்கு தேவைப்படுகிறது. காரீஃப் பருவ பயிர்களானாலும், கோடை நடவுப் பயிர்களானாலும் அவை பெரும்பாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெறப்படும் பருவமழையைச் சார்ந்துதான் இருக்கின்றன. பருவமழை பொய்த்தால் வேளாண் வருமானம் பாதிக்கப்படும்; மகசூலும் பாதிக்கப்படும்.
 வேளாண் வருமானம் பாதிக்கப்படும்போது விவசாயிகள் கடனாளிகளாவது மட்டுமல்லாமல், கிராமப்புறப் பொருளாதாரமும் பாதிப்பை எதிர்கொள்கிறது. மகசூல் குறைந்தால், தானிய உற்பத்தி குறைந்து உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கிறது.
 அதனால், நகர்ப்புற மக்கள் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். நம்நாடு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்றாலும், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் மக்கள் மத்தியில் காணப்படும் பணப்புழக்கம்தான் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை உந்துசக்தி.
 "நபார்ட்' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 2018-19-இல் ரூ. 5,000 கோடியில் குறும்பாசன நிதி உருவாக்கி மாநிலங்களுக்கு வழங்க முற்பட்டது. அதன்படி, இதுவரை ரூ. 12,696 கோடி மத்திய அரசின் உதவி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, பல மாநிலங்களில் நிலத்தடி நீரை மட்டும் நம்பியிராமல், குறும்பாசனம், சொட்டு நீர் பாசனம் போன்றவை ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றன.
 2017-18 முதல் பாசனப் பரப்பை அதிகரிக்க ஆறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ரூ. 11,505 கோடியில் "பிரதமர் க்ரிஷி சிஞ்சாயி யோஜனா' (பிஎம்கேஎஸ்ஒய்) அறிவிக்கப்பட்டது. நிலத்தடி நீர் திட்டம் ரூ. 787 கோடி, சிறுபாசனத் திட்டம் ரூ.4,000 கோடி உள்ளிட்டவை அந்த ஆறு திட்டங்களில் அடங்கும்.
 பாசனக் கட்டமைப்பு விரிவாக்கத் திட்டத்தில், குறும்பாசனத் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தெளிப்பு பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனம் சுமார் 80 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பரப்பில் நிறுவப்பட்டிருக்கின்றன. நாட்டிலுள்ள மொத்த பாசனப் பரப்பில் 40% கால்வாய்கள் மூலம் பயன்பெறுகின்றன. ஏனைய 60% நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றன.
 பாசனப் பரப்பு அதிகரித்திருக்கிறது என்பது ஒருபுறம் வரவேற்புக்குரிய வளர்ச்சியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டம் பல மாநிலங்களில் மிகக் கடுமையாகக் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான பாசன முறையில் 60% மட்டுமே பயன் கிடைக்கிறது என்றால், சொட்டு நீர் பாசன முறையில் 90% பயனை எதிர்பார்க்கலாம்.
 இந்தியாவில் சொட்டு நீர் பாசனம் மூலம் ஆறு கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலின் உதவியுடன் சொட்டு நீர் பாசன நிலப்பரப்பை அதிகரிக்கும் முயற்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக முனைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக, காய்கனி விவசாயம் முற்றிலுமாக சொட்டு நீர் பாசன முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
 என்னதான் முயற்சி செய்தாலும் 60% நிலப்பரப்புக்குத்தான் இந்தியாவில் பாசன வசதியை உறுதிப்படுத்த முடியும். 40% விவசாயப் பரப்பு பருவமழையை நம்பித்தான் இருக்கிறது. அந்தப் பகுதிகளில் கால்வாய் பாசனமோ, நிலத்தடி நீர் பாசனமோ சாத்தியமில்லை என்கிற நிலை காணப்படுகிறது.
 பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பை அதிகமாக எதிர்கொள்வது விவசாயம்தான். உலக வெப்பமயமாதல், பருவம் தவறிய மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. பாசனத்திற்கு மழையை மட்டுமே எதிர்பார்க்காமல் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறுநீர் பாசனம், சிறுதானிய விவசாயம், நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவைதான் அதை எதிர்கொள்வதற்கான தீர்வாக இருக்க முடியும்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT