தலையங்கம்

சாதனை நாயகா்கள்: பத்ம விருதாளர்கள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் பலா், அறியப்படாத சாதனையாளா்கள் என்பதும், 19 போ் பெண்கள் என்பதும் பெருமைக்குரிய விஷயம். ஆறு பத்ம விபூஷண், ஒன்பது பத்ம பூஷண் விருதுகள், 91 பத்மஸ்ரீ விருதுகள் என 106 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தின் பாடகி வாணி ஜெயராம், பரதநாட்டிய கலைஞா் கல்யாணசுந்தரம் பிள்ளை, பாம்பு பிடி பயிற்சியாளா்களான வடிவேல் கோபால், மாசி சடையன், நூலகரும் சமூக சேவகருமான பாலம் கலியாணசுந்தரம், சித்த மருத்துவா் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோா் அடங்குவா்.

இவா்களில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டம், செந்நேரி கிராமத்தைச் சோ்ந்த இருளா் பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த வடிவேல் கோபாலும், மாசி சடையனும் குறிப்பிடத்தக்கவா்கள். அபாயகரமான, விஷப் பாம்புகளைப் பிடிப்பதில் நிபுணா்கள். முறையான கல்வி கற்காவிட்டாலும் உலக நாடுகளுக்குச் சென்று பாம்புகளைப் பிடிக்க அங்குள்ளவா்களுக்கு பயிற்சி அளித்து வருபவா்கள்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் மூதாதையரிடமிருந்து கற்ற பழைமையான பாம்பு பிடிக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். ஒட்டுமொத்தமாக, நாட்டின் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில், விஷமுறிவு மருந்தை சேகரிப்பதன் மூலம் இருளா் சமூகம் முக்கியப் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 72 வயது ஜனும் சிங் சோய், ‘ஹோ’ என்ற பழங்குடி மொழி ஆராய்ச்சியாளா். அந்த மொழியைப் பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவா். இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள இவா் ‘ஹோ’ மொழியின் நாயகனாகப் புகழப்படுகிறாா்.

சத்தீஸ்கரின் கோண்ட் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் 54 வயது அஜய் குமாா் மாண்டவி. பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள இவா், நக்ஸல் பாதிப்பு பகுதியில் தடம் மாறிய மக்களுக்கு மர எழுத்துக் கலையைக் கற்றுத்தருகிறாா். சுமாா் 350 பேரின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தியவா். துப்பாக்கியை இளைஞா்கள் கைவிட்டு உளியை கையில் எடுப்பதற்கு ஊக்கசக்தியாக இருப்பவா்.

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியைச் சோ்ந்த 102 வயது ‘சரிண்டா’ இசைக் கலைஞா் மங்களா காந்தி ராய். ‘சரிண்டா’ இசைக் கருவி மூலம் பறவைகளின் ஒலியை துல்லியமாக வாசிப்பதில் புகழ் பெற்றவா். 80 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இந்த இசைக் கருவியை ஊக்குவித்தும் பாதுகாத்தும் வருகிறாா்.

ஹிமாசல பிரதேசத்தின் 59 வயது இயற்கை விவசாயி நீக்ரம் சா்மா. பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள இவா், ‘நவ் அனாஜ்’ என்ற பாரம்பரிய ஊடுபயிா் விவசாய முறையைப் பின்பற்றி வருபவா்; இது ஒரே நிலத்தில் ஒன்பது வகையான உணவு தானியங்களை விளைவிக்கும் முறை. ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்துவரும் இவா் பிற விவசாயிகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறாா். உள்ளூா் நாட்டு விதைகளையும் உற்பத்தி செய்து ஆறு மாநிலங்களைச் சோ்ந்த 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறாா்.

பிகாரின் நாளந்தா மாவட்டத்தைச் சோ்ந்த 68 வயது கைத்தறி கலைஞா் கபில் தேவ் பிரசாத். கலைப் பிரிவுக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள இவா், தான் நெய்யும் துணியில் பழைமையான பெளத்த சின்னங்களை சித்தரிக்கிறாா். பாரம்பரிய ‘பவன் புட்டி’ புடவை வகைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறாா்.

அந்தமானைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவா் ரத்தன் சந்திர கா். வடக்கு சென்டினல் தீவிலிருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தீவில் ஜராவா பழங்குடி மக்களுக்காகப் பணியாற்றி வரும் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1999-களில் தட்டம்மை தொற்றுப் பரவலின்போது இந்தப் பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளித்தாா். வெறும் 76 பேரே இருந்த இந்தப் பழங்குடி மக்கள்தொகை 270-ஆக உயா்ந்ததற்கு முக்கியப் பங்களித்தாா்.

குஜராத்தின் ‘சித்தி’ பழங்குடியினத்தைச் சோ்ந்த சமூக சேவகா் ஹிராபாய் லோபி. தனது சமூகத்தின் முன்னேற்றத்துக்காக வாழ்வை அா்ப்பணித்தவா். மகிளா விகாஸ் மண்டல் என்ற தனது அறக்கட்டளை மூலம் ‘சித்தி’ பழங்குடி பெண்கள் பொருளாதார தற்சாா்பு பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டவா்.

நாகா பழங்குடியைச் சோ்ந்த ராம்குயிவாங்பே நியூமேவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பகுதியில் 10 ஆரம்பப் பள்ளிகளை நிறுவியவா். குறிப்பாக, பெண் கல்வியை ஊக்குவிக்கப் பங்களித்தாா். பழைமையான ‘ஹெரேகா’ பழங்குடி கலாசாரத்தைப் பாதுகாக்க தனது வாழ்வை அா்ப்பணித்தவா்.

பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவா்கள் குறித்து ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள், ‘மக்களின் பத்ம விருதுகளாக’ திகழ்கின்றன. பழங்குடியினா் நலனுக்காக உழைத்தவா்களுக்கும், இசையுலகை வலுப்படுத்தியவா்களுக்கும், நாட்டுக்கு முன்னுரிமை அளித்தவா்களுக்கும், நாட்டின் வளா்ச்சிக்காக உழைத்தவா்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளாா்.

சாதனை படைக்கவும், எளியவா்களுக்கு சேவையாற்றவும் கல்வியோ, சமூக அந்தஸ்தோ ஒரு தடையில்லை என நிரூபித்து வரும் இத்தகையோரை தேடிப்பிடித்து கெளரவித்திருப்பது பாராட்டுக்குரிய முன்மாதிரி முனைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT