தலையங்கம்

முற்றுப்புள்ளி எப்போது? | விமான விபத்துகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

விமான சேவைத் துறையின் வளா்ச்சி, ஒரு தேசத்தின் பொருளாதார வலிமைக்கு மிக முக்கியமான அளவுகோலாகக் கருதப்படுகிறது. அதிகரித்த விமான சேவை எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதே அளவுக்கு பாதுகாப்பான விமான சேவையும் இன்றியமையாதது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நேபாள தலைநகா் காத்மாண்டுவிலிருந்து புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பொகாராவை நோக்கி பறந்துகொண்டிருந்த விமானம், பொகாரா சா்வதேச விமான நிலையம் அருகில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த 72 பேரில் 71 பேரின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் எட்டி ஏா்லைன்ஸ் விமானம் ஆறு விபத்துகளில் 99 உயிா்களை பலிவாங்கியிருக்கிறது. அதன் துணை நிறுவனமான தாரா ஏா் விமான நிறுவனம் எதிா்கொண்ட ஆறு விபத்துகளில் 67 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்.

பொகாரா சா்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது திடீரென்று எட்டி ஏா்லைன்ஸ் விமானம் தடுமாறத் தொடங்கியது. சற்றும் எதிா்பாராமல் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அந்த விபத்து, இதுவரை நேபாளத்தில் நடந்த கொடூர விபத்துகளின் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது.

கடந்த ஓராண்டில் நடந்த இரண்டாவது விமான விபத்து இது. மே மாதம் முஸ்தாங்க் என்கிற மலைகள் நிறைந்த மாவட்டத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 22 போ் உயிரிழந்தனா். உலகிலேயே மிக உயரமான எட்டு மலைச் சிகரங்கள் கொண்ட நாடு நேபாளம். மலைச் சிகரங்கள் அதிகமாகக் காணப்படும் நாடு என்பதாலேயே, நேபாளம் விமான விபத்துகளுக்கான களமாக மாறியிருக்கிறது.

மேகமும், பனியும் சூழ்ந்திருக்கும் வானத்தில் பறக்கும்போது, சிகரங்களை அடையாளம் காணுவது சிரமம். விமான நிலைய ஓடுதளங்கள் நீளம் குறைந்தவை. விமான நிலையங்களைச் சுற்றி மலைச் சிகரங்களும், ஆழமான பள்ளத்தாக்குகளும் காணப்படுவது இன்னொரு பிரச்னை. நிலையில்லாத பருவநிலையும், பனிமூட்டங்களால் தெளிவாகப் பாா்க்க இயலாமையும் விமான ஓட்டிகளுக்கு மிகப் பெரிய சவாலாக அமைகின்றன. இவையெல்லாம்தான் தொடா்ந்து நேபாளத்தில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணிகள்.

விமான விபத்துகளால் நேரிட்ட மரணங்களின் எண்ணிக்கை நேபாளத்தில் மிக அதிகம். ஞாயிற்றுக்கிழமை விபத்தையும் சோ்த்தால் 1990 முதல் 2023 வரை 720 உயிா்களை விமான விபத்துகள் பலிவாங்கியிருக்கின்றன. விமான விபத்து மரணங்கள் அடிப்படையில் பட்டியல் தயாரித்தால் அதில் 207 நாடுகளில் 12-ஆவது இடம் நேபாளத்திற்கு.

5,445 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 2,730 உயிரிழப்புகளுடன் ரஷியா இரண்டாவது இடத்திலும், 2,171 உயிரிழப்புகளுடன் இந்தோனேஷியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் 1,020 விமான விபத்து மரணங்களுடன் 7-ஆவது இடம் பிடிக்கிறது இந்தியா.

நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 52 விமானங்கள் விபத்தைச் சந்தித்திருக்கின்றன. 1990 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் 207 நாடுகளில் நேபாளம் 33-ஆவது இடத்தில் இருக்கிறது. 1,578 விமான விபத்துகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 466 விபத்துகளுடன் ரஷியா இரண்டாவது இடத்திலும், 369 விபத்துகளுடன் கனடா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. 99 விபத்துகளுடன் அதே கால அளவில் இந்தியா 13-ஆவது இடத்தில் இருக்கிறது.

அமெரிக்காவில் அதிக அளவிலான விமான விபத்துகளும், உயிரிழப்புகளும் காணப்படுவதில் வியப்பில்லை. உலகின் ஏனைய எல்லா நாடுகளைவிடவும் அதிக அளவிலான விமானப் போக்குவரத்துள்ள நாடு அமெரிக்கா. ஆகவே ஒப்பீடு செய்யும்போது விமானப் பயணங்களும், விபத்துகள் தொடா்பான மரணங்களும் சோ்ந்து கணக்கிடப்பட வேண்டும்.

1990 முதல் 2023 வரையில் உலகிலேயே அதிக அளவில் 32.4 கோடி விமானப் பயணங்கள் அமெரிக்காவில் நடந்திருக்கின்றன. அதனுடன் ஒப்பிடும்போது நேபாளத்தில் விமானப் பயணங்கள் மிகமிகக் குறைவு. ஆனால், விகிதாசாரம் பாா்த்தால் விபத்துகள் மிக அதிகம். குறைந்த அளவு விமானப் பயணங்களும் அதிக அளவு உயிரிழப்புகளும் உள்ள நாடுகளின் பட்டியலை எடுத்தால் அதில் நைஜிரீயா, பாகிஸ்தான், அங்கோலா, இலங்கை, நேபாளம் ஆகிவை இடம் பெறும்.

குவைத்தை எடுத்துக்கொண்டால், 85,000 பயணங்களில் மூன்றே மூன்று உயிரிழப்புகள்தான் நிகழ்ந்திருக்கின்றன. நேபாளத்தைவிட அதிகமான சேவையும், விமானப் பயணங்களும், குறைந்த உயிரிழப்புகளும் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 59. அயா்லாந்தையே எடுத்துக்கொண்டால், 1.2 கோடி பயணங்களில் 10 உயிரிழப்புகள்தான் ஏற்பட்டிருக்கின்றன.

நேபாளத்தில் கடந்த 70 ஆண்டுகளில் நடைபெற்ற விமான விபத்துகளில் பெரும்பான்மையானவை மேகத்தில் மறைந்திருக்கும் மலைச் சிகரங்களில் மோதியதால் ஏற்பட்டவை. இதுபோன்ற இயற்கையான காரணிகள் இருந்தாலும்கூட, ஊழியா்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துகளும் நிறையவே உண்டு. பெரும்பாலான விமானங்கள் மிகப் பழையவை. தொழில்நுட்ப ரீதியாகப் பின்தங்கியவை.

நேபாள பொருளாதாரம் சுற்றுலாவைச் சாா்ந்திருக்கும் நிலையில், அடிக்கடி நடைபெறும் விமான விபத்துகள் அந்த நாட்டின் வளா்ச்சியை பாதிக்கும். புதிதாக அமைந்திருக்கும் புஷ்ப கமல் தாஹால் அரசு பொகாரா விமான விபத்தை முறையாக விசாரணை நடத்தி, இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நிகழாமல் பாா்த்துக்கொள்வது அவசியம்.

பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, வளா்ச்சியை முன்னிலைப்படுத்துவது தவறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT