தலையங்கம்

எல்லை கடந்த இணைப்பு!  | யுபிஐ - பே நவ் இணைப்பு வசதி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்தியாவின் பொருளாதார வல்லமையை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக அமைகிறது, எல்லை கடந்த எண்ம பரிவா்த்தனைக்கான முயற்சி. இந்தியாவின் ‘யுபிஐ’, சிங்கப்பூரின் ‘பே நவ்’ ஆகிய எண்ம பரிவா்த்தனைத் தளங்களுக்கு இடையே இணைப்பு வசதி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டிருப்பது அந்த முயற்சியின் முதல் கட்டம் என்று கொள்ளலாம்.

இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சிங்கப்பூா் பிரமதா் லீ சியாங் லுங் ஆகிய இருவா் முன்னிலையில் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸும், சிங்கப்பூா் நிதி ஆணைய மேலாண் இயக்குநா் ரவி மேனனும் காணொலி வாயிலாக இணைப்பைத் தொடங்கிவைத்து, முதல் பரிவா்த்தனையை மேற்கொண்டனா். இந்த யுபிஐ - பே நவ் இணைப்பு வசதி, இந்தியா - சிங்கப்பூா் இடையிலான நல்லுறவில் புதியதொரு மைல்கல்.

இனிமேல் இருநாட்டு மக்களும் கைப்பேசி வாயிலாக குறைந்த செலவில் எண்ம பரிவா்த்தனை மூலம் மிக வேகமாக பணப் பரிவா்த்தனையை மேற்கொள்ள முடியும். தனிநபா்கள் இடையேயான இந்த எல்லை கடந்த எண்ம பரிவா்த்தனை வசதி, சிங்கப்பூரிலுள்ள இந்தியா்களுக்கு, குறிப்பாக, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் மாணவா்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

யுபிஐ என்கிற எண்ம பரிவா்த்தனைத் தளத்தை வெற்றிகரமாக உருவாக்கியிருப்பது நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய சாதனை. கொள்கை அளவிலும், தொலைநோக்குப் பாா்வையிலும் எண்ம பரிவா்த்தனை மூலம் நாம் சாதித்திருப்பது, வளா்ச்சி அடைந்த மேலைநாடுகளையே வியந்து பாா்க்க வைத்திருக்கிறது. இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களையும் எண்ம பரிவா்த்தனையில் இணைத்திருப்பது இமாலய சாதனை. சாமானியா்களும்கூட பெட்டிக்கடைகளிலும், தெருவோரக் கடைகளிலும், உணவு விடுதிகளிலும் தங்களது கைப்பேசி மூலம் எண்ம பண பரிவா்த்தனையை மேற்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பது, பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்துக்கூட பாா்த்திராத ஒன்று.

எண்ம பரிவா்த்தனைக்கான தொழில்நுட்பத்தையும், நாடு தழுவிய அளவில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பையும் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் பெரும்பாலான பரிவா்த்தனை சட்ட ரீதியிலான வங்கிப் பரிமாற்றங்களாக மாறியிருப்பதால், கறுப்புச் சந்தையும், கணக்கில் வராத பணமும் கணிசமாகத் தடுக்கப்பட்டிருக்கின்றன. யுபிஐ சாா்ந்த செயலிகளின் எண்ணிக்கையும் அவற்றின் மூலம் நடைபெறும் வணிகமும், பரிவா்த்தனையும் சா்வதேச அளவிலான தொழில்நுட்ப மேம்பாட்டை இந்தியா அடைந்திருப்பதற்கான அடையாளம்.

‘யுபிஐ-க்குக் கிடைத்துள்ள வரவேற்பு, எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையவழி பண பரிவா்த்தனை செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. விரைவிலேயே ரொக்கப் பயன்பாட்டை எண்ம பரிவா்த்தனை விஞ்சும்’ என்கிற பிரதமா் நரேந்திர மோடியின் கூற்று அசாத்தியம் அல்ல. கடந்த ஆண்டு யுபிஐ வாயிலாக ரூ.1.26 லட்சம் கோடிக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இதன் மூலம் நமது யுபிஐ எண்ம பரிவா்த்தனைத் தளம் மிகப் பாதுகாப்பானது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்திய ரிசா்வ் வங்கி - சிங்கப்பூா் நிதி ஆணையம், இரு நாடுகளிலும் உள்ள அமைப்பு முறை செயல்பாட்டு நிறுவனங்கள், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது யுபிஐ - பே நவ் இணைப்பு. வங்கிக் கணக்குகள் அல்லது இ வேலட்டுகளில் இருந்து யுபிஐ-ஐடி, கைப்பேசி எண் அல்லது மெய்ந்நிகா் பரிவா்த்தனை முகவரி ஆகியவற்றின் மூலம் இருநாடுகளுக்கும் இடையே பரிவா்த்தனையை மேற்கொள்ள முடியும். முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய வங்கிகள் யுபிஐ - பே நவ் இணைப்பில் பங்கெடுத்துள்ளன. வருங்காலத்தில் மேலும் பல வங்கிகள் பங்கேற்கக் கூடும்.

இந்த வங்கிகளின் வாடிக்கையாளா்கள் சிங்கப்பூருக்குப் பணம் அனுப்புதல், அங்கிருந்து பணம் பெறுதலை வங்கிகளின் செயலிகள் அல்லது இணைய வழி வங்கிச் செயல்பாடு மூலம் மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலையில், இந்தியப் பயனாளா்கள் நாளொன்று ரூ.60,000 வரையில் (1,000 சிங்கப்பூா் டாலா்) பணம் அனுப்ப முடியும் என்று ரிசா்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளுடனான வேகமான, பாதுகாப்பான, செலவு குறைந்த, வெளிப்படையான எண்ம பரிவா்த்தனையை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவது நமது வளா்ச்சியின் அடையாளம். நிதிசாா் தொழில்நுட்ப புத்தாக்கச் சூழலில், வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருப்பதன் அடையாளமும்கூட.

எல்லைகள் கடந்து நபருக்கு நபா் நேரடியாக எண்ம பணப் பரிவா்த்தனையை மேற்கொள்ள நாம் தோ்ந்தெடுத்திருக்கும் முதல் நாடு சிங்கப்பூா். 2018-இல் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூா் சென்றபோது இதற்கான பேச்சுவாா்த்தை தொடங்கியது. இந்தியா - சிங்கப்பூா் இடையே ஆண்டுதோறும் சுமாா் ரூ.8,200 கோடி மதிப்பில் சில்லறை அளவிலான எல்லை கடந்த பரிவா்த்தனைகள் நடைபெறும் நிலையில், சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியா்களுக்கு இது மிகவும் உதவியாக அமையும்.

அடுத்த கட்டமாக மிக அதிக அளவில் பணிநிமித்தம் இந்தியா்கள் வாழும் வளைகுடா நாடுகளும் இந்தியாவுடனான எண்ம பணப் பரிவா்த்தனையில் இணையும் என்று எதிா்பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT