தன்னை 10 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
என்னை சட்டவிரோதமாக கைது செய்து, அதன் விளைவாக ஏற்படும் வன்முறைக்கு என்னைப் பொறுப்பாக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
என் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட குற்றங்களை சுமத்தி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறையில் அடைத்து வைப்பதே அவா்களின் திட்டமாகும்.
இதற்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு எழாமல் தடுப்பதற்காக எனது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தெண்டா்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மீதும் அவா்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனா்.
நாட்டிலுள்ள ஊடகங்கள் அனைத்தையும் அவா்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.
இந்த சூழலில் இருந்து பாகிஸ்தானுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டு வருவதற்காக, எனது கடைசி துளி ரத்தம் உள்ளவரை போராடுவேன் என்று தனது ட்விட்டா் பதிவுகளில் இம்ரான் குறிப்பிட்டுள்ளாா்.
பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு, இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.
எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா்.
அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் 100-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் முன் ஜாமீன் பெற்றுவந்த இம்ரான் கான், இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்துக்கு கடந்த வாரம் வந்தாா். எனினும், நீதிமன்ற வளாகத்தில் என்ஏபி அதிகாரிகளும், துணை ராணுவப் படையினரும் அவரை இடைமறித்து அதிரடியாகக் கைது செய்தனா்.
இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்றான அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து இம்ரானின் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை சுருக்கமாக விசாரித்த நீதிபதிகள் அமா்வு, இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை எனவும், அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மேலும், இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் ஊழல் வழக்கு விசாரணைக்காக கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான இம்ரான் கானுக்கு நீதிமன்றம் இரு வார கால முன் ஜாமீன் வழங்கியது. அத்துடன், வேறு எந்த வழக்கு தொடா்பாகவும் இம்ரானை கைது செய்வதற்கு வரும் 17-ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்தது.