தலையங்கம்

விபரீத போக்கு! | கல்விச்சாலைகள் மாணவர்களின் தற்கொலை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 உயர்கல்விக்காக நிறுவப்பட்டிருக்கும் கல்விச்சாலைகள் மாணவ, மாணவியரின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒருவருடைய வாழ்க்கையில் மிக அதிக அளவு மகிழ்ச்சியை வழங்குவது மாணவப் பருவம்தான். ஆனால் சமீப காலமாக இந்தியா முழுவதும் கல்விச்சாலைகள் மாணவர்களின் தற்கொலைகளை சந்திப்பது வேதனை அளிக்கிறது.
 இந்தியாவின் மிக உன்னதமான கல்வி நிலையங்கள் என்று சர்வதேச அளவில் போற்றப்படும் அமைப்புகளில் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அதுபோன்ற கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்புக்காக பல லட்சம் பேர் ஏங்கும்போது, அதற்கான வாய்ப்பு கிட்டியவர்கள் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.
 இந்த மாதத்தையே எடுத்துக்கொண்டால், இரண்டு தற்கொலை நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஏனைய எல்லா கல்வி நிறுவனங்களையும்விட சிறப்பான வசதிகளையும், கல்விச் சூழலையும் வழங்கும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) விடுதிகளில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதும், தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் ஏற்படுவதும் விசித்திரமாக இருக்கிறது.
 பிப்ரவரி 12-ஆம் தேதி, மும்பை ஐஐடியில் படித்துவந்த தர்ஷன் சோலங்கி என்கிற 18 வயது மாணவர் விடுதி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அடுத்த நாளே, சென்னை ஐஐடி விடுதியில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 27 வயது மாணவர் தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு சென்னை ஐஐடி மாணவர் நல்லவேளையாக மீட்கப்பட்டிருக்கிறார்.
 இவை ஏதோ மும்பையிலும், சென்னையிலும் மட்டுமே நடப்பவை என்று ஒதுக்கிவிட முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டா இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அவ்வப்போது மாணவர் தற்கொலை முயற்சிகள் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்கு தற்கொலைகள் கோட்டா ஐஐடியில் நிகழ்ந்தன. அவற்றில் மூன்று ஒரே நாளில் நடந்தன என்பதுதான் வேதனை. கடந்த ஆண்டு, கோட்டா ஐஐடியில் படிக்கும் 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.
 அரசின் புள்ளிவிவரத்தின்படி, 2014 முதல் 2021 வரையிலான ஏழு ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும் 122 மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த உயர்கல்வி நிலையங்கள் அல்லாமல் இந்தியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறும் மாணவ - மாணவியர் குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் தற்கொலை போக்கு மிகுந்து காணப்படுவது தெரிய வந்திருக்கிறது.
 அரசும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி மாணவ - மாணவியருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் ஏற்பாடுகளைச் செய்யாமல் இல்லை. ஆனால் அவை மாணவ - மாணவியரின் மனப்போக்கை கண்காணிப்பதிலும், அவர்களுக்கு தகுந்த நேரத்தில் ஆதரவுக் கரம் நீட்டவும் போதுமானவையாக இல்லை.
 ஆசிரியர்கள் நியமனத்தில் காணப்படும் முனைப்பும், முக்கியத்துவமும் உளவியல் ஆலோசகர்கள் நியமனத்தில் காட்டப்படுவதில்லை. பெயருக்கு மட்டுமே அந்த நியமனங்கள் செயல்படுகின்றனவே தவிர மாணவர்களால் எளிதில் அணுகப்படும் அமைப்பாகவோ அல்லது மாணவர்களின் தேவையை கண்டறிந்து வலியச் சென்று உதவும் அமைப்பாகவோ அது இல்லை.
 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளிலும் வாய்ப்பை பெறும் எல்லா மாணவ - மாணவியரும் தங்களது சொந்த விருப்பத்தால் படிக்க வருவதில்லை. குடும்ப கௌரவத்துக்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும், அந்த நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்ததாலும் படிக்க வரும் மாணவர்களும் உண்டு. முதலாம் ஆண்டிலேயே ஏனைய மாணவர்களின் திறமைக்கு தங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை சிலருக்கு ஏற்படுகிறது.
 அவர்களது குடும்பச் சூழலும், வளர்ப்புச் சூழலும், கல்வி பின்னணியும் முக்கியமான காரணங்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் படித்து முதன்மை உயர் கல்வி நிறுவனங்களிலும், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளிலும் இடம்பெறும் நகர்ப்புற, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கிராமங்களிலிருந்து வரும் அடித்தட்டு குடும்ப மாணவர்களுக்கும் இடையே காணப்படும் வேறுபாடு ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஆரம்பத்திலேயே சிலருக்கு ஏற்படுத்தி விடுகிறது.
 விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், சுற்றுலா போன்றவை மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி இணக்கத்துக்கு வழிகோலும். தாய்மொழி சார்ந்த கல்வி உதவி, மற்றவர்களுடன் ஈடுகொடுக்க முடியாத மாணவர்களுக்கு தனிப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் அந்த மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையையும், உளவியல் ரீதியிலான பிரச்னைகளயும் தீர்க்க முடியும். உயர் கல்வி நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை.
 15 முதல் 20 வயதான மாணவர்கள் மத்தியில் காணப்படும் தற்கொலை உணர்வுக்கு உடல் சார்ந்த, சமூகம் சார்ந்த, கல்வி சார்ந்த அழுத்தங்கள்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. தகுதியை மீறிய எதிர்பார்ப்புகளை அவர்கள் மீது திணிப்பதால் மற்றவர்களுடன் போட்டிபோட முடியாத நிலையில் அவர்கள் தற்கொலை உணர்வுக்கு தூண்டப்படுகிறார்கள். மாணவர்கள் மத்தியில் காணப்படும் இந்த விபரீத போக்குக்கு விரைந்து விடை காண வேண்டியது சமுதாயத்தின் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT