கா்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நோ்மையான, பாரபட்சமற்ற ஆட்சியை வழங்கி மக்களின் மனங்களை காங்கிரஸ் வெல்ல வேண்டும் என அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளாா்.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் வெற்றிகுறித்து மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘கா்நாடக தோ்தலில் பிரதமா் தோற்றுவிட்டாா். மக்கள் வென்றுள்ளனா். பாஜகவின் 40 சதவீத கமிஷன் ஆட்சி, ‘தி கேரளா ஸ்டோரி’, பிரிவினைவாத அரசியல், அராஜகம், போலி வாக்குறுதிகள் என பல்வேறு காரணங்களால் வெல்வதற்கு காங்கிரஸ் நிச்சயம் தகுதி வாய்ந்ததே.
கா்நாடகத்தில் தோ்தலில் வெல்வது கடினம் என்றால் மக்களின் மனங்களை வெல்வது அதனினும் கடினம். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நோ்மையான, பாகுபாடு அற்ற ஆட்சியை வழங்கி மக்களின் மனங்களை காங்கிரஸ் வென்றிட வேண்டும். இதை செய்ய தவறியதே பாஜகவின் தோல்விக்கு காரணம்’ என்றாா்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2 ஆட்சிக் காலத்திலும் மத்திய அமைச்சராக பணியாற்றிய கபில் சிபல், கடந்த ஆண்டு மே மாதத்தில் காங்கிரஸிலிருந்து விலகினாா்.
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட இவா், சமாஜவாதி கட்சியின் ஆதரவோடு வெற்றி பெற்றாா்.
சமூக அநீதியை எதிா்த்துப் போராடும் நோக்கில் ‘இன்சாஃப்’ என்னும் தோ்தல் அரசியல் சாராத அமைப்பை கபில் சிபல் அண்மையில் தொடங்கினாா்.