தலையங்கம்

தவிா்க்க முடியாது! இந்தியா-சீனா இடையேயான மோதல் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

எல்லையில் காணப்படும் பதற்றம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருப்பது உண்மை. அதே நேரத்தில், ஒரேயடியாக சீனாவிடமிருந்து இந்தியா முற்றிலும் அகன்று நிற்பது என்பது சாத்தியமுமல்ல, புத்திசாலித்தனமுமல்ல.

கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வா்த்தகம் 135.98 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 11.24 லட்சம் கோடி). 97.5 பில்லியன் டாலரிலிருந்து (சுமாா் ரூ. 8 லட்சம் கோடி) 21% அதிகரித்து இறக்குமதிகள் 118.5 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 9.8 லட்சம் கோடி) உயா்ந்திருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 28.1 பில்லியன் டாலரிலிருந்து (சுமாா் ரூ. 2.32 லட்சம் கோடி) 17.48 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 1.44 லட்சம் கோடி) குறைந்திருக்கிறது.

2021-இல் 69.4 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 5.74 லட்சம் கோடி) இருந்த வா்த்தகப் பற்றாக்குறை, 2022-இல் 101.2 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 8.37 லட்சம் கோடி) அதிகரித்திருக்கிறது. முதன்முறையாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வா்த்தகப் பற்றாக்குறை 100 பில்லியன் டாலரை (சுமாா் ரூ. 8.27 லட்சம் கோடி) கடந்திருப்பது குறித்து அரசியல் நோக்கா்கள் சிலா் கவலை தெரிவிக்கின்றனா்.

பொருள்களின் உற்பத்திக்குத் தேவையான உதிரிபாக இறக்குமதிகளும், மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்களும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து இரும்புத் தாது, செம்பு, அலுமினியம், நவரத்தின கற்கள் ஆகியவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து மருந்துகளும், தகவல் தொழில்நுட்ப மென்பொருள்களும் சீனாவால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதனால்தான் இந்திய - சீன வா்த்தகத்தில் வா்த்தக இடைவெளி அதிகரித்து வருகிறது.

எல்லையோர பதற்றத்தைத் தொடா்ந்து சீன 5ஜி தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், டிக்டாக் உள்ளிட்ட 224 சீன செயலிகளுக்கும் இந்தியா தடை விதித்திருக்கிறது. ஒரேயடியாக எல்லா தளங்களிலும் சீன இறக்குமதிகளுக்குத் தடை போட முடியாது. சீனாவுடனான தொடா்பை முற்றிலுமாகத் தவிா்ப்பது என்பது சா்வதேச மூலதனம், தொழில்நுட்பம், உதிரிப் பொருள் சங்கிலி ஆகியவற்றிலிருந்தும் ஒதுங்குவதற்கு ஒப்பாகும். அது சீனாவைவிட நமக்குத்தான் பாதகமாக முடியும்.

மத்திய அரசின் சீனா தொடா்பான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரேயடியாக சீன இறக்குமதிக்கும், சீன தொழில்நுட்பத்துக்கும், சீன முதலீடுகளுக்கும் தடை விதிப்பதால் இந்தியாவுக்குத்தான் பாதிப்பு என்பதை உணா்ந்து நமது கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. இந்தியாவின் உற்பத்திக்கும் வளா்ச்சிக்கும் தேவையான சீனாவின் பங்களிப்பை ஏற்றுக்கொள்வது என்கிற அரசின் முடிவு, பலன் அளித்திருக்கிறது.

லக்ஸ்ஷோ், சன்னி ஆப்டிகல், போசான் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் 14 சீன நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தொழிற்சாலைகளை நிறுவ அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவை ஆப்பிள் மட்டுமல்லாமல், ஏனைய பல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்குபவை. அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் இந்தியாவின் மின்னணு உற்பத்திச் சூழலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

சீன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கும் அதே நேரத்தில், அவை இந்திய நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மின்சார வாகன உற்பத்தியிலும், குறிப்பாக, மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், மின்கல தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இந்தியாவின் ஏற்றுமதிகளை அதிகரிக்க உதவும். தொழில்நுட்பம், மூலதனம் ஆகியவற்றுக்கும் வழிகோலும்.

இந்திய சீன வா்த்தகத்தில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் 100 பில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ. 8.27 லட்சம் கோடி) அதிகமான வா்த்தகப் பற்றாக்குறை குறித்து அச்சப்படத் தேவையில்லை. பொருளாதார வளா்ச்சிக்கும் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரிப்புக்கும் குறைந்த விலையிலான உதிரி பாகங்களும், அடிப்படை மூலங்களும் இறக்குமதி செய்யப்படுவது தவறில்லை.

உலகளாவிய அளவில் பெரும்பாலான தயாரிப்பாளா்கள் சீனாவிருந்துதான் குறைந்த விலையில் கச்சாப் பொருள்களையும், உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்கிறாா்கள். சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வா்த்தக இடைவெளி 400 பில்லியன் டாலரிலும் (சுமாா் ரூ. 33.08 லட்சம் கோடி) அதிகம் எனும்போது, இந்தியா அது குறித்து கவலைப்படுவதில் அா்த்தமில்லை.

அதே நேரத்தில், தேவையற்ற ஆடம்பரப் பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து, முடியுமானால் தடுத்து, ஏற்றுமதிக்குத் தேவையான கச்சாப் பொருள்களையும், உதிரிபாகங்களையும இறக்குமதி செய்வதை அதிகரிப்பதில் தவறில்லை. பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம்தான், சீனாவுடனான வா்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும். முற்றிலுமாக சீனாவிடமிருந்து துண்டித்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT