தலையங்கம்

ஆவணப்படமும் அவசரத் தடையும்! | பிபிசி-யின் ஆவணப்படம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

எந்த ஒரு தடையும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதைவிட, அது குறித்த ஆவலை அதிகரிக்கும் என்பதுதான் அனுபவம் கற்றுத்தரும் பாடம். அதேபோல பரபரப்புக்காகவும், விளம்பரத்துக்காகவும், விற்பனைக்காகவும் உருவாக்கப்படும் பொய் பரப்புரைகள் முதலில் நிமிர்ந்து பார்க்க வைத்தாலும், கடைசியில் ஊடகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதும் வரலாறு உணர்த்தும் பாடம்.

லண்டனின் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'இந்தியா - தி மோடி கொஸ்ட்டின்' (இந்தியா - மோடி கேள்வி) என்கிற ஆவணப்படம் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, 2002-இல் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது கோத்ரா மதக்கலவரத்தை கையாண்ட விதம் குறித்த ஆவணப்படம் அது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல முறை பலராலும், பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்ட பிரச்னைதான் அது. கீழமை நீதிமன்றத்தில் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு தீர்ப்பளித்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிரச்னையை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிதான் பிபிசி-யின் ஆவணப்படம்.

சட்டை செய்யாமல் ஒதுக்கியிருந்தால் நீர்க்குமிழியாக மறைந்திருக்க வேண்டிய ஒன்று, ஊடகப் பரபரப்பு பெற்றதற்கு காரணம் ஆவணப்படம் வழங்கியிருக்கும் புதிய தரவுகளோ, வெளிவராத தகவல்களோ அல்ல. அவசரத்திலும் ஆத்திரத்திலும் பாஜக-வின் சமூக ஊடகப் பிரிவின் பதிவுகளும், அதைத் தொடர்ந்து அரசு விதித்த தடையும்தான் நம்பகத்தன்மையற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஆவணப்படத்துக்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கின்றன. 

மின்னல் வேகத்தில் தகவல்கள் பரவும் தொழில்நுட்ப யுகத்தில், தடையை அமல்படுத்துவது என்பது எளிதல்ல. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் தடையை மீறி அந்த ஆவணப்படத்தை மாணவர்கள் மத்தியில் திரையிடுகின்றன. ஊடகங்களில் அதுகுறித்த செய்திகளும், கட்டுரைகளும் வெளிவருகின்றன. அதைத் தாண்டி, ஒட்டுமொத்த இந்தியாவையும் கொதித்தெழ வைக்கும் எதுவும் பிபிசி செய்தி நிறுவன ஆவணப்படத்தால் ஏற்பட்டுவிடவில்லை. 

பிரிட்டிஷ் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் நூற்றாண்டுகால பழைமையான செய்தி நிறுவனத்தின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், காலனிய மனோபாவத்துடன் தொடரும் அந்த நிறுவனம் குறித்து பிரிட்டிஷாருக்கே நம்பிக்கை இல்லை எனும்போது, உலக அளவிலான மரியாதை குறித்து விவரிக்கத் தேவையில்லை.

1987-இல் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு எதிராக பிபிசி நிறுவனம் நடத்திய பரப்புரைகளை அவர் சட்டை செய்யவே இல்லை. அதையும் மீறி தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார் என்பது வரலாறு. 

1995-இல் இளவரசி டயானாவை வற்புறுத்தி ராஜகுடும்பத்திற்கு எதிராக பேசவைத்து பரபரப்பை ஏற்படுத்தியது பிபிசி. இரண்டாம் எலிசபெத் மகாராணி, அது குறித்து தான் எதுவும் பேசத் தயாராக இல்லை என்று மெüனத்தைக் கடைப்பிடித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டின் பஷீர் என்கிற பத்திரிகையாளரைப் பயன்படுத்தி இளவரசி டயானாவை ராஜகுடும்பத்துக்கு எதிராக பேட்டியளிக்க பிபிசி வற்புறுத்திய தகவல் வெளிவந்தபோது, அந்த நிறுவனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. 

நார்மன் டெபிட் என்கிற பிரிட்டனின் முன்னாள் அமைச்சர், பிபிசி-க்கு வைத்த பெயர் போல்ஷ்விக் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன். 1986-இல் லிபியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்த ஒருதலைபட்ச பிபிசி செய்திகள் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு உள்ளாயின.

1947 முதல் 2008 வரை தெற்காசிய அரசியல் குறித்தும், பொருளாதாரம் குறித்துமான பிபிசி-யின் செய்திகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகள் காணப்பட்டதை லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அலாஸ்டேர் பிங்க்கர்டன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம், பிபிசி-யில் காணப்படும் காலனிய மனோபாவம் என்பதை அவரது ஆய்வு தெரிவிக்கிறது. 

பிரிங்ஆர்க் என்கிற இந்திய நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவது குறித்த பிபிசி ஆவணப்படம் 'புலிட்சர்' விருது பெற்றது. அதனால் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டது. 2011-இல் அந்த ஆவணப்படம் புனைவு என்று தெளிவானபோது, பிபிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்து தனது தவறை ஒப்புக்கொண்டது.

இவையெல்லாம்தான் பிபிசி செய்தி நிறுவனத்தின் தரமும், நம்பகத்தன்மையும். ஒருகாலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த நிறுவனம், இப்போது பொய் பரப்புரைகளுக்கான கருவியாக மாறிவிட்டது. 

கடந்த 21 ஆண்டுகளில் பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற பிறகும், குஜராத் கலவரத்தையும், நரேந்திர மோடியையும் இணைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படுவது முட்டாள்தனம். இப்போது  இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்திய வம்சாவளி ஒருவர் பிரிட்டனின் பிரதமராகி இருக்கும் நிலையில், இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது காரணமாக இருக்கக் கூடும். 2024 தேர்தலில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான பரப்புரை முயற்சியாகவும் இருக்கலாம்.

மத்திய அரசு ஏன் அவசரப்பட்டு அந்த ஆவணப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்? ஒருவேளை, அந்த ஆவணப்படத்தால் கிடைக்கும் விளம்பரம், தனது வாக்குவங்கியை அதிகரிக்கக் கூடும் என்று பாஜக நினைக்கிறதோ என்னவோ, யார் கண்டது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT