தலையங்கம்

அவலம் அகல வேண்டும்! | கழிவு அகற்றம் இயந்திரமயமாக்குதல் குறித்த தலையங்கம்

6th Feb 2023 07:58 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் 2023 - 24-க்கான நிதிநிலை அறிக்கையில் அதிகம் பேசப்படாத, ஆனால் மிக அதிகமான பாராட்டுக்குரிய அம்சம், இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் குழாய்களையும் தொட்டிகளையும் சுத்தப்படுத்துவதற்கு தரப்பட்டிருக்கும் முனைப்பு. மனிதர்கள் மலக்கழிவை அகற்றுவதற்கும், கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தப்படுத்துவதற்கும் முற்றுப்புள்ளி வைத்து 100% இயந்திரங்கள் மட்டுமே கையாளப்பட வேண்டும் என்று அறிவித்திருப்பதை எத்துணை பாராட்டினாலும் தகும். தொழில்நுட்பம் சார்ந்த புதிய இந்தியாவில் முற்றிலுமாக பழைய நடைமுறைக்குப் பதிலாக இயந்திரங்களை பயன்படுத்தும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் வழிமுறை அமல்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்.
 2017-இல் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் கழிவுநீர் குழாய்களையும் தொட்டிகளையும் உள்ளே இறங்கி சுத்தம் செய்தபோது 400 பேர் உயிரிழந்ததாக கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அரசு வழங்கும் இதுபோன்ற புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. அதைவிடப் பல மடங்கு அதிகமான அப்பாவி இந்தியர்களின் உயிர் சாக்கடைகளிலும், கழிவுநீர் தொட்டிகளிலும் பலியாகியிருப்பது வெளியில் தெரியாத அவலம்.
 கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த ஒருவருக்கு தில்லி மாநில அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கின்போது உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்னை குறித்துத் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. "தெரிந்தே தனது குடிமக்களை மரணக்குழியில் வேறு எந்தவொரு நாடும் அனுப்பாது' என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டது.
 கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் ஊழியர்கள் அனைவருமே தினக்கூலி பெறுபவர்கள். தொழில்நுட்ப உதவியோ, பாதுகாப்புக் கவசமோ அணிந்து பணியில் ஈடுபடுவது கட்டாயம் என்றாலும், அதை அவர்கள் கடைப்பிடிப்பதுமில்லை, அதற்கான வாய்ப்பையும் வழிமுறைகளையும் அரசு நிர்வாகம் வழங்குவதுமில்லை. இதையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிட்டது.
 2016 முதல் 2018 வரை தலைநகர் தில்லியில் மட்டும் 429 பேர் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணிகளில் உயிரிழந்ததாக "சஃபாய் கர்மச்சாரி ஆந்தோலன்' என்கிற தூய்மைப் பணியாளர்கள் சங்கம் ஒரு குறிப்பில் தெரிவித்திருக்கிறது. தில்லி அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 45 தூய்மைப் பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கி அவர்களது மறுவாழ்வுக்கு வழிகோல முற்பட்டது.
 திறன்சார் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் வேறு பணிகளை மேற்கொள்ளவும், அவர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப உதவியுடன் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதும்தான் நோக்கம். அறிவிப்பும் அதைத் தொடர்ந்து சில முன்னெடுப்புகளும் நடந்தனவே தவிர, அந்த முயற்சி முழுமை பெறவில்லை.
 தூய்மைப் பணியாளர்களை முறையான பாதுகாப்பு இல்லாமல் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. 2013-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் 7-ஆவது பிரிவின்படி, கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் நேரடியாக தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்துவது தடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்தால் இரண்டாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட அந்தச் சட்டம் வழிகோலுகிறது. அந்தச் சட்டத்தின்படி எந்த ஒரு நபரோ, அமைப்போ, உள்ளூர் நிர்வாகமோ ஆபத்தான கழிவுநீர் குழாய்களையோ, மலக்குழிகளையோ தூய்மை செய்யும் பணியில் ஒருவரை ஈடுபடுத்தவோ, வேலைக்கு அமர்த்தவோ கூடாது.
 கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு தூய்மைப் பணியாளர்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் முயற்சியிலும், இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் முனைப்பிலும் ஈடுபட்டாலும்கூட, நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. போதுமான நிதி ஒதுக்கீடும், மாற்றத்துக்கான ஊக்கமும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
 மலம் அகற்றும் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களை இன்னும்கூட எல்லா மாநில அரசுகளும் முழுமையாகக் கணக்கெடுக்கவில்லை. போதுமான அளவில் இயந்திரங்களைக் கொள்முதல் செய்வது, அதை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிப்பது, இயந்திரப் பயன்பாட்டை கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை கவனமும் முனைப்பும் பெறுவதில்லை.
 பெரும்பாலும் மலக்குழிகள், சாக்கடைகள், கழிவுநீரோடைகள், தொட்டிகள் போன்றவற்றைக் கையாளுதல் உள்ளாட்சி அமைப்புகளால் நேரடியாக செய்யப்படுவதில்லை. ஒப்பந்தக்காரர்களும், தினக்கூலி தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒப்பந்தக்காரர்களுக்கு கடனுதவி வழங்கி, இயந்திரங்களையும், பாதுகாப்புக் கவசங்களையும் கொள்முதல் செய்ய உதவுவதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
 இந்தப் பிரச்னைக்கு தொழில்நுட்ப உதவியில்லாதது மட்டுமே காரணமல்ல. ஜாதியமும் முக்கிய பங்கு வகிக்கிறது. பட்டியலின வருணாசிரமமும்கூட இந்த அவலத்துக்குக் காரணம்.
 மனிதக் கழிவை அகற்றும் பணியிலும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபடுவோர் அனைவருமே பட்டியலினத்தவர்கள் என்பது மட்டுமல்ல, அதன் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எண்ணிக்கை பலமில்லாத பட்டியலினப் பிரிவினர் என்பதாலும், அதன் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதாலும் ஏனைய பட்டியலினத் தலைவர்கள்கூட, மனிதக் கழிவை அகற்றும் அடித்தட்டு தூய்மைப் பணியாளர்களின் அவலம் குறித்துக் கவலைப்படுவதில்லை.
 அப்படிப்பட்ட நிலையில், 100% இயந்திரமயமாக்குதல் என்கிற மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. அறிவிப்பை நடைமுறை சாத்தியமாக்கினால் வரலாறு வாழ்த்தும்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT