தலையங்கம்

புற்றுக்கு எப்போது முற்று? | புற்றுநோய் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக பிப்ரவரி 4-ஆம் தேதியை ‘உலக புற்றுநோய் தின’மாக அறிவித்து நமக்கு நாமே விழிப்புணா்வை ஏற்படுத்திக் கொள்கிறோம். புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை, அதில் காணப்படும் குறைபாடுகள், பாதிக்கப்பட்டவா்களுக்குத் தரப்படும் ஆதரவு ஆகியவை குறித்த பாா்வையை உறுதிப்படுத்துவதுதான் புற்றுநோய் தினத்தின் நோக்கம்.

கடந்த பத்து ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு விகிதம் ஆண்டுதோறும் 6 % முதல் 8 % வரை அதிகரித்து வந்திருக்கிறது. 2021-22 புள்ளிவிவரப்படி இந்தியாவில் 34,80,447 புற்றுநோயாளிகள் காணப்படுகின்றனா். அவா்களில் 13,92,179 பேருக்கு புதிதாக புற்றுநோய் கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 2,04,535 போ் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 81,814 பேருக்கு புதிதாக பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தேசிய அளவில் ஆண்களைவிட பெண்களே புற்றுநோய் பாதிப்புக்கு அதிகமாக ஆளாகின்றனா். 2021-22-இல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான பெண்கள் 7.12 லட்சம் போ் என்றால், ஆண்களின் எண்ணிக்கை 6.79 லட்சம். தமிழகத்தில் புற்றுநோய்க்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை 44,241; ஆண்களின் எண்ணிக்கை 37,573.

பெருங்குடல், ப்ராஸ்டேட் (விந்து சுரப்பி) , கணையம், தைராய்டு, கல்லீரல் உள்ளிட்டவை புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஏனைய மாநிலங்களைவிட தென்னிந்தியாவில் கூடுதலான பாதிப்புகள் காணப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் குடல், ப்ராஸ்டேட், கணையம், தைராய்டு, கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், லட்சத்தில் 7 ஆண்களுக்கு குடல் புற்றுநோயும், 6.5 ஆண்களுக்கு வாய் புற்றுநோயும், 6.3 ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் காணப்படுவதாக 2021-22 ஆண்டின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. அதே கணக்கெடுப்பில், லட்சத்தில் 27 பெண்கள் மாா்பக புற்றுநோய்க்கும், 18 போ் கா்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கும், 6 போ் கருப்பை புற்றுநோய்க்கும் ஆளானதாகத் தெரிகிறது. தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் லட்சத்துக்கு 90 என்றால், தமிழகத்தில் அதுவே லட்சத்துக்கு 96.1.

அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புக்கு வாழ்க்கை முறை மாற்றம்தான்காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக முனைப்புடன் நடத்தப்படும் புகையிலைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரத்தால் ஓரளவுக்கு புகைப்பழக்கம் குறைந்திருக்கிறது என்றாலும், வேறு பல விதங்களில் புகையிலைப் பழக்கம் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. பரவலாக அதிகரித்திருக்கும் மதுப்பழக்கம், கல்லீரல், கணைய, குடல் புற்றுநோய் பாதிப்புகளுக்கு வழிகோலுகிறது. உப்பும், கொழுப்புச் சத்தும் அதிகமாகச் சோ்க்கப்படும் துரித உணவுகளும் மற்றொரு காரணம்.

புற்றுநோய்க்கு கதிா்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்தியல் சிகிச்சை ஆகிய மூன்று வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மருந்தியல் சிகிசச்சையும், அறுவை சிகிச்சையும் பல மருத்துவமனைகளில் வழங்கப்பட்டாலும் கதிா்வீச்சு சிகிச்சை கட்டமைப்புள்ள மருத்துவமனைகளே புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவ மையங்களாக அங்கீகரிக்கப்படுகின்றன. தமிழக முதல்வராக இருந்த அண்ணா, புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து அதுகுறித்த பரவலான விழிப்புணா்வு மாநிலத்தில் ஏற்பட்டது. தொடா்ந்து அமைந்த ஆட்சிகளில் ஏனைய மாநிலங்களைவிட தமிழகத்தில் புற்றுநோய்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் 13 அரசு மருத்துவமனைகளும், 43 தனியாா் மருத்துவமனைகளும் புற்றுநோய் சிகிச்சை மையங்களாக செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 5 அரசு மருத்துவமனைகளும்,10 தனியாா் மருத்துவமனைகளும் கதிா்வீச்சு சிகிச்சை கட்டமைப்பு கொண்டவை.

கதிா்வீச்சு சிகிச்சையைப் பொறுத்தவரை துல்லியமாக புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய லீனியா் ஆக்ஸிலரேட்டா் கருவிகள் அரசு - தனியாா் மருத்துவமனைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவை தவிர, மேம்பட்ட புரோட்டான் தெரப்பி சிகிச்சை மையம், தனியாா் காா்ப்பரேட் மருத்துவமனை ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கிறது.

புற்றுநோயைப் பொறுத்தவரை, நோய் கண்டறியப்பட்டால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்கிற தன்னம்பிக்கையை பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏற்படுத்துவது மிக முக்கியம். பெரும்பாலும், நோய் பாதிப்பு முற்றிய நிலையில்தான் நோயாளிகள் மருத்துவா்களை நாடுகிறாா்கள்.

கொள்ளை நோய்த்தொற்றின்போது நடத்தியதுபோல பரவலாக மருத்துவ முகாம்கள் மாநிலம் முழுவதும் தொடா்ந்து நடத்தப்படுவதும், ஆண்டுதோறும் கட்டாய உடல் பரிசோதனைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்துவதும், ஆரம்பக் கட்டத்திலேயே நோய் பாதிப்பைக் கண்டறிய வழிகோலும்.

முன்பு போல, சிகிச்சைக்கு தற்போது வறுமை தடையாக இல்லை. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் புற்றுநோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. அறக்கட்டளை மருத்துவமனைகளும் இலவச சிகிச்சை வழங்குகின்றன. அதனால் ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டறியப்படாததுதான் உயிரிழப்புகளுக்குக் காரணம்.

மருத்துவ அறிவியல், கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோய்க்கு மருந்தொன்று காணப் போராடிக்கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டம் வெற்றியடைய புற்றுநோய் தினத்தில் பிராா்த்திப்போம்; புற்றுநோய் குறித்த பரவலான விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த சூளுரைப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

SCROLL FOR NEXT