தலையங்கம்

ஜோகோவிச்சின் சாதனை!| ஆஸ்திரேலியன் ஓபன் வெற்றி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற ஜோகோவிச், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த தனது தாயை ஆரத் தழுவியதுடன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதது அரங்கத்தில் குழுமி இருந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பரவசப்படுத்தியது.
 மெல்போர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், செர்பிய வீரரான ஜோகோவிச் 2 மணி 56 நிமிடங்களில் கிரீஸ் வீரரான சிட்சிபாûஸ (24 வயது) வீழ்த்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்வது, 36 வயதை நெருங்கும் ஜோகோவிச்சுக்கு புதிதல்ல. ஆனால், இந்த முறை பெற்ற வெற்றி மிகவும் விசேஷமானது.
 2019, 2020, 2021 எனத் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் வென்றிருந்த நிலையில், பட்டத்தை தக்கவைக்கும் கனவுடன் 2022 ஜனவரியில் மெல்போர்ன் நகருக்கு சென்ற ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது நுழைவு இசைவு ரத்து செய்யப்பட்டு தங்கும் விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
 சட்டப் போராட்டத்தில் வென்று நுழைவு இசைவு ரத்து செய்யப்பட்டது திரும்பப் பெறப்பட்டாலும், போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அவர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார். அதே போன்று, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவரால் கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் வென்றாலும், சர்வதேச தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்து 7-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
 உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததன் காரணமாக ரஷிய வீரர்கள் போட்டியில் பங்கேற்க விம்பிள்டன் ஒருங்கிணைப்பாளர்கள் தடை விதித்தனர். இதையடுத்து போட்டி நடந்தாலும் தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது என சர்வதேச டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது. அதனால், விம்பிள்டனில் வென்றபோதும் ஜோகோவிச்சுக்கு தரவரிசைப் புள்ளி எதுவும் வழங்கப்படாததால் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.
 இவை அனைத்துக்கும் மேலாக பின்புற தொடை தசை காயத்தால் அவர் அவதிப்படுவதாகத் தெரிவித்தபோது தனது காயம் குறித்து அவர் மிகைப்படுத்திக் கூறுகிறார் என எழுந்த விமர்சனம், அவரை மனதளவில் பாதித்தது. இந்தப் பின்னணியில், அவரது ஆஸ்திரேலியன் ஓபன் வெற்றி மகத்தானது.
 இந்த முறை ஆஸ்திரேலியன் ஓபன் வெற்றியால் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜோகோவிச். இருவரும் 22 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களுடன் ஆடவர் பிரிவில் முதலிடம் வகிக்கின்றனர்.
 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் 10 முறையும் (2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, 2023), விம்பிள்டனில் 7 முறையும் (2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022), யுஎஸ் ஓபனில் 3 முறையும் (2011, 2015, 2018), பிரெஞ்சு ஓபனில் 2 முறையும் (2016, 2021) பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். ஆஸ்திரேலியன் ஓபனில் இவருக்கு அடுத்தபடியாக ஃபெடரர் ஆறு முறை வென்றுள்ளார். இப்போது இருக்கும் வீரர்களில் ஒருவர் கூட ஒரு முறைக்கு மேல் இப்போட்டியில் பட்டம் வென்றதில்லை. எனவே, ஜோகோவிச்சின் இந்த சாதனை முறியடிக்கப்பட இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
 இந்த வெற்றியின் மூலம், சர்வதேச தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிச். டென்னிஸ் வரலாற்றிலேயே ஜெர்மன் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். 374-ஆவது வாரமாக முதலிடத்தில் உள்ள ஜோகோவிச் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை முதலிடத்தில் நீடித்தால், ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை அவர் முறியடிப்பார். ஆடவர் பிரிவில் இவருக்கு அடுத்தபடியாக ஃபெடரர் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 சர்வதேசப் போட்டிகளில் 35 வயதுக்கும் மேல் உடல் தகுதியுடன் போட்டிகளில் பங்கேற்பதே மிகப் பெரும் சாதனையாகும். அதுவும் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அண்மைக்காலமாக பல ஆட்டங்கள் 4 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் நீண்டுகொண்டே செல்கின்றன. 36 வயதாகும் நடால், ஜோகோவிச் போன்றவர்கள் தங்களைவிட 10 வயதுக்கும் குறைவானவர்களைக்கூட நேர் செட்டுகளில் வீழ்த்துவது அவர்களது ஆட்டத்திறனுக்கு சான்றாகும்.
 முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே காலகட்டத்தில் ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் தொடர் வெற்றிகளைப் பெற்றது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஃபெடரர் ஓய்வு பெற்றதால் இப்போது நடாலும், ஜோகோவிச்சும்தான் சர்வதேச டென்னிஸில் கோலோச்சுகிறார்கள். வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஜோகோவிச் கூறியது, சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாகும் -
 "சிட்சிபாஸின் கிரீஸ், எனது தாய்நாடான செர்பியா ஆகிய இரண்டும் சிறிய நாடுகளும் டென்னிஸ் பாரம்பரியம் மிக்கவை அல்ல. ஆனால், நாங்கள் இருவரும் டென்னிஸில் மிகப் பெரிய சிகரத்தை தொட்டுள்ளோம். இளம் வீரர்களின் கனவு பெரிதாக இருக்க வேண்டும். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல.
 கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும்போது நீங்கள் இன்னும் வலிமை அடைவீர்கள்'.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

ரயிலில் எலி, அதிர்ச்சியான பயணி: ரயில்வே துறையின் பதில்?

SCROLL FOR NEXT