தலையங்கம்

நீதிதேவன் மயங்கவில்லை!

26th Apr 2023 04:18 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 பலர் கும்பலாகக் கூடி, சட்டத்தைக் கையிலெடுத்து தண்டிக்க முற்படும் "கும்பல் நீதி' வட இந்திய மாநிலங்களில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். தென்னிந்தியா அதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்திலேயே அதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. படித்தவர்கள் அதிகம் உள்ள, பொதுவுடைமை தத்துவத்தில் நம்பிக்கையுள்ளவர்களின் மாநிலமான கேரளத்தில் மலைவாழ் பழங்குடியின இளைஞர் மதுவின் "கும்பல் கொலை' சமீபத்திய எடுத்துக்காட்டு.
 கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள சின்டெக்கி என்கிற மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தைச் சேர்ந்தவர் மது என்கிற அப்பாவி ஆதிவாசி இளைஞர். 2018 பிப்ரவரி 22-ஆம் தேதி பலர் அடங்கிய கும்பலால் அவர் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பு, எத்தனையோ தடைகளையும், இடையூறுகளையும் தாண்டி சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. மண்ணார்காடு பட்டியலினத்தவர்களுக்கான சிறப்பு நீதிமன்றம், ஐந்தாண்டு விசாரணைக்குப் பிறகு, 16 குற்றவாளிகளில் 14 பேருக்குத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
 இப்படியெல்லாம்கூட மனிதாபிமானமில்லாமல் மக்கள் நடந்து கொள்வார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறது அட்டப்பாடி "கும்பல் கொலை' நிகழ்வு. பலர் ஒருங்கிணைந்து, எந்தவித முறையான விசாரணையும் இல்லாமல் ஒருவரைத் தாக்க முற்படும்போது, அவர்கள் தங்களது மனசாட்சிக்கும், பகுத்தறிவுக்கும் விடை கொடுத்து விடுகிறார்கள் என்பதைத்தான், "கும்பல் தாக்குதல்கள்' உணர்த்துகின்றன.
 அட்டப்பாடி மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியினரான மது என்ற அந்த ஏழை இளைஞர், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அலைந்து திரிந்து கொண்டிருப்பார். வீட்டிற்கு வராமல் மரத்தடியிலும், மலையில் உள்ள குகைகளிலும், தெருவோரங்களிலும் படுத்திருப்பது வழக்கம். ஒருநாள் அட்டப்பாடியில் ஒரு கடையிலிருந்து பசியின் கொடுமையால், உணவுப் பதார்த்தங்களைக் கவர்ந்து சென்றுவிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.
 அவரைச் சிலர் துரத்தியபோது, அவர்களுடன் மேலும் பலர் சேர்ந்து கொண்டனர். தன்னைப் பிடிப்பதற்கு ஒரு கும்பல் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்த மது, மலையிலுள்ள ஒரு குகையில் சென்று பதுங்கிவிட்டார். அவரை அந்தக் கும்பல் அங்கிருந்து நாயை அடிப்பதுபோல நையப் புடைத்து, ஊருக்குள் இழுத்து வந்தது. அவரது வேஷ்டியை அவிழ்த்துக் கைகளைப் பின்புறமாகக் கட்டி, ஆளுக்கு ஆள் தரும அடி கொடுத்தனர். சிலர் கையில் அகப்பட்ட கம்புகளாலும் கம்பிகளாலும் அவரைத் தாக்கினார்கள்.
 அந்த அப்பாவி இளைஞர் வலி பொறுக்க முடியாமல் கதறி அழுவதைத் தங்களது கைப்பேசிகளில் படமெடுத்து ரசித்தனர் சிலர். அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்து "லைக்' பெறும் ஆர்வத்தில் இறங்கினர் வேறு சிலர். கடைசியில் ஒரு முச்சந்தியில் குற்றுயிரும் குலையுயிருமாக மதுவை அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தபோது, மது அநேகமாக இறந்திருந்தார். மருத்துவமனையில் உயிரற்ற நிலையில்தான் அவர் சேர்க்கப்பட்டார்.
 கைப்பேசியில் எடுக்கப்பட்ட விடியோ பதிவுகள், சமூக ஊடகங்களில் பரவியபோது, பெரும் விவாதத்தை எழுப்பியது. அதற்குப் பிறகுதான் சாவகாசமாக காவல்துறை வழக்கைப் பதிவு செய்தது.
 பிப்ரவரியில் நடந்த மதுவின் கொலைக்கு, மே மாதம்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விடியோ பதிவு ஆதாரத்தின் அடிப்படையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கின் விசாரணை நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் தொடங்கியது.
 ஆரம்பம் முதலே மது கொலை வழக்கில் ஒன்றன்பின் ஒன்றாகத் தடங்கல்கள். சிறப்பு அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட்டார். ஆனால், 2018 நவம்பரில் அரசே அந்த நியமனத்தை ரத்து செய்தது. அதற்கு பதிலாக நியமிக்கப்பட்டவர், வழக்கு தொடங்குவதற்கு முன்பே பதவி விலகினார். உயர்நீதிமன்றம், தானே முன்வந்து தனது மேற்பார்வையில் மதுவின் கும்பல் கொலை வழக்கை நடத்த முற்பட்ட பிறகுதான் விசாரணை வேகம் எடுத்தது. விசாரணை தொடங்கியபோது, ஒருவர்பின் ஒருவராகப் பிறழ் சாட்சிகளானார்கள். அவர்களில் பலர் மதுவின் நெருங்கிய உறவினர்கள்.
 2022 ஜூன் மாதம் அரசு புதிய வழக்குரைஞரை நியமித்த பிறகு விசாரணை தொடங்கியது. 127 சாட்சிகளில் 24 பேர் பிறழ் சாட்சிகளானார்கள். அதையும் மீறி, சிறப்பு வழக்குரைஞர் ராஜேஷ் மேனனின் ஆணித்தரமான வாதமும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எம். ரத்தீஷ்குமாரின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காத அணுகுமுறையும், மதுவின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்க வழிகோலியிருக்கின்றன.
 மது செய்தது தவறாகவே இருந்தாலும், அதைத் தட்டிக் கேட்கவோ, அவருக்கு தண்டனை வழங்கவோ தனியொருவருக்கோ, கும்பலுக்கோ அதிகாரம் இல்லை. அதற்கு காவல்துறையும் நீதிமன்றமும் இருக்கின்றன. "கும்பல் நீதி' என்பது நாகரிக சமுதாயத்துக்கும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் ஜனநாயக அமைப்புக்கும் எந்தக் காரணம் கொண்டும் ஏற்புடையதல்ல. மலைவாழ் பழங்குடியினர் மீதும், அடித்தட்டு மக்கள் மீதும் மனிதாபிமானமில்லாமல் நடத்தப்படும் தாக்குதல்கள்தான் நாகரிக சமுதாயமா?
 சற்றும் மனம் தளராமல், உறவினர்களின் எதிர்ப்பையும் சட்டை செய்யாமல் மதுவின் மரணத்துக்கு நீதி பெற ஐந்து ஆண்டுகள் போராடிய அவருடைய தாயார் மல்லியும், சகோதரி சரசுவும் நமக்கு விடுக்கும் செய்தி என்ன தெரியுமா? பழங்குடியினர் போராடவும் துணிந்தவர்கள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT