தலையங்கம்

பெடரரும் செரீனாவும்... | டென்னிஸ் ஜாம்பவான்கள் ஓய்வு குறித்த தலையங்கம்

27th Sep 2022 08:12 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

டென்னிஸ் ஜாம்பவான்களான ரோஜர் ஃபெடரரும், செரீனா வில்லியம்ஸூம் செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருவருமே மிகச்சிறந்த சாதனையாளர்கள். 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த, 41 வயதான ரோஜர் ஃபெடரர் லண்டனில் நடைபெற்ற ராட் லேவர் கோப்பை போட்டியுடன் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24) ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியின் இரட்டையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலுடன் சேர்ந்து களம் இறங்கிய அவர், ஆட்டம் முடிந்த பின் அளித்த பேட்டியில், 'நான் சோகமாக இல்லை, மகிழ்ச்சிதான்' என்று கூறியபோது கண்ணீர் வடித்தார். அவர் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக ஆடுகளத்தில் அவருக்குப் பரம வைரியாக இருந்த ரஃபேல் நடாலும் கண்ணீர்விட்டார். 'ஃபெடரர் விலகிச் செல்லும்போது, எனது வாழ்வின் முக்கிய பகுதியும் அவருடன் செல்கிறது' என்று நடால் கூறியபோது அரங்கமே சோகத்தில் ஆழ்ந்தது.

இருவரும் களத்தில் இருக்கும்போது சூடு பறந்தாலும், அவர்கள் பரஸ்பரம் வைத்திருந்த மதிப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஃபெடரருக்கும் டென்னிஸூக்கும் உள்ள தொடர்பு ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல. 8 வயதிலேயே டென்னிஸ் மட்டையைப் பிடித்தவர் அவர். 1993-94-இல் தனது சொந்த ஊரான பேஸலில் நடைபெற்ற போட்டியில் மைதானத்தில் பந்துகளை சேகரித்து தரும் 'பால் பாய்'-ஆகப் பணியாற்றினார். 1998-இல் தனது 17 வயதில் விம்பிள்டன் போட்டியின் ஜூனியர் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பட்டம் வென்றார். 2001 விம்பிள்டன் போட்டியில் பட்டம் வெல்லவில்லை எனினும், அந்தப் போட்டி அவரது டென்னிஸ் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முன்னர் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பட்டம் வென்றிருந்த அமெரிக்காவின் பீட் சாம்ப்ராûஸ 4-ஆவது சுற்றில் வென்று உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார்.

2003-ஆம் ஆண்டுக்குப் பின் அவருக்கு ஏறுமுகம்தான். அதன் பின்னர், விம்பிள்டன் போட்டியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார். விம்பிள்டன் போட்டியில் 8 முறை, பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஒரு முறை, யு.எஸ். ஓபன் போட்டியில் 5 முறை, ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் 6 முறை என கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஃபெடரர். அதற்குப் பின்னர், அவரது சாதனையை நடால் (22 பட்டங்கள்), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (21) ஆகியோர் முறியடித்தனர்.

ADVERTISEMENT

சர்வதேச அளவிலான 1,526 ஒற்றையர் ஆட்டங்களிலும், 223 இரட்டையர் ஆட்டங்களிலும் பங்கேற்ற போதிலும்,  ஓர் ஆட்டத்தில்கூட காயம் காரணமாக பாதியில் அவர் வெளியேறியது இல்லை என்பதே அவரது உடற்தகுதிக்கு சான்றாகும். சாதனை அளவாக தொடர்ந்து 237 வாரங்கள் உள்பட 310 வாரங்கள் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த அவர், 2018-இல் தனது 36 வயதில் முதல் இடம் பிடித்து அதிக வயதில் முதலிடம் பிடித்தவர் என்ற சிறப்பைப் பெற்றார்.

விம்பிள்டன் போட்டியில் 105 ஆட்டங்கள், ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் 102 ஆட்டங்கள் என இரண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 100 ஆட்டங்களுக்கு மேல் வென்ற ஒரே வீரர், ஒரு ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் இறுதி ஆட்டத்துக்கு மூன்று முறை (2006, 2007, 2009)முன்னேறிய ஒரே வீரர் என அவரது சாதனைப் பட்டியல் நீண்டது. தனது வலது முழங்கால் காயத்துக்காக அவர் அடுத்தடுத்து மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள் அவரது தொடர் விளையாட்டுப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டன.

ஃபெடரர் சாதனைகளுக்கு சற்றும் இளைத்ததல்ல அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் சாதனைகள். ஃபெடரருக்காவது அவர் விளையாடிய காலகட்டத்தில் நடால், ஜோகோவிச் ஆகியோர் கடும் போட்டியாக விளங்கியதுடன் அவரை முந்தவும் செய்தனர். ஆனால், தனது 42-ஆவது பிறந்த நாளை நேற்று (செப்டம்பர் 26) கொண்டாடிய செரீனா பல ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத டென்னிஸ் ராணியாக விளங்கினார் எனலாம். 27 ஆண்டு காலம் கோலோச்சிய அவர், தனது 17 வயதில் யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் பட்டத்தை வென்றார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் 2017-இல் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பட்டம் வென்றார். அண்மையில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்திரேலியன் ஓபனில் 7 முறை, பிரெஞ்ச் ஓபனில் 3 முறை, விம்பிள்டனில் 7 முறை, யு.எஸ். ஓபனில் 6 முறை என 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள், 2 கலப்பு இரட்டையர் பட்டங்களுடன் ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் ஒரு முறை, இரட்டையர் பிரிவில் 3 முறையும் தங்கம் வென்றவர். கிராண்ட் ஸ்லாம் போட்டி
களில் ஒற்றையர் பிரிவில் 10 பட்டங்களை அவர் 30 வயதைக் கடந்த பின்னர் வென்றது சாதனையாகும்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அதை முறியடிக்காதது மட்டுமே செரீனாவுக்கு பெரும் குறையாகும். சர்வதேச அளவில் போட்டியிட உடல் தகுதி மிகவும் முக்கியமானதாகும். ரோஜர் ஃபெடரரும், செரீனா வில்லியம்ஸூம் 41 வயது வரை முழு அர்ப்பணிப்புடன் போராடி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது வருங்காலத் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT