தலையங்கம்

சொன்னதும் செய்ததும்! | ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து குறித்த தலையங்கம்

ஆசிரியர்

உக்ரைன் - ரஷிய போர் சர்வதேச சரக்குப் போக்குவரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. ஆங்காங்கே  சரக்குக் கப்பல்கள் பல்வேறு துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிற்பதும், பயணிக்கும் கப்பல்கள் தாமதமாவதும் வழக்கமாகி இருக்கின்றன. அதனால்  உலகளாவிய நிலையில் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவைக்குத் தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் ஏற்பட்டிருக்கின்றன.

உஸ்பெகிஸ்தான் தலைநகர் சாமர்கண்டில் கடந்த வாரம் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிரச்னையை எழுப்பினார். சர்வதேச அளவில் சரக்குப் போக்குவரத்து சுமுகமாக நடைபெறுவதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு தடையில்லாமல் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே விநியோகச் 
சங்கிலி பாதிப்பில்லாமல் தொடரும் என்பதை சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. ஏற்றுமதி - இறக்குமதி இல்லாமல் சர்வதேச வணிகமோ பொருளாதார மேம்பாடோ கிடையாது என்பதையும் குறிப்பிட்டார். 
ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட 
எஸ்சிஓ (ஷாங்காய் கோ-ஆபரேஷன் ஆர்கனைஸேஷன்) அமைப்பின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் அவையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபை நேரடியாகவே பிரதமர் மோடி குற்றம் சாட்டியபோது, அவரால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. பிரதமர் மோடி எழுப்பியது சரக்குப் போக்குவரத்து குறித்த பிரச்னை.

""மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக அரை லட்சம் டன் கோதுமையும், மருந்துப் பொருள்களும் வழங்க இந்தியா முடிவெடுத்தது. அவற்றை பாகிஸ்தான் வழியாக கொண்டுபோய்ச் சேர்க்க அனுமதி கேட்டு அக்டோபர் 7, 2021-இல் இந்தியா கடிதம் எழுதியது. 

இந்திய வாகனங்களை அனுமதிக்க முடியாது என்று கூறி, கோதுமை கொண்டு போவதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து டிரக்குகள் வாஹா எல்லை வரை வந்து செல்ல அனுமதி தர பாகிஸ்தான் இசைந்தது நவம்பர் 24-ஆம் தேதி'' - இதைக் குறிப்பிட்டு, இடைப்பட்ட கால தாமதத்தால் ஆப்கான் மக்கள் அடைந்த துன்பத்தை சுட்டிக்காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

குறிப்பிட்ட இடங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் சென்று சேர்ப்பதில் தடையும், கால தாமதமும் எத்தகைய பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்தும் என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியது பிரச்னையின் கடுமையை உணர்த்துவதற்காகத்தான். ஆப்கானிஸ்தானின் நிலைமையில்தான் ஆப்பிரிக்காவில் உள்ள சிறு நாடுகள் பலவும், பசிபிக் கடல் நாடுகளும் இருக்கின்றன. 

சர்வதேச அளவில் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் வளர்ச்சியடையும் நாடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பரவலாக, சர்வதேச அளவில் விலைவாசி கட்டுக்கடங்
காமல் உயர்ந்திருக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில், பிரதமர் மோடி எழுப்பிய பிரச்னை இப்போது சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறது. 

ஷாங்காய் விவாதத்துக்கு அடுத்த நாள் இந்தியா திரும்பிய கையோடு தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். உலகுக்கு மட்டுமான உபதேசமாக இல்லாமல், இந்தியாவிலும் அதே பிரச்னை காணப்படுவதை மோடி அரசு உணர்ந்திருப்பதை உணர்த்துகிறது அந்த அறிவிப்பு. 

மக்களின் அன்றாட வாழ்க்கை, அத்தியாவசியப் பொருள்களின் சரக்குப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கிறது.  இப்போதைய நிலையில், ஜிடிபியில் 14% முதல் 15% வரை சரக்குப் போக்குவரத்துக்கான செலவு காணப்படுகிறது. அதை ஒற்றை இலக்கத்துக்கு குறைப்பதுதான் தேசிய சரக்குக் கையாளுகை கொள்கையின் இலக்கு. 

சாலை மார்க்கமான சரக்குப் போக்குவரத்தைக் குறைத்து ரயில் மூலமாகவும், நீர்வழித் தடங்கள் மூலமாகவும் கொண்டு செல்ல முடிந்தால் போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையும். ஜப்பானும், ஜெர்மனியும் அதை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. அந்த நாடுகளில் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு, ஜிடிபியில் 8% மட்டுமே. ஐந்து ஆண்டுகளில் இந்தியாவையும் அந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் சரக்குக் கையாளுகை கொள்கையின் நோக்கம். 

போக்குவரத்துத் துறை எதிர்கொண்டு வரும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, "பி.எம். துரித சக்தி' திட்டத்தை இக்கொள்கை ஊக்குவிக்கும். போக்குவரத்து செலவையும், சேமிப்பு கிடங்குகளின் செலவையும் குறைப்பதுடன், எண்ம முறையிலான நடவடிக்கைகள் மூலம் லஞ்ச ஊழலோ, கால விரயமோ இல்லாமல் சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துவதும் அரசின் திட்டம். 

நவீன போக்குவரத்து வசதிகளால் மட்டுமே இந்தியப் பொருள்கள் சர்வதேச சந்தைகளைச் சென்றடைய முடியும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்க மோடி அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், தங்குதடையில்லா சரக்குப் போக்குவரத்து அத்தியாவசியமாகிறது. 
"பி.எம். துரித சக்தி' திட்டம், துறைமுகங்களை ஒருங்கிணைத்து அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் "சாகர் மாலா' திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து தனது அரசின் தேசிய சரக்கு கையாளுகை கொள்கையை இப்போது வெளியிட்டிருக்கிறார் 

பிரதமர் நரேந்திர மோடி. அதிகரித்துக்கொண்டே போகும் எரிசக்தி செலவும், சுங்கக் கட்டணமும் அதன் இலக்குக்குத் தடைகள் என்பதையும் அரசு உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT