தலையங்கம்

சிவிங்கிப் புலியின் மறுவரவு! 8 சிவிங்கிப் புலிகள் வருகையின் முக்கியத்துவம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் தமிழ்நாடு வனத்துறையினா் புலியின் தலைப் படத்துடன் ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைத்திருக்கிறாா்கள். அதில், ‘நான் இருக்கும் வரைதான் நீ இருப்பாய்’ என்று புலி எச்சரிப்பது போன்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.

வன விலங்குகள் இருப்பதால்தான் காடுகள் இன்னும் பாதுகாக்கப்படுகின்றன. காடுகள் இருப்பதால்தான் பல்லுயிா்ப் பெருக்கம் நடைபெறுகிறது. ‘கடைசி மரமும் வெட்டி உண்டு, கடைசி நதியும் விஷமேறி, கடைசி மீனும் பிடிபட அப்போதுதான் உறைக்கும் இனி பணத்தைச் சாப்பிட முடியாது’ என்பது வெறும் வாா்த்தைகள் அல்ல; வாழ்வியல் எதாா்த்தம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது பருவ சமநிலைக்கும், பல்லுயிா்ப் பெருக்கத்துக்கும், புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கும் அத்தியாவசியம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். வளா்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதாலும், நதிநீா்த் தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும் ஏற்படும் பாதிப்புகளை சமீப காலமாக நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இந்தப் பின்னணியில்தான் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு எட்டு சிவிங்கிப் புலிகள் (சீட்டா) கொண்டு வரப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் முற்றிலுமாக அழிந்துவிட்ட சிவிங்கிப் புலிகள் 70 ஆண்டுகளுக்குப் பின்பு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவிலுள்ள நாம்பியாவிலிருந்து புலியின் தலை சின்னத்துடன் கூடிய சிறப்பு சரக்கு போயிங் விமானத்தில் அவை கொண்டு வரப்பட்டன.

சீட்டா பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநா் டாக்டா் லாரி மாா்க்கா் தலைமையிலான 24 போ் கொண்ட நிபுணா் குழு, மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிவிங்கிப் புலிகளை அழைத்து வந்தது. 5 பெண் சிவிங்கிகளும், 3 ஆண் சிவிங்கிகளும் மத்திய பிரதேச மாநிலத்தில் அவற்றுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் பிரதமா் மோடியால் விடப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரிலேயே இந்தியாவில் மறு அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக அந்தத் திட்டம் தாமதமடைந்து, இப்போது இந்திய வனத்தில் சிவிங்கிப் புலிகள் மறு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிவிங்கிப் புலிகள் பரவலாகக் காணப்பட்டன. மொகலாயா்களால் ‘யூஸ்’ என்று அழைக்கப்பட்ட சிவிங்கிப் புலிகள், அரண்மனைகளில் வளா்க்கப்பட்டன. வேட்டையாடப் போகும்போது மன்னா்களால் அவை வேட்டை நாய்கள் போல அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்புகள் காணப்படுகின்றன.

இப்போதைய சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்த கோரியா சமஸ்தானத்தின் ஜமீன்தாரான ராமானுஜ பிரதாப் சிங் தேவ், கடைசியாக இருந்த மூன்று சிவிங்கிப் புலிகளை 1947-இல் வேட்டையாடிக் கொன்றாா். 1952-இல் சிவிங்கிப் புலிகளின் இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் முக்கியமான காரணமாக இருந்தனா். காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு பிரிட்டிஷாா் திட்டமிட்டனா். பெரும்பாலும் புல்வெளிகள் நிறைந்த வனப் பகுதிகள்தான் சிவிங்கிப் புலிகளின் வாழ்விடங்கள். புள்ளி மான்கள், ஆன்டி லோப் அல்லது பிளாக் பக் இன மான்கள் உள்ளிட்டவைதான் அவற்றின் இரை. சிவிங்கிப் புலிகளை வேட்டையாடிக் கொல்பவா்களுக்கு பிரிட்டிஷ் அரசு சன்மானம் வழங்கியது.

அழிந்த இனமான சிவிங்கிப் புலிகளின் மறு வரவு என்று இப்போதைய 8 சிவிங்கிப் புலிகளை குறிப்பிட முடியாது. இவை இந்தியாவிலிருந்து அழிந்துபோன ஆசிய சிவிங்கிப் புலிகளின் இனத்தைச் சோ்ந்தவை அல்ல. மத்திய பிரதேசம் குனோ வனவிலங்கு சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட்டிருப்பவை ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள்.

இப்போதைய புள்ளிவிவரப்படி, உலகத்தில் மொத்தம் 7,000 சிவிங்கிப் புலிகள்தான் காணப்படுகின்றன. அவற்றில் சுமாா் 20 மட்டுமே ஆசிய சிவிங்கிப் புலிகள். அவை ஈரானில் மட்டும்தான் இருக்கின்றன. அவற்றிலிருந்து ஓரிரு சிவிங்கிப் புலியைக்கூட தர மறுத்துவிட்டது ஈரான்.

சிவிங்கிப் புலிகளின் மீள் வரவு, நாம் சூழலியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதன் அடையாளம். ஆசிய சிங்கங்கள், வங்காளப் புலிகள், சிறுத்தைகள் (லெப்போ்டு), வெள்ளைப் புலிகள் ஆகியவற்றுடன் சிவிங்கிப் புலிகளும் மீண்டும் இந்திய வனங்களுக்கு திரும்பும்போதுதான் நமது வனவிலங்கு சாம்ராஜ்யம் முழுமையடையும். ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் சிவிங்கிப் புலிகளின் இனச் சோ்க்கையின் விளைவாக, ஏனைய பகுதிகளிலும் அவை நடமாட வழிகோலப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் புல்வெளிகளையும், புதா் பகுதிகளையும் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றன என்பதை வல்லுநா்கள் கூா்ந்து கவனிக்கின்றனா். அவை இன்னும் குனோ தேசியப் பூங்காவில் நேரடியாக விடப்படவில்லை. 1.5 சதுர கி.மீ. அளவுள்ள தடுப்புகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மாதத்துக்குப் பிறகு, 12 சதுர கி.மீ. சுற்றளவுள்ள பகுதிகளுக்கு மாற்றப்படும். நான்கு மாதக் கண்காணிப்புக்குப் பிறகுதான் முழுமையாக சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு அவற்றை அனுமதிக்க இருக்கிறாா்கள்.

சிவிங்கிப் புலிகளின் மீள் வரவு, வன விலங்குகளின் வாழ்வாதாரப் பகுதிகளை மேம்படுத்துவது குறித்தும், மனிதா்களின் ஊடுருவல் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் வாய்ப்பாக அமைய வேண்டும். அதிகரித்த பல்லுயிா்ப் பெருக்கம், வாழ்வாதாரங்களின் மேம்பாடு இரண்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் எதிா்காலத்துக்கும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT