தலையங்கம்

ஜ‌ன‌​நா​யக அப‌ஸ்​வ​ர‌ம்!​ அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 13) அறிவித்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட முகவரியில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்தக் கட்சிகள் செயல்படாதது தெரியவந்தது.

மேலும் பிகார், தில்லி, கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தர பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில் 253 கட்சிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த மே 25}ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு உள்ளான கட்சிகளின் எண்ணிக்கை 537. 

2021 செப்டம்பர் வரையிலான கணக்குப்படி, இந்தியாவில் 8 தேசிய கட்சிகள், 54 மாநில கட்சிகள், 2,796 அங்கீகாரமற்ற கட்சிகள் என மொத்தம் 2858 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வாக்கு சதவீதமும் இல்லாமல், எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற மக்கள் பிரதிநிதிகளும்  இல்லாமல் இருக்கும் அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவையாகும். 

அவற்றைப் பதிவு செய்த அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியிருக்கிறது.தமிழகத்தில் பதிவு செய்து ஆறு ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிடாத தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய கட்சி, சமூக சமத்துவப் படை, சக்தி பாரத தேசம், நேஷனல் வெல்ஃபேர் பார்ட்டி, நமது திராவிட இயக்கம், மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், ஹிந்துஸ்தான் நேஷனல் கட்சி ஆகிய 13 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் இப்போது புதிது புதிதாக கட்சிகள் தொடங்கப்படுகின்றன. ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் கட்சிகள் இருக்கும்போது புற்றீசல்போல கட்சிகள் தொடங்கப்படும் மர்மம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. காவல் துறை, அரசு சார்ந்த இடங்களில்  அரசியல் கட்சியினர் என்றால் மதிப்பு கூடுகிறது. அரசியல் கட்சி என்கிற பெயரில் சமுதாயத்தில் குறிப்பாக அரசு அலுவலகங்களில் சலுகை பெறும் நோக்கம்தான் சிலர் கட்சி தொடங்குவதன் காரணம். 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அரசின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படும். தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசும்போது, சிறிய அரசியல் கட்சியாக இருந்தாலும் பெரிய அரசியல் கட்சிகள் அவர்களை மதித்து நடந்து கொள்கின்றனர். இதுபோன்ற கட்சிகளை ஆதரவுக்கும், ஆள் பலத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு பணமும் தரப்படுகிறது.

வரி சலுகைக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பெரு நிறுவனங்களே கூட தங்களின் ஆதரவாளர்களைக் கொண்டு வரி சலுகைக்காக அரசியல் கட்சிகளைத் தொடங்குகின்றன. தேர்தல் நேரத்தில் தங்களுக்கு இத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகவே பெரிய கட்சிகள், பல சிறிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து உருவாக்குகின்றன. 

பெரிய கட்சிகள் தங்களின் செலவுக் கணக்குகளைக் காட்டுவதற்கு இதுபோன்ற சிறிய கட்சிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு பெரிய கட்சி தனக்கான நோட்டீஸ், விளம்பரம் உள்ளிட்டவற்றை சிறிய அரசியல் கட்சிகளின் செலவுக் கணக்கில் காட்டி தயார் செய்து கொள்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அரசின் பல சலுகைகள், பயன்கள் உள்ளன. அவை பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மதிப்பு, சலுகைகளின் அடிப்படையிலானவை.

பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அங்கீகாரம் பெற்றிருந்தாலும் அந்தக் கட்சியினருக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கட்டணம் கோரப்பட்டால் அவர்கள் பிரச்னை செய்வார்கள், வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களுக்கு சுங்கச்சாவடிகளில் விலக்கு அளிக்கப்படுகிறது.கருப்புப் பணத்தைக் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்து அவற்றை வெள்ளையாக்குவதும் நடைபெற்று வருகிறது. 

இதுபோன்ற சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளுக்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன; பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் யாரிடமும் நன்கொடை வசூலித்துக் கொள்ளலாம். அதற்கு வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். மிரட்டி வசூலிப்பதும் உண்டு. 

சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த தகவல்களின் அடிப்படையில் குஜராத், மகாராஷ்டிரம், தில்லி, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா உள்பட நாடு முழுவதும் அங்கீகாரமற்ற கட்சிகளுக்கு சொந்தமான 110 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சோதனை நடத்தினர். 

தேர்தல் நேரத்தில் சிறிய கட்சிகள் பெயரளவுக்கு வேட்பாளர்களை நிறுத்தும். அந்தந்த வாக்குச்சாவடியில் சிறிய கட்சிகளின் சார்பாக முகவர்களின் பெயர் இருந்தாலும் அவர்கள் பெரிய கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவர். இதற்காகவே சிலர் கட்சி அங்கீகாரம் பெற்று அதன்மூலம் ஆதாயமடைய முற்படுகின்றனர். ஒன்றுமே இல்லாத நிலையில் கட்சி தொடங்குபவர்கள் ஒருசில ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாக உயர்ந்துவிடுவதும் உண்டு.

கொள்கை, தொண்டு, மக்கள் நலன் அடிப்படையிலான அரசியல் இயக்கங்கள் இல்லாத நிலையில் பணம் மட்டுமே அரசியலின் குறிக்கோளாக மாறியிருக்கிறது. லாபகரமான முதலீட்டுக்கான களமாக அரசியல் மாறிவிட்டிருக்கும் நிலையில் போலி அரசியல் கட்சிகளை களையெடுக்கும் முயற்சி வரவேற்புக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT