தலையங்கம்

ஆறுதலுக்கு சில மாறுதல்கள்! | அத்தியாவசிய மருந்துகளின் தேசிய திருத்தப் பட்டியல் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் (என்எல்இஎம்) வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 384 மருந்துகள் இடம் பெற்றிருக்கின்றன. புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகள், நுண்ணுயிரி எதிா்ப்புக்கான ஆன்டிபயாட்டிக் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட 34 புதிய மருந்துகள் சோ்க்கப்பட்டுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் 1996-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2015-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பட்டியல் வெளிவந்தது. அந்தப் பட்டியலை மறு ஆய்வு செய்ய தேசிய நிலைக்குழு ஒன்றை 2018-ஆம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்தது. பல்வேறு மருத்துவ நிபுணா்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு இப்போது தேசிய பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, இரினோ டெகன் ஹெச்சிஐ டிரைஹைட்ரேட், லெனலிடோமைடு, லியூப்ரோலைடு அசிடேட் ஆகிய நான்கு முக்கிய புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளும், ஐவா்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம் போன்ற தொற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளும் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தில் (ரோட்டா வைரஸ்) தடுப்பூசிகளும் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

சா்க்கரை நோய், புற்று நோய், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், நிமோனியா தொடங்கி பல்வேறு நோய்களுக்குமான 34 புதிய மருந்துகள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. விலை கட்டுப்பாட்டுக்கான அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டும், வெளியிடுவதற்கு ஓராண்டு காலதாமதம் ஏன் ஏற்பட்டது என்பது புதிராக இருக்கிறது. அதற்குக் குறிப்பிடத்தக்க காரணம் இல்லாவிட்டாலும், காலதாமத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டிருக்கும் மருந்துகளின் பட்டியலை வரவேற்கத்தான் வேண்டும்.

காப்புரிமை உள்ள மருந்துகளுக்கும் விலை நிா்ணயம் என்பது துணிச்சலானது. அதே நேரத்தில், பிளீச்சிங் பவுடா் போன்ற கிருமிநாசினிகளைப் பட்டியலில் இருந்து அகற்றியது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே பட்டியலில் இருந்த 26 மருந்துகளை அகற்ற வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. அதனால், விலைக் கட்டுப்பாடுள்ள மருந்துகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பது மனக்குறையாகத் தொடா்கிறது.

ஷெட்டியூல்ட் பட்டியலில் இல்லாத, விலை நிா்ணயம் செய்யப்படாத மருந்துகளின் விலையை ஆண்டுதோறும் 10% அதிகரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. அதனால், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலும், அரசின் தலையீடும் மருந்துகளின் விலையில் அவசியமாகிறது. 2015-க்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் 354 மருந்துகள் உள்ளன. இவற்றின் விலை நிா்ணய அதிகாரம் தேசிய விலை நிா்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது மிகப் பெரிய ஆறுதல்.

அதே நேரத்தில், புற்று நோய் சிகிச்சைக்கான அதிக விலையும், வீரியமும் கொண்ட பல மருந்துகள் இப்போதும்கூட விலைக்கட்டுப்பாட்டுப் பட்டியலில் இல்லை. புற்று நோய் சிகிச்சையில் புதிய மருந்துகளும், சிகிச்சை முறைகளும் அனுதினமும் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல, மருந்து விலை கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகள் பட்டியலிலும் இல்லை; ஆணையத்தின் அதிகார வரம்பிலும் இல்லை.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் அதிக அளவில் புற்று நோய்க்கான மருந்துகளை இணைக்க நாம் ஏன் தயங்குகிறோம், பின்தங்குகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. விலை உயா்ந்த புற்று நோய் மருந்துகள் பலவும் இப்போதும்கூட சாமானியா்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவற்றைப் பட்டியலில் சோ்க்காததால் நல்ல வாய்ப்பை ஆணையம் இழந்திருக்கிறது.

சா்க்கரை நோய் சிகிச்சையில் முக்கியமான இன்சுலின் க்ளாா்ஜின் ஊசி மருந்து, டெனேலிக்லிப்டின் மாத்திரை ஆகியவை சோ்க்கப்பட்டிருப்பதை வரவேற்கலாம். சா்க்கரை நோய் சிகிச்சைக்குத் தேவையான பல புதிய மருந்துகளும் இந்தியாவில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி இல்லாமல் இருப்பதும் ஆணையத்தின் கவனத்தைப் பெறாதது வருத்தமளிக்கிறது. அபூா்வ வியாதிகளுக்கான மருந்துகளும் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அன்றாடம் மாறுகின்ற மருத்துவ கண்டுபிடிப்புகளும், சிகிச்சை முறைகளும் காலதாமதத்தைத் தவிா்க்க வேண்டிய நிா்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கின்றன. புதிய தீநுண்மிகள் உள்பட அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இல்லாவிட்டாலும், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலும், விலை நிா்ணயமும் அவசியம். இப்போதைய பட்டியலை உருவாக்க ஏழு ஆண்டு காலம் தாமதம் ஏன் என்பதும், அடுத்த பட்டியலுக்கான இலக்கு நிா்ணயிக்கப்படாததும் நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது.

ஆண்டுதோறும் இந்தியாவில் மருந்துகளின் விற்பனை 1 லட்சம் கோடிக்கும் அதிகம் என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. அதனால், ஏழு ஆண்டு காலமாதத்தின் பின்னால் மருத்துத் தயாரிப்பு நிறுவனங்களின் தலையீடும், அழுத்தமும் இல்லாமல் இருந்திருக்காது.

பெரும்பாலான குடும்பங்களில் மாதந்தோறும் கணிசமான தொகை மருந்துக்காவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் செலவாகிறது. மருந்தின் விலையில் சிறிய அளவிலான மாற்றமும் சாமானியனுக்கு மிகப் பெரிய ஆறுதல். விலை நிா்ணயத்தில் ஏற்படும் தாமதம், மருந்து நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம். இதை மத்திய அரசு உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT