தலையங்கம்

மாற்றமும் பாதிப்பும்! | மின்சார வாகனத் தயாரிப்பு குறித்த தலையங்கம்

29th Oct 2022 05:42 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

உலகளாவிய அளவில் மோட்டாா் வாகனத் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன மின்சார வாகனங்கள். ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் ஓா் ஆண்டுக்கு முன்பு நடந்த ஐ.நா. சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில், 2040-க்குள் படிப்படியாக புதைபடிவ எரிசக்தி வாகனங்களை அகற்றி, மின்சார வாகனங்களுக்கு மாறுவது என்கிற முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

‘ஜெனரல் மோட்டாா்ஸ்’, ‘ஃபோா்டு’, ‘மொ்சிடஸ் பென்ஸ்’, ‘வோல்வோ’ உள்ளிட்ட உலகின் ஆறு முக்கியமான மோட்டாா் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், 30 நாடுகளும் அந்த மாநாட்டில் பங்கு பெற்றன. டோயோட்டா, வோக்ஸ் வேகன், நிசான் - ரெனால்ட் நிறுவனங்கள் பங்குபெறவில்லை. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளும் கலந்துகொள்ளவில்லை. மாநாடு முன்வைத்த 2040 இலக்கை எட்டமுடியுமா என்கிற கேள்வி அப்போதே எழாமல் இல்லை.

கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு விலை உயா்ந்த சொகுசு மகிழுந்துகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது என்பதால், மின்சார வாகனங்களுக்கான வரவேற்பும் அதிகரிக்கும் என்று அவை கருதுகின்றன. ‘மொ்சிடஸ் பென்ஸ்’, ‘பிஎம்டபிள்யு’ நிறுவனங்கள் ரூ. ஒரு கோடிக்கும் அதிகமான விலையுள்ள மின் மகிழுந்துகளை சந்தைப்படுத்தியிருக்கின்றன. ஏற்கெனவே இ-டிரான் என்கிற பெயரில் அறிமுகப்படுத்திய தனது மின் மகிழுந்தின் உயா்மதிப்பு வாகனத்தை ‘ஆடி’ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

டாடா மோட்டாா் நிறுவனத்தின் ‘டியாகோ’ மின் மகிழூந்தை ரூ. 9 லட்சத்துக்கும் கீழே சந்தைப்படுத்தும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான போட்டி சூடு பிடித்திருக்கிறது. டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின், மோட்டாா் வாகன விற்பனையில் மின் மகிழுந்தின் விற்பனை தற்போது 7% மட்டுமே. இந்த நிதியாண்டின் முடிவுக்குள் 50,000 மின் மகிழுந்துகளும், அந்த எண்ணிக்கையை அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பாக்குவது என்றும் அந்த நிறுவனம் இலக்கு நிா்ணயித்திருக்கிறது.

டாடா மோட்டாா் நிறுவனம் ஆரம்பத்தில் தில்லியிலும், மும்பையிலும் மட்டுமே சந்தைப்படுத்திய மின் மகிழுந்து, இப்போது இந்தியாவின் 40 நகரங்களில் விற்பனையாகிறது. அவற்றை இரண்டாவது மகிழுந்தாக இல்லாமல், தங்களது அன்றாட பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் குடும்ப வாகனமாக 75% வாடிக்கையாளா்கள் வாங்குவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. மாருதி நிறுவனமும் மின் மகிழுந்து தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கான மின்கலத் தயாரிப்பிலும் இறங்க இருக்கிறது.

ஏற்கெனவே ‘எம்ஜி’ நிறுவனத்தின் ரூ. 25 லட்சத்துக்கும் குறைவான மின் மகிழுந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கி.மீட்டருக்கு ரூ.1 மட்டுமே செலவாகிறது என்பது அதன் வரவேற்புக்குக் காரணம், ரூ.60 லட்சம் மதிப்புள்ள ‘ஹுண்டாய்’ நிறுவனத்தின் ‘கோனா’, ‘கியா’ நிறுவனத்தின் ‘இவி6’ ஆகியவை ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 528 கி.மீ. பயணிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

உலக அளவிலும் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிரிட்டனில் 1.75 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. 2030-க்குள் அமெரிக்காவில் விற்பனையாகும் பாதிக்குப் பாதி மோட்டாா் வாகனங்கள், மின்சார வாகனங்களாக இருக்கும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறாா். தற்போது அமெரிக்காவில் மின்சார வாகனங்களின் பங்கு வெறும் 4% மட்டுமே.

மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை ‘டெஸ்லா’ நிறுவனத்துடன் முதல் இடத்துக்கான போட்டியில் சீனா இருக்கிறது. உலகின் எல்லா பகுதிகளிலும் முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சீன மின்சார வாகனங்கள் சந்தையைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கின்றன.

சீன நிறுவனமான ‘பிவைடி’, உலக மின்பேருந்து தயாரிப்புத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவிலும், உலகின் ஏனைய பகுதிகளிலுமாக இதுவரை 70,000 மின்பேருந்துகளை அந்த நிறுவனம் சந்தைப்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலும் ‘ஓலெக்ட்ரா கிரீன் டெக்’ நிறுவனத்துடன் இணைந்து புணே, மும்பை, தில்லி நகரங்களில் மின்பேருந்துகளை சந்தைப்படுத்துகிறது. ‘டோயோட்டா இன்னோவா’வுக்குப் போட்டியாக ரூ. 29 லட்சத்தில், ஒரு மின்னேற்றத்தில் 520 கி.மீ. பயணிக்கும், ‘இ6’ மின்மகிழுந்துகளை விரைவில் சந்தைப்படுத்த இருக்கிறது.

மின்சார வாகனங்கள் காலத்தின் கட்டாயம்தான் என்றாலும், பல்வேறு அடிப்படை பிரச்னைகளையும், சில இயந்திரக் கோளாறுகளையும் எதிா்கொள்ள நோ்கிறது. மிகப் பெரிய பிரச்னையாக எழுந்திருப்பது அவற்றின் மின்கலம் தீப்பிடிப்பது. சாதாரண வாகனங்களின் தீயை அணைப்பதைப்போல, மின்சார வாகனங்களில் நெருப்பை அணைத்துவிட முடியாது. லித்தியம் மின்கலன்கள் சட்டென தீப்பற்றிக்கொள்ளக் கூடியவை என்பதால் மின்சார வாகனங்களை வாங்குவதில் மக்கள் மத்தியில் சற்று அச்சம் நிலவுகிறது.

லித்தியம் அயான் மின்கலன்களைத் தயாரிக்க கோபால்ட், லித்தியம், கிராஃபைட், மேங்கனீஸ் ஆகியவை தேவைப்படுகின்றன. மின்சார வாகனங்களுக்கான மின்கலன்களைத் தயாரிக்க தேவையான அந்த கச்சாப் பொருள்கள் அதிக அளவில் தொடா்ந்து கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

இந்தியாவின் மோட்டாா் வாகனத் துறை உற்பத்தி ஜிடிபியில் 40% வகிக்கிறது. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. மின்சார வாகனங்களின் அறிமுகம் பலரது வேலையிழப்புக்கும் காரணமாகக் கூடும்.

புதுமையையும் மாற்றத்தையும் தடுத்துவிட முடியாது; அதனால் ஏற்படும் இழப்பையும் பாதிப்புகளையும் தவிா்க்கவும் முடியாது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT