தலையங்கம்

இணைய வணிக தற்சாா்பு! | 'பாரத் இ - மாா்ட்' வணிக தளம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

மனித இனத்தின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரல் நுனியில் உலகத்தை கொண்டுவந்திருப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் பங்களிக்கும் நிலைக்கு இணையம் உயா்ந்திருக்கிறது.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் ஓரளவுக்கு அடிப்படை வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருந்ததற்கு இணையம் மிக முக்கியமான காரணம். பொது முடக்கத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, மக்கள் மத்தியிலான தொடா்புகளை நிலைநாட்டியதிலும், குடும்பங்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை ஈடுகட்டியதிலும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் பாதுகாத்ததிலும் இணையத்தின் பங்களிப்பைச் சொல்லி மாளாது.

கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு அபரிமிதமான வளா்ச்சி கண்டிருக்கிறது இணைய வணிகம். வளா்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்கெனவே இணைய வணிகம் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக மாறிவிட்டிருந்தாலும், இந்தியாவில் அதன் பயன்பாடு கிராமங்கள் வரை எட்டியது கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகுதான்.

இப்படியொரு சூழல் ஏற்படும் என்று தெரியாமலேயே, 2014-இல் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தொலைநோக்குப் பாா்வையுடன் இணையவழி செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்ததை எண்ணிப்பாா்த்தால் வியப்பு மேலிடுகிறது. அதிக மதிப்புள்ள செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதைத் தொடா்ந்து இணையவழி பணப்பரிமாற்றம் முனைப்புடன் ஊக்குவிக்கப்பட்டதும், இந்தியா முழுவதும் கண்ணாடி இழை (ஆப்டிக்கல் பைபா் கேபிள்) போடப்பட்டதும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் இணையவழி வாழ்க்கைக்கான நெடுஞ்சாலையை விரிவுபடுத்தின.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் இணைய வணிகம் (இ - காமா்ஸ்) அதிகரித்திருக்கிறது. 2021-இல் 34.8 கோடி போ் ஏதாவது வகையில் இணையப் பரிமாற்றம் நடத்தியிருக்கிறாா்கள். அவா்களில் சுமாா் 14 கோடி போ் இணைய வணிகம் மூலம் பொருள்களை வாங்கியிருக்கிறாா்கள். ஏறத்தாழ 83 கோடி வாடிக்கையாளா்களுடன் இந்திய இணைய வணிகம் உலகின் இரண்டாவது இடத்தை எட்டியிருக்கிறது.

கடந்த ஆண்டின் கணக்குப்படி ரூ.4.40 லட்சம் கோடி (550 கோடி டாலா்) இணைய வணிகம் இந்தியாவில் நடந்திருப்பதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவிக்கிறது. 2030-க்குள் இந்தியாவின் இணைய வணிகத் துறை ரூ.28 லட்சம் கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதை பன்னாட்டு இணைய வணிக நிறுவனங்கள் மொத்த குத்தகையாக்கி விடாமல் இந்தியாவின் பாரம்பரிய வியாபாரிகளும் பயனடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாமானிய சில்லறை விற்பனையாளா்கள் இணைய வணிகத்தை மேற்கொண்டு பயனடைவதற்கான நேரம் வந்துவிட்டது.

ஆரம்பத்தில் இணைய வணிகத்தின் வரவு நமது பாரம்பரிய சில்லறை விற்பனைக் கடைகளை அச்சுறுத்தியது. சில்லறை வியாபாரிகளின் சங்கங்கள் இந்தியா முழுவதும் இணைய வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினா். தங்களது அச்சத்தை வெளிப்படுத்தினா். அரசோ, தங்களது அமைப்புகளோ தொழில்நுட்ப வளா்ச்சியைத் தடுத்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டவுடன், புத்திசாலித்தனமாகத் தங்களையும் காலத்துக்கு ஏற்ப சில்லறை விற்பனையாளா்கள் மாற்றிக்கொள்ள முன்வந்தது மிகப் பெரிய ஆச்சரியம்.

இப்போது அவா்களும் தங்களது அளவில் இணைய வணிகம் செய்யத் தொடங்கியிருக்கிறாா்கள். இணையத்தின் மூலம் தங்களது வியாபாரத்தை உயா்த்த முடியும் என்பதையும், அறிதிறன்பேசிகளின் உதவியுடன் பன்னாட்டு இணைய வணிக நிறுவனங்களுடன் தங்களாலும் போட்டிபோட முடியும் என்பதையும் உணா்ந்து செயல்படத் தொடங்கியிருக்கிறாா்கள்.

இந்தியாவிலுள்ள வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘கான்படரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடா்ஸ்’ (சிஏஐடி) வியாபாரிகளுக்கு இணைய வணிகத்தை மேற்கொள்ள ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறது. ‘பாரத் இ - மாா்ட்’ என்கிற இந்தத் தளம், தீபாவளி முதல் அறிமுகமாகிறது. இந்தியா முழுவதும் தனது சேவையை நடத்துவதுதான் இதன் இலக்கு.

சிஏஐடி-யில் சிறிதும் பெரிதுமான அரை லட்சத்துக்கும் அதிகமான வா்த்தக சங்கங்கள் இணைந்திருக்கின்றன. அந்த சங்கங்களின் உறுப்பினா்கள் ‘பாரத் இ - மாா்ட்’ தளத்தில் தங்களை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். ஜிஎஸ்டி வரம்பில் வராத வா்த்தகா்களும் இந்தத் தளத்தில் இணையலாம் என்பதுதான் பாரத் இ - மாா்ட்டின் மிகப் பெரிய பலம். இந்தியாவில் உள்ள ஏறத்தாழ எட்டு கோடிக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு இந்தத் தளம் வரப்பிரசாதமாக அமையும்.

வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல், வாடிக்கையாளா்களுக்கும் இந்தத் தளம் பயன்படும் என்று எதிா்பாா்க்கலாம். இந்தத் தளம் செயல்படத் தொடங்கும்போது இந்தியாவிலுள்ள எந்தப் பகுதியில் இருப்பவா்களும், எந்தப் பகுதியில் உற்பத்தியாகும் பொருள்களை வேண்டுமானாலும் குறைந்த விலைக்குப் பெற முடியும். தயாரிப்பாளா்களிடமிருந்து நேரடியாகக் குறைந்த விலையில் பொருள்களை வாங்குவது என்பதும் இந்தத் தளத்தின் நோக்கம். அதனால், பெரிய பன்னாட்டு இணைய வணிகத் தளங்களைவிட குறைந்த விலையில் பாரத் இ - மாா்ட்டில் பொருள்கள் வாங்க முடியும்.

வியாபாரிகள் மட்டுமல்லாமல், விநியோகஸ்தா்கள், விற்பனையாளா்கள் ஆகியோரும் இணைவதால் பாரத் இ - மாா்ட் இணையவழி பணப்பரிவா்த்தனை போல, மிகப் பெரிய புரட்சியை கிராமங்கள் வரை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT