தலையங்கம்

விக்ராந்த்தைத் தொடர்ந்து பிரச்சண்ட்!|விமானப்படையில் இணைக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியிருப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பு தொடர்பான அம்சங்களிலும் வலிமை மிக்கதாக மாறி வருகிறது. ராணுவ தளவாட உற்பத்தியில் தொடங்கி, போர் விமானங்கள், போர் விமானக் கப்பல்கள் என்று இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தற்சார்பு முயற்சியில் இறங்கியிருப்பதை ஏனைய நாடுகள் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
 ஜூன் மாதம் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்காவல் படையின் எம்கே-3 க்வாட் ரன்னில் இணைக்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டர், சுயசார்பு தயாரிப்பில் முக்கியத் திருப்பமாக பார்க்கப்பட்டது.
 அதைத் தொடர்ந்து, ஒருமாதம் முன்பு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், இந்திய கடற்படையில் இணைந்தது. இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைந்திருக்கின்றன. லைட் காம்பாக்ட் ஹெலிகாப்டர் (எல்சிஹெச்) என்று அழைக்கப்படும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புத் துறையில் நாம் படைத்திருக்கும் புதிய சாதனை.
 இந்திய விமானப்படைக்கு 10 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களும், அதேபோல ராணுவத்துக்கு ஐந்து ஹெலிகாப்டர்களும் இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது. உலகிலேயே அதிக எடையில்லாத ஹெலிகாப்டர்கள் என்பது மட்டுமல்லாமல், இதன் 45% பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பது பெருமிதத்துக்குரிய தகவல். வருங்காலத்தில் முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பாக மாறுவதுதான் இலக்கு.
 "அச்சமில்லாத' என்கிற அர்த்தத்தில் இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு "பிரச்சண்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 5.8 டன் எடையுள்ள இந்த ஹெலிகாப்டர்களை இரவு - பகல் என அனைத்து கால நிலைகளிலும் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆயுதங்களுடனும், ஏனைய போர்க் கருவிகளுடனும் 15,000 அடி உயரமுள்ள இடங்களில்கூட இறங்கவும், கிளம்பவும் முடியும் என்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு.
 20,000 அடி உயரத்தில்கூட பறக்கக்கூடிய திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தில் உள்ள ஏனைய ஹெலிகாப்டர்கள் அனைத்தையும்விட திறன் மிக்கவை. இரட்டை எஞ்சின்களைக் கொண்ட இந்தத் தாக்குதல் ஹெலிகாப்டர்களில், வான்வெளி ஏவுகணைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. 20 மிமீ தர்ரட் துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றுடன்கூடிய இந்த ஹெலிகாப்டர்கள், மலைப்பகுதி தாக்குதல்களுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. மிக அதிக உயரங்களில்கூட எதிரிகளின் படைப் பிரிவுகள், டாங்குகள், பதுங்குக் குழிகள், டிரோன்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் ஊடுருவல் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள பயன்படும்.
 1999 கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஊடுருவிகள் இமயமலையின் பல சிகரங்களில் பதுங்கி தாக்குதல் நடத்தினர். அதை எதிர்கொள்ள போஃபர்ஸ் பீரங்கிகள் பெருமளவில் உதவின. ஆனால், வான்வழித் தாக்குதல் நடத்த தேவையான ஹெலிகாப்டர்கள் நம்மிடம் இருக்கவில்லை. இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவெடுத்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது.
 இந்த வகை ஹெலிகாப்டரை உருவாக்க அடுத்த 10 ஆண்டுகள் திட்டமிடலும், முயற்சிகளும் தொடர்ந்தன. 2010 முதல் 2019 வரை பல சோதனைகள் நடத்தப்பட்டன. 2015-இல் சியாச்சின் மலைச் சிகரத்தில் இறக்கி அதன் செயல்திறன் சோதிக்கப்பட்டது. 2020-இல் சீனாவுடன் தொடங்கிய எல்லை பிரச்னையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு அதன் திறன் உறுதிபடுத்தப்பட்டது.
 கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி 334% அதிகரித்திருக்கிறது. 75-க்கும் அதிகமான நாடுகளுக்கு நாம் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம். நம்முடைய தேஜஸ் இலகுரக தாக்குதல் விமானங்களை வாங்க மலேசியா, ஆர்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. இப்போதைய பிரச்சண்ட் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களும் அதேபோல பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடும்.
 சமீபத்தில் பழைய ரஷியாவில் தயாரிக்கப்பட்ட எம்ஐ-25, எம்ஐ-30 ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக இந்திய விமானப்படை அமெரிக்க ஹெலிகாப்டர்களை வாங்கியது. ஒருபுறம் ராணுவ தளவாட ஏற்றுமதி பெருமிதம் அளிக்கிறது என்றாலும், உலகிலேயே மிக அதிகமான ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யும் நாடாகவும் இந்தியா இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் தாக்குதல் விமானங்களும், பிரச்சண்ட் தாக்குதல் ஹெலிகாப்டர்களும் முழுமூச்சில் தயாரிக்கப்பட்டால் அந்நிய இறக்குமதிகளை நாம் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
 உணவோ, எரிசக்தியோ, ராணுவ தளவாடமோ. எதுவாக இருந்தாலும் சுயசார்பு மட்டுமே எந்தவொரு நாட்டையும் வலிமைப்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT