தலையங்கம்

விளையாட்டு விதிமீறல்!|சர்ச்சைகளுக்கு நடுவே கால்பந்தாட்டம் நடத்தும் கத்தார் குறித்த தலையங்கம்

30th Nov 2022 04:07 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

உலகப்போர் காரணமாக 1942, 1946 இரண்டு ஆண்டு போட்டிகளைத் தவிர, அதன் 92 ஆண்டு வரலாற்றில், "பிஃபா' என்று பரவலாக அறியப்படும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி தலைமுறைகளைக் கடந்து பயணித்து வருகிறது. உலகிலுள்ள அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் மிக அதிகமான ரசிகர்களைக் கொண்டது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கால்பந்து போட்டிதான்.
 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடாக கத்தார் தேர்வு பெற்றது முதலே சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. கச்சா எண்ணெய் வயல் இருப்பதால் பணக்கார நாடு என்கிற ஒரேயொரு தகுதியைத் தவிர, உலகக் கோப்பையை நடத்துவதற்கு எந்தவிதத்திலும் தகுதியில்லாத நாடு என்று உலகம் முழுவதும் கத்தாருக்கு எதிரான மனநிலை காணப்பட்டது.
 2010-இல் போட்டிக்கான வாய்ப்பை கத்தார் பெற்றபோது, அந்த நாட்டில் ஓரளவுக்கு சர்வதேசத் தரத்தில் ஒரேயொரு கால்பந்தாட்ட மைதானம்தான் அமைந்திருந்தது. கால்பந்து விளையாடுவதற்கான தட்பவெப்பநிலை அங்கு இல்லை. வலிமையான கால்பந்தாட்டக் குழு இருக்கிறதா என்றால் கிடையாது. இதற்கு முன் கத்தார், உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றதுகூட இல்லை. அந்த பின்னணியில்தான், "பிஃபா' கத்தாருக்கு அந்த வாய்ப்பை வழங்கியது.
 கத்தாருக்கு 2022 உலகக் கோப்பைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோது இதற்குப் பின்னால் பெட்ரோல் பணம் "பிஃபா' நிர்வாகிகளுக்கு வாரி இறைக்கப்பட்டிருக்கிறது என்று ஜெர்மானிய பத்திரிகைகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டின. கத்தார் நாட்டில் காணப்படும் மனித உரிமை மீறல் சுட்டிக்காட்டப்பட்டது. தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகூட இல்லாமல் நடத்தப்படுவது விமர்சிக்கப்பட்டது. ஓரினச் சேர்க்கை அனுமதிக்கப்படுவதில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. மைதானத்தில் மது பயன்படுத்த அனுமதியில்லை என்பதை மேலை நாட்டு ஊடகங்கள் விமர்சித்தன.
 எல்லாமே உண்மை. தெற்காசியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 6,500 தொழிலாளர்கள் கடந்த 12 ஆண்டுகளில் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் கால்பந்தாட்ட போட்டிக்கும் தொடர்பில்லை என்று கத்தார் அரசு மறுத்தாலும், அதற்கான கட்டமைப்புப் பணிகள்தான் மரணத்துக்குக் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கொத்தடிமைகளாக அவர்கள் நடத்தப்பட்டதும், அவர்களது கடவுச்சீட்டுகள் கைப்பற்றி வைக்கப்பட்டதும் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.
 12 ஆண்டுகளில் உலகத் தரத்திலான கால்பந்து மைதானங்கள்; உலகெங்கிலிருந்தும் வந்து குவியும் 12 லட்சம் பார்வையாளர்களும் நூற்றுக்கணக்கான விளையாட்டுக் குழுவினரும் தங்குவதற்கு விடுதிகள், உணவகங்கள் என்று கத்தார் தயாரானது பிரமிப்பூட்டும் செயல்பாடு. இதற்காக 220 பில்லியன் டாலர் (ரூ. 22,000 கோடி) செலவிட்டிருக்கிறது. தட்பவெப்ப நிலைமையை எதிர்கொள்ள, முதன்முதலாக குளிர்காலத்தில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுகிறது.
 விமர்சனங்களைத் தொடர்ந்து, தனது தொழிலாளர் நலச்சட்டங்களில் சில திருத்தங்களைக் கத்தார் மேற்கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறல் என்பதை ஒரு குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. உலகிலுள்ள 195 நாடுகளில் 153 நாடுகள், அம்னாசிடி இன்டர்நேஷனல் அறிக்கையில் மனித உரிமை மீறலுக்காக விமர்சிக்கப்படுகின்றன.
 1934-இல் பெனிட்டோ முசோலினியின் இத்தாலியிலும், 1978-இல் சர்வாதிகார ஆர்ஜென்டீனாவிலும், 1994-இல் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவிலான இனக்கலவரம் நடந்தபோது லாஸ் ஏஞ்சலீஸிலும், 2018-இல் கம்யூனிஸ சர்வாதிகாரம் நடக்கும் ரஷியாவிலும் உலகக் கோப்பை நடத்தலாமென்றால், கத்தாரில் நடத்துவதில் குற்றம் காண முடியாது.
 ஆசியாவும் ஆப்பிரிக்காவும் சர்வதேச அரங்கில் அவற்றுக்கான முக்கியத்துவம் பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்தியாவை ஒதுக்கிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டை சிந்திக்க முடியாது. சீனாவை அகற்றி நிறுத்தி விட்டு ஒலிம்பிக் போட்டி கிடையாது. ஐரோப்பிய கால்பந்தாட்டக் குழுக்கள், வளைகுடா நாடுகளின் நன்கொடையில்தான் செயல்படுகின்றன. அதனால், கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படுவதில் விமர்சிக்க ஒன்றுமில்லை.
 இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக், மதநல்லிணக்கத்தைக் குலைப்பதற்காகவும், வெறுப்புப் பேச்சுக்காகவும் இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டு, மலேசியாவில் தஞ்சம் அடைந்திருப்பவர். அவர் மீதான குற்றங்கள் சரியா, தவறா என்பது வேறு விஷயம். ஆனால், ஜாகீர் நாயக் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி. மலேசியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் 16 இஸ்லாமிய பிரசாரகர்களில் ஒருவர். பிரிட்டனும், கனடாவும் துவேஷ பிரசாரத்துக்காக அவரைத் தடை செய்திருக்கின்றன. அவர் உலகக் கோப்பையை ஒட்டி கத்தார் வந்திருக்கிறார்.
 நாங்கள் அவரை அழைக்கவில்லை என்பது கத்தார் அரசின் விளக்கம். உலகக் கோப்பை போட்டி நடக்கும் வேளையில், யார் யார் வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும், நுழைவு அனுமதி வழங்குவதும் கத்தார் அரசுதானே? ஜாகீர் நாயக்கை அரசு அழைக்காமல் இருக்கலாம். ஆனால், நுழைவு அனுமதி வழங்கி இருக்கலாமா? கத்தார் அரசு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது.
 உலகக் கால்பந்தாட்ட போட்டியை நடத்தி தனது குற்றம் குறைகளை மறைக்க நினைப்பதும், ஜாகீர் நாயக்கிற்கு நுழைவு அனுமதி வழங்கியதும் கத்தார் அரசின் ஃபெளல் ப்ளே, அதாவது, விளையாட்டு விதிமீறல், வேறென்ன?
 

ADVERTISEMENT
ADVERTISEMENT