தலையங்கம்

முயற்சியின்மை அல்லால் வேறென்ன?|குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றிய தலையங்கம்

24th Nov 2022 03:09 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. பள்ளியில் படித்து கல்வியறிவு பெற்று வருங்கால சமுதாயம் மேம்பட வேண்டும். கல்விக்குத் தடையாக வறுமை இருக்கக்கூடாது என்பதையும் மறுப்பார் யாருமில்லை.
 வளர்ச்சியடைந்த நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலுமாக இல்லை என்பதுடன், குழந்தைகளின் நலன் பேணுதல் என்பதை சட்டபூர்வமாகவே நடைமுறைப்படுத்துகிறார்கள். பெற்றோர்களே ஆனாலும்கூட, தங்கள் குழந்தைகளுக்குக் கோபத்தில் ஊறு விளைவிப்பதை சட்டம் அங்கே அனுமதிப்பதில்லை. குழந்தைகளின் வளர்ப்புமுறை கூட விதிமுறைகளுக்கு உட்பட்டது. அந்த இலக்கை அடைய இந்தியா வெகுதூரம் பயணித்தாக வேண்டும்.
 சாலையோரங்களில் குழந்தைகளைக்காட்டி இரந்து பிழைப்பவர்களும், குழந்தைகளை நேரடியாகக் கையேந்த வைப்பவர்களும், நாற்சந்திகளில் நிற்கும் வாகனப் பயணிகளிடம் குழந்தைகள் மூலம் பொருள்களை விற்கச் செய்பவர்களும் இந்தியாவின் பெருநகரங்கள், சிறு நகரங்கள் என்கிற வேறுபாடில்லாமல் காணக்கிடைக்கும் காட்சி. வீட்டு வேலையிலிருந்து கடைகள், உணவகங்கள், தையற்கடைகள், சிறுதொழில் நிறுவனங்கள் என்று குழந்தைத் தொழிலாளர்கள் இப்போதும்கூட பரவலாகவே காணப்படுகின்றனர். தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்பில் கடுமையான முயற்சிக்குப் பிறகு ஓரளவுக்கு குழந்தைத் தொழிலாளர் முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
 இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்று வசதியுடன் வளர்க்க முடிந்த பெற்றோர்கள், ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொண்டு அவர்களை நன்றாகப் படிக்க வைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் அடிப்படை வாழ்கைக்கே கஷ்டப்படும் குடும்பங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும் நிலைமை காணப்படுகிறது. அவர்களை முறையாகப் படிக்க வைக்கவும், பராமரிக்கவும் வழியில்லாமல் சிறுவயதிலேயே வருவாய் ஈட்ட குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள் அல்லது குடும்பச் சூழலால் வற்புறுத்தப்படுகிறார்கள்.
 எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகளை விரும்பித் துன்புறுத்துவதில்லை. கையறு நிலைதான் அதற்குக் காரணம். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் போனதன் விளைவுதான் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்வதற்கு முக்கியமான காரணம்.
 குழந்தைகளை பள்ளிகளுக்கு ஈர்ப்பதற்குப் பல முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் செய்யாமலில்லை. அனைவருக்கும் கல்வி, பள்ளிக்கூடங்களில் சத்துணவு, தமிழகத்தில் மதிய உணவு மட்டுமல்லாது காலைச் சிற்றுண்டி, அங்கன்வாடிகளில் மழலையர் பள்ளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு சீருடை- புத்தகங்கள், தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% ஒதுக்கீடு என்று பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
 அப்படியிருந்தும்கூட, எல்லா குழந்தைகளையும் கல்விச்சாலைகளுக்கு ஈர்க்க முடியவில்லை என்றால் அதுகுறித்து தீவிரமாக சிந்தித்தாக வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினாலும் அவர்கள் பாடங்களைப் படிப்பதற்கான சூழல் அல்லது வசதி தெருவோரங்களிலும், குடிசைவாழ் மக்களிடமும் இல்லாமலிருப்பதும் காரணிகள் என்பதை நாம் உணர வேண்டும்.
 2011 மக்கள்தொகை கணக்கின் அடிப்படையில், யுனிசெஃப் நிறுவனம் சில தரவுகளைத் தொகுத்திருக்கிறது. அதன்படி, இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 56 லட்சம் பேர் ஆண் குழந்தைகள். 45 லட்சம் பேர் பெண் குழந்தைகள்.
 உலகளாவிய நிலையில், 15.2 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதாவது 10 குழந்தைகளில் ஒரு குழந்தை கல்வி பெறாமல், தன்னையோ தனது குடும்பத்தையோ காப்பாற்ற பணியில் ஈடுபட வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
 கடந்த கால் நூற்றாண்டு காலமாக, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகவே குறைந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இப்போதும் கொத்தடிமைகளாகவும், தீவிரவாதக் குழுக்களில் குழந்தைப் போராளிகளாகவும், சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டிலும், பெண் குழந்தைகள் பாலியல் தொழிலாளிகளாகவும் இருக்கிறார்கள் என்கிற கசப்பான உண்மை வேதனையளிக்கிறது.
 2020 தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரப்படி, சுமார் 705 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்காற்றுச் சட்டத்தின்கீழ் 476 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
 குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இந்த குறைவான எண்ணிக்கை.
 தேசிய குழந்தைத் தொழிலாளர் தடுப்புத் திட்டத்தின்கீழ் (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழகத்தில் 213 சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. பல்வேறு பணியிடங்களிலிருந்து மீட்கப்பட்ட 3,861 குழந்தைகள் அவற்றில் சேர்க்கப்பட்டு படிக்கின்றனர். ஏனைய மாநிலங்களிலும் இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. அப்படியிருந்தும், 2018 தேசிய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் 3.2 கோடி குழந்தைகள் இன்னும்கூட பள்ளியில் சேராமல் இருக்கிறார்கள்.
 சுமார் 3.2 கோடி குழந்தைகள் பள்ளிகளுக்கு வெளியே இருக்கிறார்கள் என்பது புள்ளிவிவரம் என்றாலும், பாதியில் பள்ளியிலிருந்து வெளியேறும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை தொடரும் நிலையில், 5-ஆவது பெரிய பொருளாதாரம் என்று நாம் மார்தட்டிக்கொண்டால் உலகம் நம்மை எள்ளி நகையாடாதா?
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT