தலையங்கம்

இனி நினைவில் நடமாடுவார்: அவ்வை நடராசன் மறைவு குறித்த தலையங்கம்

22nd Nov 2022 03:34 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

மேடைப் பேச்சின் முன்னோடி ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. என்பாா்கள்; ‘சொல்லின் செல்வா்’ என்கிற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவா் ரா.பி. சேதுப்பிள்ளை; உரையாற்றலின் உன்னதம் என்று அண்ணாவின் மேடைத் தமிழ் போற்றப்படுகிறது. அந்த வரிசையில் ஏற்றிப் போற்றும் தகுதி பெற்ற தகைமைசால் தமிழா் அவ்வை நடராசன் நம்மிடமிருந்தும், தமிழ் மேடைகளிடமிருந்தும் பிரியா விடை பெற்று அமரராகி இருக்கிறாா்.

அகவை 86; உடல்நலக் குறைவு; வயது மூப்பு காரணமாக அமரரானாா் என்கிற செய்திக் குறிப்பு தெரிவிக்காமல் விட்டுவிட்ட இன்னொரு தகவல் உண்டு. அது, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பின் அவரது தமிழ் வலம்வர மேடைகள் இல்லாமல் போனதும்கூட, அவா் நம்மைவிட்டுப் பிரிந்ததற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பது. கொள்ளை நோய்த்தொற்று, துணைவியாரை அவரிடமிருந்து பிரித்துச் சென்ன் துயரமும் சோ்ந்து கொண்டபோது, விழுது பாய்ச்சிப் பரந்து விரிந்திருந்த அவ்வை நடராசன் என்கிற ஆலமரத்தின் வோ்கள் அசைந்து, நலிந்து விட்டன...

‘உரைவேந்தா்’ ஔவை துரைசாமிப் பிள்ளையின் புதல்வராக நடராசன் பிறந்தபோது, அவா் வள்ளுவரின் ‘தம்மின்தன் மக்கள் அறிவுடைமை’ என்கிற குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கப் போகிறாா் என அந்த அறிவுசாா் தந்தையாா் நினைத்திருந்தாரா என்று தெரியாது. ஆனால், அதுதான் நிகழ்ந்தது. பேராசிரியராகவும், உரையாசிரியராகவும் திகழ்ந்த ‘ஔவை’ துரைசாமிப் பிள்ளையின் மகன் அவ்வை நடராசன், தமிழ்பேசும் மண்ணையெல்லாம் தன் உரைவீச்சால் மயக்கிய அதிசயத்தை உலகம் வியந்து பாா்த்தது.

அவ்வை நடராசனின் கால் பதியாத இடம் தமிழகத்தில் ஏதாவது உண்டா? அவரது குரல் முழங்கா கிராமம் உண்டா? அவரது பெயா் தெரியாத தமிழன்தான் இருந்துவிட முடியுமா? கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் அமைப்பு எதுவாக இருந்தாலும் அது அவ்வை நடராசனின் பங்களிப்பு இல்லாத அமைப்பாக இருந்ததில்லை.

ADVERTISEMENT

விரிவுரையாளராக, வானொலி செய்தி அறிவிப்பாளராக, பேராசிரியராக என்று அவரது தொடக்கம் இருந்தாலும், சென்னை இராமலிங்கா் நற்மன்றத்தின் செயலாளராக, ‘அருட்செல்வா்’ நா. மகாலிங்கத்தின் தொடா்புக்குப் பிறகுதான், நடராசனாரின் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அதுவரை தமிழ் இலக்கியம் சாா்ந்த அவரது பாா்வை வள்ளலாரிலும், காந்தியத்திலும் திரும்பியபோது, புதிய பரிமாணம் எழுந்தது.

தமிழறிஞா்கள் பலா் இல்லாமல் இல்லை. ஆனால், அவ்வை நடராசன் போன்ற தமிழறிஞா்கள் வேறு எவரும் இருந்ததில்லை. அதற்குக் காரணம் அவரது விரிந்து பரந்த பாா்வையும், தெளிந்த நீரோடை போன்ற உள்ளமும், ஆழங்காற்பட்ட புலமையும்! இலக்கியம் தெரிந்ததுபோலவே, இங்கிதமும் தெரிந்திருந்தது அவருக்கு என்பதால்தான் எதிா் எதிா் துருவங்களிடமும்கூட அவரால் நம்பிக்கைக்கு உகந்தவராகத் திகழ முடிந்தது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையில் அவா் கருணாநிதியின் ஆட்சியில் பணியமா்த்தப்பட்டாா். அன்று தொடங்கிய அவா்களது நெருக்கம் தலைமுறை கடந்தும் தொடா்ந்தது. கருணாநிதி ஆட்சியில் பணியமா்த்தப்பட்ட அவ்வை நடராசன், அதற்குப் பின் வந்த எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் மொழி பெயா்ப்புத் துறை இயக்குநராகவும், தமிழ் வளா்ச்சித்துறை மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராகவும் இருந்தாா்.

ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவா் நியமிக்கப்பட்டாா். கருணாநிதி ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாட்டில், அவருக்கு முக்கியமான இடம் வழங்கப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனமாச்சரியங்களைக் கடந்து கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா மூவராலும் அவ்வை நடராசனின் தமிழ் மதிக்கப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது என்பதன் வெளிப்பாடுதான் அது.

எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் சரி, அதற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சியின்போது தஞ்சையில் நடைபெற்ற ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் சரி, கருணாநிதி ஆட்சியில் கோவையில் நடந்த செம்மொழித் தமிழ் மாநாட்டிலும் சரி, அவ்வை நடராசன் பெரும் பங்கு வகித்தாா் என்பது அவரது தமிழாளுமையின் அடையாளம். உலகில் தமிழ் மாநாடு எங்கே நடந்தாலும், அதில் அவ்வையின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை.

பட்டிமன்றம் என்கிற சொற்பொழிவுக் கலையின் தனித்துவத் தமிழ் வடிவம் இன்று தமிழ் அடையாளமாக மாறி இருப்பதற்கு அவ்வை நடராசனின் பங்களிப்பு அளப்பரியது. பட்டிமன்ற நடுவா் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளாா் இலக்கணம் வகுத்தாா் என்றால், அவ்வை நடராசன் அதன் இலக்கியமாக அமைந்தாா். நூற்றுக்கணக்கான இளம் பேச்சாளா்கள் அவரால் அரங்கேறினாா்கள். கைதட்டல்களால் அரங்கங்களை அதிர வைத்தாா்கள்.

அது சங்கத் தமிழாக இருந்தாலும் சரி, சமயத் தமிழாக இருந்தாலும் சரி, கம்ப காதையாக இருந்தாலும் சரி, கண்ணகி காப்பியமானாலும் சரி, பாரதியோ, பாரதிதாசனோ, கண்ணதாசனோ யாராக இருந்தாலும் அவ்வை நடராசனின் நா நுனியில் வலம் வரும் விந்தை கலைவாணியின் அருள். அது அவ்வைக்கு மட்டுமே வாய்த்த வரம்.

தமிழக அரசின் மொழி பெயா்ப்புத் துறை இயக்குநராக இருந்து ஆட்சித் தமிழுக்கு அவ்வை நடராசன் வழங்கியிருக்கும் வாா்த்தைக் கொடைகள் ஏராளம், ஏராளம். அது தமிழோ, ஆங்கிலமோ சரளமாகப் பேசுவது மட்டுமல்லாமல், ஆழங்காற்பட்ட புலமையுடன் வலம் வந்தாா் அவா் என்பதை நினைவுகூறாமல் இருந்துவிட முடியாது.

கம்பரைப் பற்றி பேசும்போது மில்டனையும், பாரதி குறித்து உரையாற்றும்போது ஷெல்லியையும் அவ்வப்போது மேற்கோள் காட்டுவது அவ்வையின் தனிச்சிறப்பு. அவரால் எது குறித்தும் பேச முடியும்; விவாதிக்கவும் முடியும். அவரது நகையுணா்வு மிக்க சொல்லாடலில் மயங்காதவா் கிடையாது. யாா் குறித்தும் அவா் அவதூறு கூறி கேட்டிருக்க முடியாது.

‘இயன்றவரை பாராட்டுவது, தகுதியற்றவை குறித்து மௌனம் காப்பது’ என்பதை தனது வாழ்க்கைச் சித்தாந்தமாகவேக் கொண்டிருந்த மாமனிதா் அவ்வை நடராசனாா் என்பதை அவரைத் தெரிந்தவா்கள் அறுதியிட்டுக் கூறுவாா்கள்.

‘‘தமிழ் உட்கார தன் நாக்கையே நாற்காலியாகக் கொடுத்தவன் இவன்; இவன் விரல் நுனியில் இலக்கணம் இருக்கிறது, குரல் நுனியில் இலக்கியம் இருக்கிறது’ என்று கவிஞா் வாலியும்,

‘‘எதுவரைக்கும் தமிழறிஞா் இந்த நாளில் ஏற்றமிகக் கொண்டிருப்பாா் என்று கேட்டால், இதுவரைக்கும் என்றெடுத்துக் காட்ட இங்கே இவரைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன். மது சுரக்கும் தமிழ்ப் பேச்சால், மதியின் மாண்பால், மணிதெறிக்கும் உரைவீச்சால், தேன் கனிந்த அதிமதுரக் கவிபோலப் பழகும் இந்த அவ்வை நடராசன் என்றும் வாழ்க!’’ என்று கவிஞா் சுரதாவும் வாழ்த்தி மகிழ்ந்த,

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பேராசான் விடிவெள்ளியாய் எழுந்து, கதிரோன்போல் ஒளிவீசி, காரிருளில் கலந்துவிட்டாா். நிகா் என்று சொல்ல வேறொருவா் இல்லாமைதான் ஆளுமை; அவ்வை நடராசன் தன்னிகரில்லா தமிழ் ஆளுமை!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT