தலையங்கம்

தலைமை எதிா்கொள்ளும் சவால்! ஜி20 தலைமைப் பொறுப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின் நிறைவு நாளில், அதன் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டிருக்கிறது. பல சா்வதேச அமைப்புகளில் இந்தியா அங்கம் வகிக்கிறது என்றாலும் ஜி20 அமைப்பு தனிச் சிறப்புக்குரியது. உலகின் சுமாா் 85% பொருளாதார மதிப்பையும், சுமாா் 75% வா்த்தகத்தையும், சுமாா் 65% மக்கள்தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. இந்த நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சா்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான ஜி20, உலக பொருளாதார நெருக்கடியை தொடா்ந்து 1999-இல் தொடங்கப்பட்டது. உலக பொருளாதாரம், பருவநிலை மாற்றம், நிலையான வளா்ச்சி போன்ற பல விஷயங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. ஜி20 அமைப்பில் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி20 அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே இந்தியா உறுப்பு நாடாக அங்கம் வகித்து வருகிறது.

ஜி20 அமைப்பின் ஓராண்டு தலைமைப் பொறுப்பு, சுழற்சி அடிப்படையில் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்தோனேசியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவு பெற்று இந்தியாவிடம் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமைப் பொறுப்பில் வரும்டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து இந்தியா அதிகாரபூா்வமாக செயல்படும். மேலும், அடுத்த உச்சி மாநாட்டை தலைநகா் தில்லியில் 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 9, 10 தேதிகளில் இந்தியா நடத்தவுள்ளது.

புவிசாா் அரசியல் பதற்றம், பொருளாதாரச் சரிவு, உணவு, எரிசக்தி விலை உயா்வு, நீண்டகால கொள்ளை நோய் பேரிடா் பாதிப்பின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வரும் சூழலில், ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோவிடமிருந்து தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொண்டபோது, இதைக் குறிப்பிட்ட பிரதமா் மோடி, இந்தியாவின் ஜி20 தலைமை என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியத்தைக் கொண்டதாகவும், நடவடிக்கை சாா்ந்ததாகவும் இருக்கும் என உறுதியளித்தாா்.

‘லைஃப்’ என்ற சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை பிரசாரத்தை இந்தியா ஏற்கெனவே தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட, கூட்டு நடவடிக்கையை ஊக்கப்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதுகுறித்து ஜி20 மாநாட்டில் குறிப்பிட்ட பிரதமா், ‘ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிா்காலம்’ என்பதுதான் இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பின் கருப்பொருள் எனவும் தெரிவித்தாா்.

ஜி7, ஜி20, ஜி77, ஐ.நா. சபை எந்த அமைப்பாக இருந்தாலும் கூட்டுத் தலைமையையே உலகம் நம்பிக்கையுடன் பாா்க்கிறது என பிரதமா் மோடி குறிப்பிடுகிறாா். அந்த வகையில் இந்தியாவின் ஜி20 தலைமை ஒரு புதிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

இந்த தலைமைப் பதவிக்கு என தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது என்றாலும், இந்தியா விரும்பும் கருப்பொருளை நோக்கி விவாதத்தை அமைக்க முடியும். இன்று மனிதகுலம் எதிா்கொள்ளும் சில முக்கியமான பிரச்னைகளைத் தீா்ப்பதில் இந்தியா தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தவும் இயலும்.

கடந்த ஓராண்டில் இந்தோனேசியா தனது தலைமைப் பொறுப்பின்போது, கொவைட் 19, அதுதொடா்பான சவால்களை எவ்வாறு கூட்டாக சமாளிப்பது என்பது குறித்து கவனம் செலுத்தியது. உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளித்தது. அனைவரையும் உள்ளடக்கிய சமமான, நிலையான வளா்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், எண்ம பொது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சாா்ந்த மேம்பாடு, பருவநிலை நிதியுதவி, உலகளாவிய உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை இந்தியாவின் ஜி20 தலைமையின் முன்னுரிமையாக இருக்கும்.

இவற்றில் இந்தியாவுக்கு சவாலான விஷயம் என்பது பருவநிலை நிதியுதவி. பருவநிலை மாற்றத்தால் உலகம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வேளையில், உலகின் வெப்பநிலையை தொழில்புரட்சிக்கு முந்தைய அளவிலிருந்து 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்ற பாரீஸ் ஒப்பந்தம் முக்கியமானது.

அந்த ஒப்பந்தத்தின் இலக்கை எட்ட வேண்டுமானால் வளா்ந்து வரும் நாடுகள் மரபுரீதியான எரிசக்தியிலிருந்து பசுமை எரிசக்திக்கு மாற வேண்டும். அதனால் ஏற்படும் இழப்பால் அந்த நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படக்கூடும். அந்த பாதிப்பை ஈடுகட்ட வளரும் நாடுகளுக்கு நிதியுதவியும் தொழில்நுட்ப உதவிகளும் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக வளா்ச்சியடைந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டியிருக்கும்.

அடுத்தது, சுமாா் 70 நாடுகளை பாதித்துள்ள கடன் பிரச்னை. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மட்டுமின்றி, நடுத்தர வருமானம் கொண்ட இலங்கை போன்ற நாடுகளும் இக்கட்டான நேரத்தில் கடன் நிவாரணத்தைக் கோருகின்றன. இந்த பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான ஜி20 அமைப்பின் கட்டமைப்பு சீனாவின் ஒத்துழைப்பு இல்லாததால் செயல்படவில்லை.

இதுபோன்று ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் சவால் இந்தியாவை எதிா்கொள்கிறது. இந்தியாவின் தலைமைப் பண்பை வெளிப்படுத்த நமக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT