தலையங்கம்

இக்கட்டில் இலங்கை! | பொருளாதாரத் தேக்கம் குறித்த தலையங்கம்

25th May 2022 03:42 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

இரண்டாண்டு கால கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலால் சுற்றுலா முடக்கம், செயற்கை உரங்கள் தடை செய்யப்பட்டதால் விவசாய உற்பத்தி வீழ்ச்சி, வரவுக்கு மீறி கடன் வாங்கியதால் பொருளாதாரத் தேக்கம், ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேட்டால் நிலையற்ற தன்மை, சீனாவை அதிகப்படியாகச் சார்ந்திருந்ததால் ஏற்பட்ட கடன்சுமை ஆகியவை இலங்கையை நிலைகுலையச் செய்துள்ளன. 

இன்றைய தேதியில் இலங்கையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 5,000; அதற்கும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் வாங்க கேன்களுடன் 12 மணிநேரத்துக்கு மேல் தெருக்களில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், "துறைமுகங்களில் காத்திருக்கும் எரிபொருள் டேங்கர்களை இறக்க அந்நிய செலாவணி கையிருப்பு இல்லை' என்று அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கூறியிருக்கிறார். 

எரிபொருள் தட்டுப்பாட்டால் நாட்டில் 18 மணிநேர மின்வெட்டு நிலவுகிறது. ஹோட்டல்களும், பள்ளிகளும் மூடப்பட்டு விட்டன. அரசு அலுவலகங்கள் குறைவான ஊழியர்களுடன் இயங்குகின்றன. அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்கூட முடங்கியிருக்கின்றன. இவையெல்லாம் போதாது என்று, அரசு மீதான அதிருப்தியில் நாட்டு மக்கள் ஆங்காங்கே நடத்தும் போராட்டங்கள் வன்முறையாக வடிவெடுத்துள்ளன.  

ADVERTISEMENT

தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள்கள் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டின் பணவீக்கம் 30%-ஐ தாண்டி விட்டது. விரைவில் இது 40%-ஐ எட்டும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இவை அனைத்துக்கும் காரணம், வரவுக்கு மீறி வாங்கப்பட்ட கடன்தான்.

உலக வங்கி, சர்வதேச நிதியம் மட்டுமல்லாது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை வாங்கிய கடன் தொகையின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த மே 20 நிலவரப்படி 51 பில்லியன் டாலராக (சுமார் ரூ.3.97 லட்சம் கோடி) உயர்ந்திருக்கிறது. இந்தக் கடனுக்கான தவணைத்தொகையையோ, வட்டித்தொகையையோ திருப்பித் தரும் நிலையில் இலங்கை இல்லை. இதை சென்ற மாதமே அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. 

குறிப்பாக, உணவுப் பொருட்களுக்காக கடன் பத்திரங்களில் வாங்கிய ரூ.94,000 கோடி கடனுக்கு உடனே செலுத்த வேண்டிய ரூ.585 கோடி வட்டியை அளிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 18 உடன் முடிவடைந்து விட்டது. "பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி இன்மை போன்ற நெருக்கடிகளால் வாங்கிய கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்த வாய்ப்பில்லை' என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே மே 20-இல் அறிவித்திருக்கிறார். இது கிட்டத்தட்ட திவால் ஆன நிலைதான். 

இலங்கையின் மொத்தக் கடனில் சுமார் 10% சீனாவிடமிருந்து வாங்கியதாகும். தவிர, இலங்கையின் பல உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா பல பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் சொந்த ஊரான அம்பந்தோட்டாவில் துறைமுக விரிவாக்கத்தில் நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி, சீனாவுக்கு ராஜபட்ச அளித்த அனுமதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு மட்டும் 1.1 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 8, 500கோடி) சீனா முதலீடு செய்துள்ளது. ஆனால், 

இத்துறைமுகத்தால் இலங்கை நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. தற்போது அதனை சீனாவே 98 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது, கந்துவட்டிக்காரர்களையே நினைவுபடுத்துகிறது.

கவர்ச்சிகரமான திட்டங்களில் மயங்கியும் அதில் கிடைக்கும் லஞ்சத்துக்காகவும் இலங்கை ஆட்சியாளர்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கியதன் விளைவை அம்பந்தோட்டா துறைமுக கபளீ கரம் காட்டுகிறது. இதே போல பல்வேறு திட்டங்களில் சீனாவின் கடன்வலை இலங்கையை இறுகப் பற்றியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்று இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் திணறும்போது, ஏதுமறியாதது போல சீனா வேடிக்கை பார்க்கிறது. அந்நாட்டுக்கு, இலங்கையில் செய்த முதலீடுகள் குறித்து மட்டும்தான் கவலை.

சர்வதேச நிதியத்திடம் ரூ. 2.4 லட்சம் கோடி கடனுதவி பெற இலங்கை அரசு முயன்று வருவதாகத் தெரிகிறது. இந்த அளவுக்கு கடனுதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பது இலங்கைக்கும் தெரியும். ஆனால், இந்தக் கடனை நம்பித்தான் இலங்கையின் எதிர்காலம் இருக்கிறது.

அந்நிய செலாவணிக் கையிருப்பு முற்றிலும் கரைந்துள்ள சூழலில், வரவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் இலங்கை கடைத்தேறுவது கடினம் என்றே தோன்றுகிறது. மேலும் மேலும் கடன் வாங்குவது ஒன்று மட்டுமே இலங்கை முன்னுள்ள உடனடித் தீர்வாகக் காட்சி அளிக்கிறது. "வரக்கூடிய இரண்டு மாதங்கள் இலங்கைக்கு மிக மோசமான காலகட்டமாக இருக்கும்' என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது சிக்கலின் தீவிரத்தைக் காட்டுகிறது.

அண்மையில் இலங்கைக்கு ரூ.1,240 கோடி கடன் வழங்குவதாக உலக வங்கி அறிவித்தது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றதுதான். கனடா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் இலங்கைக்குக் கடனுதவி அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. 

இந்தியா ஏற்கெனவே ரூ.22,500 கோடி உடனடி கடனுதவி அளித்துள்ளது. தவிர, உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருட்களை அவசர உதவியாக அளித்து வருகிறது. 

பிற நாடுகள் அளிக்கும் கடனுதவிக்கும், நெருங்கிய நட்பு நாடான இந்தியா அளிக்கும் நிதியுதவிக்கும், பொருளுதவிக்கும் உள்ள வேறுபாட்டை இலங்கை உணர்ந்திருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT