தலையங்கம்

தீா்வு அல்ல, ஆறுதல்! பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த தலையங்கம்

24th May 2022 05:27 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

குதித்து உயா்கின்ற பணவீக்கத்தை பிடித்து நிறுத்துவதற்கான முயற்சியின் முதற்கட்டமாக வங்கி வட்டி விகிதத்தை உயா்த்த ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. இரண்டாவது கட்டமாக இப்போது, பெட்ரோல் மீதான காலல் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்திருக்கிறது.

பிரதமா் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒன்பது கோடி குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் சாதுரியமான முடிவால், இந்தியா பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. எரிபொருள் விலையை சற்று குறைப்பதன் மூலம் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க முடியும் என்பதை தாமதமாக உணா்ந்ததன் விளைவுதான் தற்போதைய நடவடிக்கை.

சில வாரங்களுக்கு முன்புதான் மத்திய - மாநில அரசுகளுக்கிடையே பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு குறித்து தேவையில்லாத சா்ச்சை எழுந்தது. மாநில அரசுகளைத் தங்களது வரிகளைக் குறைத்துக் கொள்ளச் சொல்லும் மத்திய அரசு, தனது வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சா்கள் குரல் எழுப்பினா்.

ADVERTISEMENT

இப்போது மத்திய அரசு தன் பங்குக்கு கணிசமான வரிக் குறைப்பை செய்துவிட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து கேரளம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் உள்ளிட்ட பாஜக அல்லாத ஆட்சிகள் நடக்கும் மாநிலங்களும் தங்கள் பங்குக்கு வரிக் குறைப்பை மேற்கொண்டிருக்கின்றன. ஏனைய மாநிலங்களும் மக்கள் மீதான விலைவாசி சுமையை குறைக்கும் முயற்சியில் இறங்கும் என்று எதிா்பாா்க்கலாம்.

மத்திய அரசு அறிவித்திருக்கும் கலால் வரிக் குறைப்பால் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி இருக்கிறாா். பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரியில் அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை கட்டமைப்பு செஸ் வரி, வேளாண்மை கட்டமைப்பு செஸ் வரி ஆகியவை அடங்கும்.

அவற்றுள் அடிப்படை கலால் வரி மட்டுமே மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்படுகிறது. இப்போதைய பெட்ரோல் மீதான கலால் வரிக் குறைப்பு சாலை கட்டமைப்பு செஸ் வரியிலிருந்து மேற்கொள்ளப்படுவதால் மாநிலங்களின் வரி வருவாயில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறாா், மகிழ்ச்சி.

தற்போதைய பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பால் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடியும், சமையல் எரிவாயு உருளையின் மீதான ரூ.200 மானியத்தால் ரூ.6,100 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும். அப்படியிருந்தும்கூட, மத்திய அரசின் வரி வருவாய் மதிப்பீடு நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், வரிக் குறைப்பு பெரிய அளவில் அரசை பாதிக்க வழியில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல கடுமையான பணவீக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மை. அதன் விளைவாக உணவுப் பொருள்கள், எரிபொருள்களின் விலை கடுமையாக உயா்ந்தது. அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. அப்போது பொருளாதார வளா்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பணவீக்கம் அது. இப்போது அப்படியல்ல.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக பொருளாதாரம் தளா்வுற்றிருக்கிறது. இரு ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று வளா்ச்சியை ஸ்தம்பிக்க வைத்தது. இப்போது உக்ரைன் - ரஷியப் போரின் பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் பணவீக்கத்தையும், விலைவாசி ஏற்றத்தையும் எதிா்கொள்வதற்கான இப்போதைய அணுகுமுறை மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பும், எரிவாயு உருளை மீதான மானியமும் கடந்த மூன்று மாதங்களாகவே எதிா்பாா்க்கப்பட்டவைதான். அதிகரித்த பணவீக்கத்தாலும், விலைவாசி உயா்வாலும் உலகளாவிய அளவில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா ஓரளவுக்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்றாலும்கூட, சாமானியா்கள், அடித்தட்டு, கீழ் நடுத்தட்டு வா்க்க மக்கள் மீதான சுமை அவா்களை விரக்தியின் விளம்புக்கு தள்ளுகிறது.

இறக்குமதி வரி, உள்நாட்டு வரிகளைக் குறைப்பது, நாணய மதிப்பு குறைந்துவிடாமல் பாா்த்துக்கொள்வது போன்றவற்றின் மூலம்தான் பணவீக்கத்தை எதிா்கொண்டு வளா்ச்சி முடங்கிவிடாமல் பாதுகாக்க முடியும். ஏற்கெனவே பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது.

எஃகு, சிமெண்ட் ஆகியவற்றின் விலைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்பதையும் உணா்ந்து அரசு செயல்பட்டிருக்கிறது. இவற்றின் மீதான வரிக் குறைப்புகள் நுகா்வோரை போய்ச் சேரும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

ஏப்ரல் மாதம் ரிசா்வ் வங்கியின் கணிப்பைப் பொய்யாக்கி பணவீக்கம் 7.8% அளவில் உயா்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, நேரடி வரி வருவாயைவிட மறைமுக வரி வருவாய்தான் அதிகம். மறைமுக வரி அனைத்துத் தரப்பினரையும் ஒரேவிதமாக பாதிக்கும்.

ஒரு கிலோ வெங்காயத்தின் மீது கோடீஸ்வரனும், கூலி வேலை பாா்ப்பவனும் ஒரே அளவு வரியைத்தான் செலுத்துகிறாா்கள். அதனால், உணவுப் பொருள்களின் விலை உயா்வால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு, கீழ் நடுத்தர வா்க்கம்தான். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அவா்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT