தலையங்கம்

கைப்புண்ணுக்கு...| காங்கிரஸின் சிந்தனை அமர்வு மாநாடு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 லாயத்தில் இருந்த திறமையும், சுறுசுறுப்புமுள்ள குதிரைகள் எல்லாம் ஓடிவிட்ட பிறகு, நடக்கக்கூட முடியாத கிழட்டுக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டு லாயத்தின் நுழைவாயில் கதவைப் பூட்டுவது போன்ற முயற்சியை காங்கிரஸ் கட்சி
 மேற்கொண்டிருக்கிறது. கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற மூன்று நாள் "சிந்தனை அமர்வு' (சிந்தன் ஷிவிர்) சாதிக்க முயல்வது அதைத்தான்.
 காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பிரச்னைகள் என்னென்ன என்று ஆராய, கூடித்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முன்னாள் தலைவரும், கட்சியின் இளவரசருமான ராகுல் காந்தி இதற்கு முன்னர் வெளியிட்டிருக்கும் கருத்துகளைத் தொகுத்து பட்டியலிட்டாலே போதும். காங்கிரûஸ மீட்டெடுப்பதற்கும், அதற்குப் புத்துணர்வு அளிப்பதற்கும் என்னென்ன தேவை என்பதை தெரிந்தோ, தெரியாமலோ அவர் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்.
 காங்கிரஸ் கட்சி மக்களிடமிருந்து மிகவும் விலகிச் சென்றுவிட்டது; கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பதுடன், மக்களின் உண்மை மனநிலை அறியாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்; நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும்; அவர் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக் கூடாது - இவையெல்லாம் வெவ்வேறு கட்டங்களில் ராகுல் காந்தி வெளிப்படுத்திய கருத்துகள்.
 இத்தனையும் நன்றாகத் தெரிந்திருந்தும், காங்கிரஸ் தலைமை ராஜஸ்தான் மாநிலத்தில் எதற்காக சிந்தனை அமர்வு நடத்தி, ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும் என்பது புரியவில்லை. நாங்களும் இருக்கிறோம் என்பதை நாட்டுக்குத் தெரிவிப்பதற்காக நடத்தப்படும் நாடகம் என்பதைத் தவிர, அந்த மூன்று நாள் கூட்டத்தால் நிகழப்போகும் மாற்றம்தான் என்னவாக இருந்துவிடப் போகிறது?
 அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான முடிவு, "குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு' என்பது. அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு விதிவிலக்கை ஏற்படுத்தி இருப்பதுதான் காங்கிரஸின் கொள்கைக் குழப்பத்தையும், மாற்றத்துக்குத் தயாராக இல்லாத மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. "ஒரு பதவி, ஒரு குடும்பம், ஒரு சீட்டு' என்று தெரிவித்துவிட்டு, அடுத்த வரியாக, "ஐந்தாண்டுகளுக்கு மேலாகக் கட்சியில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்' என்று கூறியிருப்பதன் மூலம் அந்தத் தீர்மானம் வெறும் கண்துடைப்பு என்பது தெளிவாகிறது.
 "ஒரு குடும்பம், ஒரு சீட்டு' என்று முடிவெடுத்தால், சோனியா, ராகுல் இருவரில் ஒருவர்தான் தேர்தலில் போட்டியிட முடியும். ப. சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, பூபிந்தர் சிங் ஹூடா, கமல்நாத், அசோக் கெலாட் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அவர்களது வாரிசுகளும் கட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் துணிவு காங்கிரஸுக்குக் கிடையாது. அப்படி முற்றுப்புள்ளி வைக்காத வரையில் காங்கிரûஸ மீட்டெடுப்பதும் இயலாது.
 முகுல் வாஸ்னிக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இருந்து வருகிறார். அதே போலத்தான் குலாம்நபி ஆஸாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்ட பல தலைவர்களும் முக்கியப் பொறுப்புகளில் தொடர்கிறார்கள். குடும்ப வாரிசுகளாக இல்லாத புதியவர்களுக்குக் கட்சியிலும், ஆட்சிப் பொறுப்புகளிலும் வாய்ப்பில்லாத நிலைமை காணப்படும்போது, அந்தக் கட்சியில் புதியவர்கள் எப்படிச் சேர முன்வருவார்கள் என்பதைத் தலைமை யோசிப்பதாகவே தெரியவில்லை.
 2018-இல்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு 19 தேர்தல்களில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அவற்றில் பெரும்பாலும் மாநில கட்சிகளிடம்தான் காங்கிரஸ் தோற்றிருக்கிறது. காங்கிரஸின் பல
 வீனத்தில்தான் எல்லா மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் வளர்ந்து, ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. சமீபத்தில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதும் அதில் அடக்கம்.
 இதையும் ராகுல் காந்தி உணர்ந்தே இருக்கிறார். சிந்தனை அமர்வில் பேசும்போது, மாநில கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது என்றும், அவற்றிற்கு பாஜகவை எதிர்க்கும் கொள்கைப் பிடிப்பு கிடையாது என்றும் பேசியிருப்பது, சிரிப்பை வரவழைக்கிறது.
 இப்படியும் கூறிவிட்டு, மாநில கட்சிகளின் கூட்டணிதான் இந்திய ஒன்றியம் என்றும் அவர் கூறியிருப்பதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?
 காங்கிரஸின் அடிப்படை பிரச்னை "குடும்பம்'. தேசிய அளவில் சோனியா குடும்பம் இருப்பதுபோல, மாநில அளவிலும் அந்தக் கட்சியில் பல குடும்பங்கள் கோலோச்சுகின்றன. மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை வளர விடாமல், குடும்பத் தலைமைகள் கட்சிப் பதவிகளையும், ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றன.
 உடை கலையாமல், ஏசி வாகனங்களில் வலம் வரும் தலைவர்கள் உருவாகிறார்கள். பணத்தைச் செலவழித்துப் பதவியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கூட்டணி இல்லாமல் காங்கிரஸால் தேர்தலை சந்திக்க முடியாது என்கிற அளவுக்கு அமைப்பு ரீதியாக பலவீனம் ஏற்பட்டிருக்கிறது.
 இதிலிருந்து காங்கிரஸ் வெளியேற ஒரேயொரு வழிதான் உண்டு. அது, முறையான உள்கட்சித் தேர்தல் மூலம் ஏற்படுத்தப்படும் சோனியா குடும்பத்தைச் சேர்ந்ததாகவோ சார்ந்ததாகவோ இல்லாத தலைமை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

SCROLL FOR NEXT