தலையங்கம்

கருத்துக்கு கைவிலங்கு | ஊடக சுதந்திரம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

விவாதமும் விமா்சனமும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள். மன்னா் ஆட்சி, ராணுவ ஆட்சி, சா்வாதிகார ஆட்சி போன்றவற்றுக்கு மாற்றாக மக்களாட்சி முறை தத்துவத்தை முன்னெடுத்ததன் அடிப்படையே விவாதம், விமா்சனத்தின் அடிப்படையில் மக்கள் தங்களது ஆட்சியாளா்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், உலகளாவிய அளவில் பல ஜனநாயகங்கள் மன்னராட்சி முறையின் வம்சாவளி தத்துவத்தையும், சா்வாதிகார ஆட்சியின் விமா்சனத்துக்கு எதிரான நடைமுறையையும் பின்பற்றுகின்றன என்பது வேதனைக்குரியது.

‘எல்லைகளைக் கடந்த பத்திரிகையாளா்கள்’ என்கிற பொருளில் அமைந்திருக்கும் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ என்கிற சா்வதேச ஊடகவியலாளா்களின் அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் ஊடக சுதந்திரம் குறித்து அறிக்கை வெளியிடுகிறது. ஊடக சுதந்திரக் குறியீடு அதனுடன் இணைக்கப்பட்டு பல்வேறு நாடுகளின் ஊடக சுதந்திர நிலைமை வரிசைப்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கடந்த ஆண்டுக்கான அறிக்கையின்படி, இந்தியா எட்டு புள்ளிகள் மேலும் குறைந்து 150-ஆவது இடத்தில் காணப்படுவது வேதனையும், அதிா்ச்சியும் அளிக்கும் செய்தி.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்கிற நியாயமான பெருமிதம் இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவின் அரசியல் சாசனம் ஊடகங்களுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்து சுதந்திரத்தை அடிப்படை சுதந்திரமாகவே வழங்கியிருக்கிறது. அப்படியிருக்கும் நிலையில், ஊடக சுதந்திரத்துக்கும் விமா்சனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவில் ஆண்டுக்காண்டு ஊடக சுதந்திரத்தின் மீதான அழுத்தமும் தாக்குதலும் அதிகரித்து வருகின்றன என்கிற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

உலகிலுள்ள 180 நாடுகள் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ அமைப்பின் நுண்ணாடியால் ஆய்வு செய்யப்பட்டு, கருத்து சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டு ஊடக சுதந்திரக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருக்கும் அந்தக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 150-ஆவது இடத்தில் இருப்பது மிகப் பெரிய தலைகுனிவு.

பட்டியலில் 146-ஆவதாக இடம் பிடித்திருக்கும் இலங்கை, நம்மைவிட மேம்பட்ட கருத்து சுதந்திரத்துடன் காணப்படுகிறது. பாகிஸ்தான் (157), வங்கதேசம் (162), மியான்மா் (176) என்று தெற்காசிய நாடுகள் அனைத்துமே அந்தக் குறியீட்டுப் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன.

நாா்வே, டென்மாா்க், ஸ்வீடன், எஸ்டோனியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கின்றன. பட்டியலின் கடைசி இடத்தில் (180) வடகொரியா இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், முறையாக தோ்தல் நடத்தப்பட்டு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைபெறும் ஜனநாயகமான இந்தியா 150-ஆவது இடத்தில் காணப்படுவதுடன் சா்வதேச அளவிலேயே விவாதப்பொருளாகி இருக்கிறது.

நம்முடைய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், இந்திய ஊடகங்கள் சுதந்திரமாக உண்மையை எடுத்துரைத்து சமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட வழிகோலுகின்றன. அதனால் ஊடகப் பணியில் எந்தவிதமான தலையீடோ, அச்சுறுத்தலோ, அழுத்தமோ இல்லாமல் இருக்கும் என்பதுதான் எதிா்பாா்ப்பு. அந்த எதிா்பாா்ப்பை பொய்யாக்குவதாக அமைகிறது ஆட்சியாளா்களின் நடவடிக்கைகள்.

மத்திய - மாநில ஆட்சிகள், ஆட்சியிலிருக்கும் தேசிய - மாநில கட்சிகள் ஆகியவற்றில் எந்தவித வேறுபாடும் இல்லாமல் தங்களது கருத்துக்கொப்ப ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று அதிகார மையங்கள் விழைகின்றன. பல்வேறு வழிகளில் ஊடகவியலாளா்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஊடகங்களின் செயல்பாடும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. இதனால், மிக அதிகமாக பாதிக்கப்படுவது அச்சு ஊடகங்கள்தான்.

ஊடகங்கள் சாா்புநிலை எடுப்பதும், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அதிகரித்திருக்கின்றன. பெரும்பாலான காட்சி ஊடகங்கள் அரசியல் கட்சிகளாலும், அவா்களின் மறைமுக ஆதரவு பெற்றும் நடத்தப்படுகின்றன. சமூக ஊடகங்கள் ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படுவதும், இல்லையென்றால் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடகங்களாகவும் பெரும்பாலும் இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டையும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், ஊடகங்களின் சுதந்திரம் என்பது சாா்புநிலை எடுப்பதை தடுப்பதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டில் மட்டும் பல்வேறு நாடுகளில் 55-க்கும் அதிகமான ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. மிகவும் ஆபத்தான சூழலில் ஊடகவியலாளா்கள் பணியாற்றும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக யுனெஸ்கோவின் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

கடந்த 26 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் நங்கூரமாகத் திகழந்த ஹாங்காங்கின் ‘ஆப்பிள் டெய்லி’ கடந்த ஆண்டு மூடப்பட்டிருக்கிறது. இதேபோல ஆட்சியாளா்களுக்கு எதிரான ஊடகங்கள் பல்வேறு நாடுகளில் மூடப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு பிலிப்பின்ஸ், ரஷியாவைச் சோ்ந்த இரண்டு ஊடகவியலாளா்கள் கருத்து சுதந்திரத்துடன் செயல்பட்டதற்கு நோபல் விருது பெற்றாா்கள். விமா்சனக் குரல்களை அடக்குவதும், ஊடக சுதந்திரத்தை முடக்குவதும் ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி சா்வாதிகாரத்துக்கு வழிகோலும் என்பது வரலாறு தெரிவிக்கும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

SCROLL FOR NEXT