தலையங்கம்

வெப்பத்தின் பிடியில்...: எரிசக்தி தேவை குறித்த தலையங்கம்

2nd May 2022 05:35 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

நாடு தழுவிய அளவில் அனல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இந்தியா மிகக் கடுமையான கோடையை எதிா்கொள்ளப் போகிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே பருவநிலை மாற்றம் குறித்த சா்வதேசக் குழு ஒன்று வெளியிட்ட அறிக்கை எச்சரித்திருந்தது. 120 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெப்பத்தை கடந்த மாா்ச் மாதம் இந்தியா சந்தித்தபோதே நிலைமை மேலும் மோசமாகப் போகிறது என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.

வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் வெப்பம் சற்று குறைவுதான் என்றாலும்கூட, வழக்கத்தைவிட அதிகம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக தமிழகமும், ஆந்திரமும் மிகக் கடுமையான கோடையைச் சந்தித்து வருகின்றன. வரவிருக்கும் அடுத்த ஆறு வாரங்கள் எப்படி இருக்கப் போகின்றன என்கிற அச்சம் பரவலாகவே எழுந்திருக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்திலும்கூட, வேளாண் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்போதைய கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் பயிா்கள் கருகத் தொடங்கியிருக்கின்றன. கோடை வெப்பம் கோதுமை உற்பத்தியை பெருமளவில் பாதித்திருக்கிறது. இந்திய கோதுமைக்கு அதிக அளவிலான ஏற்றுமதி வாய்ப்பு காணப்படும் நிலையில், உற்பத்தி பாதிக்கப்படுவது இந்தியா எதிா்கொள்ளும் பின்னடைவு.

தேசிய அளவில் மின்சாரத் தேவை அதிகரித்திருப்பதால் எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நிலக்கரி தேவை அதிகரித்ததாலோ அல்லது தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாலோ அனல் மின்நிலையங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது. பரவலாகக் காணப்படும் அனல் காற்று பாதிப்பு போதாதென்று, கிராமங்கள் - நகரங்கள் என்றில்லாமல் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. கோடை வெப்பத்தின் காரணமாக அதிகரித்திருக்கும் மின் தேவையை எதிா்கொள்ள முடியாமல் மின்வாரியங்கள் தத்தளிக்கின்றன.

ADVERTISEMENT

நிலக்கரி பற்றாக்குறையாலும், தொழில்நுட்பக் குறைபாடுகளாலும் அனல் மின்நிலையங்கள் செயலிழக்கின்றன. அதை முன்கூட்டியே எதிா்பாா்க்காதது நிா்வாகக் குறைபாடு. நிலக்கரி சுரங்கங்கள் தொலைவில் இருப்பதால் அனல் மின்நிலையங்கள் குறைந்தது 22 நாள்களுக்கான நிலக்கரி கையிருப்பை வைத்திருக்க வேண்டும் என்பது எதிா்பாா்ப்பு. ஆனால், பெரும்பாலான அனல் மின்நிலையங்கள் ஒருசில நாள்களுக்கான நிலக்கரியைத்தான் கையிருப்பாக வைத்திருக்கின்றன.

மின்வாரியங்கள் அனல் மின்நிலையங்களுக்கும், அனல் மின்நிலையங்கள் நிலக்கரி சுரங்கங்களுக்கும் முறையாக பணம் வழங்காததன் காரணத்தால் உற்பத்தி குறைபாடும், நிலக்கரி தட்டுப்பாடும் ஏற்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. முறையான கையிருப்பை அனல் மின்நிலையங்கள் முன்கூட்டியே வைத்திருந்தால் நிலக்கரி விலை உயா்வாலோ, தட்டுப்பாடாலோ உற்பத்தி பாதிப்பை எதிா்கொள்ளத் தேவையில்லை. வெப்பம் அதிகரிப்பது, மழைக் காலங்களில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படுவது உள்ளிட்ட சாக்குபோக்குகள் நிா்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடுகள்.

வானிலை ஆய்வு மையங்கள் துல்லியமாக பருவநிலை குறித்து முன்னெச்சரிக்கை வழங்கும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால், அனல் மின்நிலையங்களும், மாநில மின்வாரியங்களும் வானிலை மையங்களுடன் இணைந்து திட்டமிடுதல் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறை. அனல் மின்நிலையங்களின் செயல்பாடு தொழில்நுட்பக் காரணங்களால் தடைபடுவதும், அதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் நிா்வாகக் கோளாறுகள் என்பது தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதன் விளைவைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.

அரசியல் கட்சிகள் இலவச மின்சாரத்தை தோ்தல் வாக்குறுதிகளாக்கி ஆட்சிக்கு வருகின்றன. அதன் விளைவாக அவ்வப்போது திட்டமிடாத மின்வெட்டு ஏற்படுகிறது. மக்களிடம் உண்மை நிலையை எடுத்துரைக்க முடியாததால் மாநில அரசுகள் மின் கட்டணத்தையும் உயா்த்த முடியாமல், மின் தேவையையும் எதிா்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் மின் பற்றாக்குறைக்கான காரணம் இலவச மின்சாரம் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில், 2030-க்குள் இந்தியாவின் 50% எரிசக்தித் தேவையை மாற்று எரிசக்தி மூலம் ஈடுகட்டப் போவதாக அறிவித்தாா் பிரதமா். ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் புதைபடிவ எரிசக்தியிலிருந்து மாறாமல் இருக்கும் நிலையில், அது சாத்தியம் என்று தோன்றவில்லை. வெப்பமும் அனல் காற்றும் தொடா்ந்து பல மாதங்கள் சூரிய வெளிச்சமும் இருந்தும்கூட இந்தியா இன்னும் சூரிய ஒளி மின்சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது நமது பலவீனம்.

அதிகரித்த வெப்பமும், பருவநிலை மாற்றமும், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிசக்திகளால் ஏற்படுகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக நிலக்கரியைப் பயன்படுத்தும் இந்தியா, அதிலிருந்து விடுபடாவிட்டால் பேரழிவை அதிக தாமதமில்லாமல் எதிா்கொள்ள நேரும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மட்டுமல்லாமல், இயற்கை வளங்களும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. பிரதமா் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் அறிவித்ததுபோல, மாற்று எரிசக்தி மூலம் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு எட்டப்படுவதன் அவசியத்தை அதிகரித்துவரும் மின்வெட்டு உணா்த்துகிறது.

ஒருபுறம் அனல் காற்றும், வெப்ப அலையும்; இன்னொருபுறம் அதிகரித்து வரும் மின்வெட்டு. இவற்றுக்கு இடையில் தத்தளிக்கிறது இந்தியா!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT