தலையங்கம்

நிரந்தரத் தீர்வு தேவை! வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தலையங்கம்

29th Mar 2022 07:33 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் அமைப்பான இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) கடந்த வாரம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.57 % ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.91 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த ஜனவரியில் இது 6.57 % ஆகக் குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ஆய்வறிக்கை முடிவு நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.

 கடந்த ஜனவரியில், இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தெலங்கானாவில்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.7% உடன் மிகக்குறைவாக இருந்ததாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்த மாநிலங்களாக குஜராத் (1.2%), மேகாலயம் (1.5%), ஒடிஸா (1.8%), கர்நாடகம் (2.9%) ஆகியவை உள்ளன. வேலைவாய்ப்பின்மை விகிதம் மிக அதிகமாக உள்ள மாநிலமாக ஹரியாணா 23.4 % உடன் முதல் இடத்தில் உள்ளது. 

இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் (18.9%), திரிபுரா (17.1%), ஜம்மு}காஷ்மீர் (15%), தில்லி (14.1%) ஆகிய மாநிலங்களில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாதங்களில் ஒடிஸா 1.47% உடன் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகக் குறைந்த மாநிலமாகத் திகழ்ந்தது. அப்போது, வேலையின்மை மிக அதிகமாக உள்ள மாநிலங்களாக ஹரியாணா (25.7%), ராஜஸ்தான் (24.5%) ஆகியவை இருந்தன.

ADVERTISEMENT

ஒடிஸாவில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டதால், அங்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த மாநிலமாகவும் ஒடிஸா விளங்குகிறது.

இதேபோல, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் அதிக அளவில் கடன் உதவி பெற்றுத் தந்து, புதிய தொழில் தொடங்குவதற்கு ஒடிஸா அரசு வழிவகை செய்கிறது. இதே வழிமுறைகளை பிற மாநிலங்களும் பின்பற்றினால் வேலைவாய்ப்பின்மை பெரிதும் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே, ஜனவரி மாதத்தில், வேலைவாய்ப்பின்மை மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒடிஸாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு தெலங்கானா முதலிடத்தைப் பிடித்துவிட்டது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ள மாநிலங்களைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லை. ஹரியாணாவும், ராஜஸ்தானும் வேலைவாய்ப்பின்மை மிக அதிகம் உள்ள மாநிலங்களாக தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கின்றன.

இதேபோல, நகர்ப்புறங்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் 
9.30% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஜனவரியில் ஆச்சரியமளிக்கும் வகையில் 7.28% ஆகக் குறைந்தது. இந்தியாவில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு,  அங்கெல்லாம் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதால்தான் அந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவாக உள்ளது.

நகர்ப்புறங்களில் உயர்கல்வி முடித்து வெளிவரும் பட்டதாரி
களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அதற்கேற்றவாறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது பெரும் குறையாகவே உள்ளது.

நகர்ப்புறங்களில் உயர்கல்வி கற்கும் இளைஞர்களுக்கு, படிப்புடன் தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளதால், பட்டம் பெற்று வெளிவரும்போது அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. வேலைக்காக அவர்கள் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து, பெரும் விரக்திக்கு உள்ளாகின்றனர். அவர்கள் படித்து முடித்தவுடன் வேலை பெறத் தகுதியானவர்களாவதற்கு, உயர்கல்வி நிலையங்களில் தொழில் பயிற்சி அளிப்பதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் சில குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், அவற்றைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக நமது உயர்கல்வி நிலையங்களிலிருந்து வெளிவரும் பட்டதாரிகள் இருப்பதில்லை என்ற குறைபாடு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதத்தை பெருமளவில் குறைக்க முடியும்.

மேலும், கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களிலும் அமல்படுத்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் உயர்கல்வி கற்க இயலாத இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதுபோன்ற 
ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மூலம்தான்  வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT