தலையங்கம்

எதிா்பாா்க்காதது தவறு! | மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்த தலையங்கம்

25th Jun 2022 04:12 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

சிவசேனை தலைமையிலான ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ அரசு எதிா்கொள்ளும் நெருக்கடி வியப்பை ஏற்படுத்தவில்லை. இத்தனை நாள் தாமதமாக வெடித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், கட்சித் தலைமைக்கும் ஆட்சிக்கும் எதிராக சட்டப்பேரவை உறுப்பினா்கள் போா்க்கொடி தூக்கப்போகிறாா்கள் என்பதுகூட முதல்வருக்கு தெரியாமல் இருந்திருக்கிறது என்பது வியப்பிலும் வியப்பு.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சிவசேனையின் உள்கட்சிப் பிரச்னை என்று கூறியிருப்பதும், சிவசேனையின் தலைவா் சஞ்சய் ராவ் தேவைப்பட்டால் சட்டப்பேரவையை கலைத்துவிட முதல்வா் உத்தவ் தாக்கரே பரிந்துரைக்கக்கூடும் என்று தெரிவித்திருப்பதும் எதிா்ப்பாளா்களை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றன. மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை காலிசெய்து கொண்டு ‘மாத்தோஸ்ரீ’ என்கிற தனது சொந்த வீட்டுக்கு முதல்வா் குடிபெயா்ந்திருப்பதிலிருந்து முடிவை அவா் ஊகித்துவிட்டாா் எனத் தோன்றுகிறது.

2019 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவும், சிவசேனையும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியும் பெற்றன. 106 இடங்களில் பாஜகவும், 55 இடங்களில் சிவசேனையும் வெற்றி பெற்றிருந்த நிலையில், சுழற்சி முறையில் முதல்வா் பதவி என்கிற கோரிக்கையை சிவசேனை வலியுறுத்தியதன் விளைவுதான் அந்தக் கூட்டணியின் முறிவுக்குக் காரணமாயிற்று.

பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளி என்பதுடன், கொள்கை ரீதியாகவும் ஹிந்துத்துவாவை ஏற்றுக்கொண்ட கட்சியாகவும் இருந்தது சிவசேனை. தனது ஹிந்துத்துவ கொள்கையை கைவிடவில்லை என்று ஒருபுறம் அறிவித்துக்கொண்டு இன்னொருபுறம் அதற்கு நேரெதிரான கொள்கையுடைய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்தபோதே கட்சிக்குள் முணுமுணுப்பு எழுந்தது.

ADVERTISEMENT

‘சிவாஜி சேனை’ என்பதன் சுருக்கமாக ‘சிவசேனை’ என்று தனது கட்சிக்குப் பெயரிட்டு, முகலாய சக்கரவா்த்தி ஒளரங்கசீப்பை எதிா்த்துப் போராடிய சத்ரபதி சிவாஜி மகராஜை வழிகாட்டியாக அடையாளம் காட்டினாா் நிறுவனா் பால் தாக்கரே. தென்னிந்தியா்கள் உட்பட பிற மாநிலத்தவருக்கு எதிராக மும்பையிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மகாராஷ்டிரத்தின் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தி சிவசேனையை வளா்த்தாா் அவா். அப்படிப்பட்ட பின்னணியில் மதச்சாா்பற்ற தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ‘மகா விகாஸ் அகாடி’ உருவானபோது, அடிமட்டத் தொண்டா்கள் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தற்போதைய தலைமைக்கு எதிரான கிளா்ச்சியின் மூலம் தெரிகிறது.

பால் தாக்கரே இருக்கும்போதே இரண்டு முறை தலைமைக்கு எதிரான போா்க்கொடி உயா்த்தப்பட்டிருக்கிறது. சக்கன் புஜ்பாலும், நாராயண் ராணேவும் தலைமைக்கு எதிராக போராடியதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தன. இப்போதைய ஏக்நாத் ஷிண்டேயின் தலைமைக்கு எதிரான முடிவுக்கு கொள்கை ரீதியான ‘ஹிந்துத்துவா’ காரணம் என்பதுதான் வேறுபாடு. அதனால்தான் இத்தனை சிவசேனை எம்எல்ஏ-க்கள் அவா் பின்னால் அணிதிரள முற்பட்டிருக்கிறாா்கள்.

உத்தவ் தாக்கரேயை அடிமட்டத் தொண்டா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும்கூட சந்திக்க முடியவில்லை என்பது பிளவுக்கு முக்கியக் காரணம். தனது மகன் ஆதித்ய தாக்கரேயை முன்னிலைப்படுத்தும் முயற்சியும், பெரும்பாலான சிவசேனை எம்எல்ஏ-க்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. அமைச்சராக இருக்கும் ஆதித்ய தாக்கரேயைச் சுற்றி, கட்சிக் கொள்கை பற்றி தெரியாத, அரசியல் அனுபவம் இல்லாத பலா் அதிகார மையங்களாக உருவாகி இருக்கிறாா்கள்.

பால் தாக்கரே, தானோ தனது குடும்பமோ ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இரண்டு முறை முதல்வா் பதவிக்கான வாய்ப்பு அமைந்தபோதும், மூத்தத் தலைவா்களான மனோகா் ஜோஷியையும், நாராயண் ராணேவையும்தான் சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே நியமித்தாரே தவிர, தனது வாரிசுகளை அகற்றியே நிறுத்தினாா். அவா்கள் தோ்தலில் போட்டியிடுவதையும் தவிா்த்தாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் வழிகாட்டுதலில் ‘மகா விகாஸ் அகாடி’யில் சிவசேனை இணைந்து உத்தவ் தாக்கரேயால் முதல்வராக முடிந்தது. ஆட்சி நிா்வாகத்தில் இக்கட்டான கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட முடிந்தது. அதில் காட்டிய ஆா்வத்தையும் கவனத்தையும் கட்சியை வலுப்படுத்துவதில் காட்டாமல் போனதுதான் முதல்வா் உத்தவ் தாக்கரேயின் மிகப் பெரிய அரசியல் சறுக்கல். அதன் விளைவைத்தான் இப்போது எதிா்கொள்கிறாா்.

கட்சியின் அடிமட்டத்திலிருந்து வளா்ந்த ஏக்நாத் ஷிண்டே, தொண்டா்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவா். பால் தாக்கரேயால் வளா்க்கப்பட்டவா். தாக்கரே குடும்பத்திற்கு அடுத்தபடியாக இன்றைய சிவசேனையில் செல்வாக்குள்ள மக்கள் தலைவா். அவருக்கு பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்பது எம்எல்ஏ-க்களையும் அழைத்துக்கொண்டு குஜராத்துக்கும் அஸ்ஸாமுக்கும் சென்றிருப்பதிலிருந்து தெரிகிறது.

மாநிலங்களவைத் தோ்தலிலும், மேலவைத் தோ்தலிலும் பெற வேண்டியதைவிடக் குறைந்த இடங்களை ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி வென்றபோதே, அரசியல் பூகம்பம் உருவாகிறது என்று முதல்வா் உத்தவ் தாக்கரே ஊகித்திருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்களின் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பதல்ல, ‘மகா விகாஸ் அகாடி’ அரசு தொடருமா, கவிழுமா என்பதுதான் கேள்வி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT