தலையங்கம்

அதிபருக்குக் கடிவாளம்! | இலங்கையில் அரசமைப்பின் 21-ஆவது சட்டத்திருத்தம் குறித்த தலையங்கம்

23rd Jun 2022 06:09 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து, நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்குவதற்கு வகை செய்யும் அரசமைப்பின் 21-ஆவது சட்டத்திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு. இது போன்று, சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருவதும், அதை ரத்து செய்வதும் இலங்கையில் வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த முறை அந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி விழுமானால் இலங்கைக்கு நல்லது.
 நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களின், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இந்த சட்டத்திருத்தம் இருந்தது. மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த மே 12-ஆம் தேதி புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் 21-ஆவது சட்டத்திருத்தம் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட சீர்திருத்தத்தை வலியுறுத்தி வந்தார். ராஜபட்ச சகோதரர்களுக்கும் ரணில் விக்ரமசிங்கக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகவும் அரசமைப்புச் சட்ட சீர்திருத்தம் இருந்தது.
 தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணாமல் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவரக் கூடாது என ஆளும் ஸ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஒரு பிரிவினர் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி அமைச்சரவை இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.
 இலங்கையில் 1978-ஆம் ஆண்டு முதல் "நிறைவேற்று அதிகாரம்' கொண்ட அதிபர் முறை உள்ளது. நாடாளுமன்றத்தின், பிரதமரின் உத்தரவுகளை ரத்து செய்ய அதிபருக்கு அதிகாரம் உண்டு. கடந்த இருபது ஆண்டுகளில் அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் இரு சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டாலும், அவை திரும்பப் பெறப்பட்டன.
 அதிபரின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் முதல் நடவடிக்கை 2001-இல் சந்திரிகா குமாரதுங்க அதிபராக இருந்தபோது 17-ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரமான அமைப்புகளில் அதிபர் தலையிடுவதை அந்த சட்டத்திருத்தம் தடை செய்தது. காவல் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் போன்ற அமைப்புகளில் அரசமைப்பு கவுன்சிலின் ஒப்புதலுடன் மட்டுமே நியமனங்களை மேற்கொள்ள அதிபருக்கு அதிகாரம் வழங்கியது.
 2010-இல் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபட்சவால் கொண்டுவரப்பட்ட 18-ஆவது சட்டத்திருத்தம், 17-ஆவது சட்டத்திருத்தத்தின் ஷரத்துகளை மாற்றியமைத்தது. அதன்படி, சுதந்திரமான ஆணையங்கள் அதிபருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவை. மேலும், ஒருவர் இருமுறை மட்டுமே அதிபராக இருக்கலாம் என்கிற விதிமுறையையும் 18-ஆவது சட்டத்திருத்தம் ரத்து செய்தது.
 19-ஆவது சட்டத்திருத்தம் 2015-இல் அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறீசேனா அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் அதிபரின் அதிகாரங்களை மீண்டும் குறைத்தது. இப்போதைய பிரதமர் விக்ரமசிங்க அந்த 19-ஆவது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட முக்கியக் காரணமாக இருந்தார். அதிபர் நினைத்தால் பிரதமரை பதவியிலிருந்து நீக்க முடியும் என்கிற அதிகாரத்தை 19-ஆவது சட்டத்திருத்தம் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும், அதிபரின் பதவிக் கால வரம்புகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது.
 அதிபராக கோத்தபயவும், பிரதமராக மகிந்தவும் ஆட்சியைக் கைப்பற்றியபோது ராஜபட்ச சகோதரர்களால் 2020 அக்டோபரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-ஆவது சட்டத்திருத்தம் 19-ஆவது சட்டத்திருத்த ஷரத்துகளை அடியோடு புரட்டிப்போட்டது. அரசமைப்பு கவுன்சிலைக் கலைப்பதன் மூலம் அதிபரின் அதிகாரத்தின் மீதான தடையை இந்த சட்டத்திருத்தம் நீக்கியது.
 மூத்த நீதிபதிகள் நியமனம் முழுமையாக அதிபரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. மனித உரிமைகள் ஆணையம், தேர்தல் ஆணையம், காவல் ஆணையம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணையம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் அதிபரின் கைகளுக்கு வந்தது.
 இப்போது அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21-ஆவது சட்டத்திருத்த வரைவு மசோதா, மீண்டும் அதிபரின் அதிகாரங்களைக் குறைக்க வழி செய்கிறது. இதன்படி, அமைச்சர்களும், தேசிய கவுன்சிலுடன் அதிபரும் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். சட்டப்பிரிவு 21ஏ, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்கிறது.
 அதிபர் கோத்தபய ராஜபட்ச அமெரிக்கக் குடியுரிமையையும் பெற்றவர் என்பதால், அவரைக் குறிவைத்தே இந்த ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தான் அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்துவிட்டதாக கோத்தபய கூறினார். ஆனால், அதற்குரிய ஆவணத்தை அவர் தாக்கல் செய்யவில்லை.
 அமைச்சரவையில் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள 21-ஆவது சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அதிபர் கோத்தபய இந்த அரசமைப்பு சட்ட சீர்திருத்தங்களுக்கு பிரதமரிடம் ஒப்புதல் அளித்திருப்பதால் அதில் சிக்கல் எழாது எனலாம்.
 இலங்கைக்கு பொருளாதார சீர்திருத்தங்கள் தேவைப்படும் இந்த வேளையில், இந்த அரசமைப்புச் சட்ட சீர்திருத்தங்கள் தேவையா என்றால் தேவைதான். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களின் தன்னிச்சையான போக்கும் ஒரு காரணம் என்பதால், அதற்கு கடிவாளம் போடுவதற்கு இத்தகைய சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT